மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 7 - அட்மிஷன் 2022 ஆரம்பம்!

நாளை என்ன வேலை?
பிரீமியம் ஸ்டோரி
News
நாளை என்ன வேலை?

கல்வியாளர் ரமேஷ் பிரபா

பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் காலேஜ் அட்மிஷன் சீசன் இப்போதே தொடங்கிவிட்டது என்று சொல்லலாம். மெடிக்கல், இன்ஜினீயரிங், அக்ரி, சட்டம் எனப் பல்வேறு தொழிற்படிப்புகளுக்கும் அட்மிஷன் கொஞ்ச காலம் கழித்துதான் தொடங்கும் என்றாலும், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான அட்மிஷன் ஏற்கெனவே களைகட்டத் தொடங்கி விட்டது. பிளஸ் டூ ரிசல்ட் வராமல் அதற்குள்ளேயே அட்மிஷன் எப்படி என்று திகைக்க வேண்டாம்; எப்போதுமே கலை, அறிவியல் கல்லூரிகளில் அட்மிஷன் முதலில் தொடங்கி முதலில் முடிந்துவிடும் என்பதுதான் யதார்த்தம்.

பொறியியல் படிப்பைப் போலவே ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வாக இருப்பது ஆர்ட்ஸ் & சயின்ஸ் எனப்படும் கலை, அறிவியல் கல்லூரிகள். தமிழகம் முழுக்க அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் நிறையவே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 700 தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் ஏராளமானோருக்கு வாய்ப்பளிக்கின்றன.

தமிழ்நாட்டில் பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற பல்வேறு படிப்புகளில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு ஒற்றைச் சாளர முறையில் துறை சார்ந்து ஒரே ஒரு விண்ணப்பம் அனுப்பினால் போதும் என்று நடைமுறை உள்ளது. ஆனால், தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளுக்குத் தனித்தனியாக ஒவ்வொரு கல்லூரிக்கும் விண்ணப்பம் வாங்க வேண்டும். சில கல்லூரிகளில் ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக விண்ணப்பம் வாங்க வேண்டும் என்கிற விஷயம் பலருக்குத் தெரியாது. ஒரு குறிப்பிட்ட கல்லூரியில், குறிப்பிட்ட படிப்பில் சேரத் திட்டமிட்டு அது கிடைக்காத நிலையில் மற்ற கல்லூரிகளுக்கு முயற்சி செய்ய நினைத்தால் அங்கெல்லாம் விண்ணப்பம் வாங்குவதற்கே கடைசி தேதி முடிந்திருக்கும். எனவே கலை, அறிவியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதும், அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதும் அவசியம்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 7 - அட்மிஷன் 2022 ஆரம்பம்!

இந்த விஷயத்தில் தற்போதுள்ள ஒரே ஆறுதல், தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் பலவும் இன்று ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு வந்துவிட்டதால் கல்லூரிகளுக்கு நேரடியாக அலைய வேண்டியதில்லை. பல்வேறு தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளும் ஆன்லைன் விண்ணப்பங்களைத் தரத் தொடங்கிவிட்டன. அந்தந்தக் கல்லூரியின் இணையதளத்தில் அந்த விவரங்கள் இருக்கும். +2 ரிசல்ட் வருவதற்கு முன்பே கூட இப்படி ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு மதிப்பெண் வந்த பிறகு நீங்கள் நிரப்பிக்கொள்ளும் வசதியை அவர்கள் தருகிறார்கள்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை இன்ஜினீயரிங் போலவே ஒரே விண்ணப்பம் மூலம் சிங்கிள் விண்டோ கவுன்சிலிங் முறையில் தமிழ்நாட்டின் 150-க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரிகளுக்கும் அட்மிஷன் நடத்தும் முறையை கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே விண்ணப்பக் கட்டணத்தில் தமிழ்நாட்டின் அத்தனை அரசுக் கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்கலாம் என்பதால் இது அரசுக் கல்லூரிகளில் சேரும் கிராமப்புற, அடித்தட்டு மாணவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். இந்த கவுன்சிலிங் பற்றிய முழு விவரங்களை உரிய நேரத்தில் விரிவாகவே எழுதுவேன்.

சமீப ஆண்டுகளில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு வரவேற்பு சற்று அதிகமாகிக் கொண்டிருக்கிறது. காரணம், இங்கு பல்வேறு பட்டப்படிப்புகளும் வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுவருகின்றன என்பதுதான்.

உதாரணமாக B.Com படிப்பை எடுத்துக் கொள்வோம். எல்லாக் கலை, அறிவியல் கல்லூரிகளிலுமே இன்றளவும் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்து குவிகிற ஒரே படிப்பு B.Com. அது வேலைவாய்ப்புக்கேற்ற படிப்புதான் என்றாலும், அதைப் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகும்போது, போட்டி சற்று கடுமையானதாக மாறிவிடுகிறது. எனவேதான் பல்கலைக்கழகங்களும் வழக்கமான B.Com படிப்போடு வேலைவாய்ப்புக்கேற்ற சிறப்புப் பாடங்களை இணைத்து B.Com(Marketing), B.Com(Banking), B.Com(CA) எனப் பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு B.Com பட்டப் படிப்புகளை உருவாக்கியுள்ளன. தவிர, B.Com படிப்பவர்கள் அதோடு நிறுத்திக்கொள்ளாமல் கூடவே CA, CMA, ACS போன்றவற்றிலும் ஆர்வம் காட்டினால் அவர்களுடைய எதிர்காலம் இன்னும் சிறப்பாக அமையும்.

கலை, அறிவியல் கல்லூரிகளில் எல்லாக் காலங்களிலுமே நிலையான டிமாண்ட் இருந்து வருகிற இன்னொரு படிப்பு BBA. நம் நாட்டில் MBA படிப்பதற்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடிப்பதே கல்வித் தகுதி என்றாலும், எதிர்காலத்தில் MBAதான் படிக்கப்போகிறோம் என்று பள்ளிப் பருவத்திலேயே தெளிவாக முடிவு எடுத்துவிட்டவர்கள் படிக்கிற படிப்புதான் BBA. மற்ற பட்டங்களை ஒப்பிடும்போது இதில் Academic Pressure குறைவு என்பதும் பலர் BBA தேர்வு செய்யக் காரணம்.

கலை அறிவியல் கல்லூரிகளின் இன்னொரு சிறப்பம்சம், பொறியியல் கல்லூரிகளில் உள்ள பல்வேறு பட்டப் பிரிவுகளும் இன்று இங்கு வந்து விட்டன. உதாரணமாக இன்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள B.Tech(Biotechnology) இங்கு B.Sc(Biotechnology) ஆகவும், அங்குள்ள B.E(Computer Science) இங்கு B.Sc(Computer Science), அங்குள்ள B.Tech(IT) இங்கு B.Sc(IT) ஆகவும் உருவெடுத்திருப்பதால் இன்ஜினீயரிங் படிக்க வசதி இல்லாத பல மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் இந்த B.Sc படிப்புகளில் சேரலாம்.

கம்ப்யூட்டர் துறையில் தனித்துவம் வாய்ந்த இன்னொரு படிப்பு, Bachelor of Computer Applications எனப்படும் BCA. இதை முடித்தவர்கள் பட்ட மேற்படிப்பான MCA-வில் சேரலாம். தவிர, இவர்கள் MBA படிப்பிலும் சேரலாம்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, கலை, அறிவியல் கல்லூரிகளின் காலகாலத்து B.Sc. பட்டப் படிப்புகளான Maths, Physics, Chemistry, Biology ஆகியவற்றுக்கும் வரும் காலங்களில் கண்டிப்பாக முக்கியத்துவம் உண்டு. காரணம், அரசாங்கம் கோர் சயின்ஸ் துறைகளில் ஆராய்ச்சிக்கெனக் கணிசமான நிதி ஒதுக்க ஆரம்பித்திருப்பதும், இத்துறைகளில் ஆசிரியர் பணிகளுக்கென நிறைய பேர் தேவைப்படுவதும்தான். மேலும், இதிலுள்ள ஒவ்வொரு பிரிவுமே சிறப்புப் பிரிவுகளாக உருவெடுத்துள்ளன. Physics அடுத்த நிலையில் Nuclear Physics, Astro Physics எனவும், Chemistry வளர்ச்சி அடைந்து Biochemistry, Pharmaceutical Chemistry எனவும், Biology அடுத்த நிலையில் Microbiology, Plant Biology எனவும் பட்டப்படிப்புகளாக உருவெடுத்திருப்பதன் மூலம் அறிவியலின் முக்கியத்துவத்தை நீங்கள் உணரலாம்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 7 - அட்மிஷன் 2022 ஆரம்பம்!

B.Sc (Nutrition&Dietics), B.Sc (Home Science) போன்றவை பெண்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் படிப்புகளில் இன்னும் சில.

சமீப ஆண்டுகளில் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிற இன்னொரு படிப்பு BA (English Literature). இதை முடித்து விளம்பரத்துறை, ஊடத்துறைகளில் வேலைக்குச் செல்லலாம் என்பது ஒருபுறம் இருக்க, இன்று இணையத்தில் எண்ணற்ற தலைப்புகளில் ஏராளமான விஷயங்களை எழுத Content Writing என்கிற துறை வளர்ந்துவருகிறது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் Content Writer என்கிற வேலைக்குச் சேரும் அல்லது வீட்டிலிருந்தபடியே பல நிறுவனங்களுக்கு எழுதும் வாய்ப்பை இந்தப் படிப்பு பெற்றுத் தருகிறது.

தவிர, நிறைய BPO நிறுவனங்களில் இவர்களை விரும்பி வேலைக்கு எடுக்கிறார்கள் என்பதும் புதிய தகவல். இன்ஜினீயர்களை விடுத்து ஆங்கில இலக்கியம் படித்தவர்களை BPO நிறுவனங்கள் தேர்ந்தெடுக்க விசித்திரமான ஒரு காரணம் இருக்கிறது. அதாவது, ஆங்கிலம் பேச வராத இன்ஜினீயர்களை வேலைக்கு எடுத்து ஆங்கிலம் கற்றுத்தரப் படாதபாடு படுவதைவிட, ஆங்கில இலக்கியம் படித்தவர்களை வேலைக்கு எடுத்து அவர்களுக்குச் சின்னச் சின்ன கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களைத் சொல்லித் தருவது சுலபம் என்று முடிவெடுத்ததுதான் காரணம்.

இதேபோன்றுதான் BA தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பும். தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்கிற புலம்பலைத் தாண்டி இந்தப் பட்டப்படிப்போடு இணைந்து கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தையும் சரிவரக் கற்றுக் கொண்டால் பத்திரிகை தொலைக்காட்சி, விளம்பரத்துறை மற்றும் டிஜிட்டல் மீடியா அனைத்திலுமே வேலைவாய்ப்புகள் உண்டு என்பது உண்மை.

இனிவரும் காலங்களை ஈர்க்கப்போகிற இன்னொரு படிப்பு B.Sc(Psychology) என்கிற உளவியல் படிப்பு. இதை முடித்துவிட்டு பட்ட மேற்படிப்பான M.Sc(Psychology) படித்தால், ஒரு மருத்துவர் எப்படி கிளினிக் வைத்து ப்ராக்டீஸ் செய்கிறாரோ அதேபோல் நீங்களும் ஒரு உளவியல் நிபுணராக ப்ராக்டீஸ் செய்யலாம். சமூகத்திலுள்ள உறவுகள் மற்றும் மனநிலை சார்ந்த அத்தனை பிரச்னைகளையும் இன்று தீர்த்து வைப்பவர்கள் இந்த உளவியல் நிபுணர்கள்தான்.

ஒரு காலத்தில் பட்டமேற்படிப்பு அளவில் மட்டுமே புகழ்பெற்று இருந்த MSW படிப்பு, சமீபத்தில் பல கல்லூரிகளில் BSW என்ற பட்டப்படிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்.ஜி.ஓ அமைப்புகளில் வேலை செய்ய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் படிப்பு இது. தவிர, BA(Economics), BA(Corporate Secretaryship), BA(Sociology), BA(Political Science) போன்ற பட்டப்படிப்புகள் கலைப் பிரிவில் என்றுமே மாணவர்கள் விரும்பும் சில படிப்புகள்.

ஊடகத் துறையில் நுழைய ஆசைப்படுபவர்கள் B.Sc(Visual Communication), B.Sc(Electronic Media), B.Sc(Animation&Graphics), BA(Journalism) ஆகிய படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவை தவிர, சுற்றுலாத்துறை, இசை, நடனம் என எண்ணற்ற வித்தியாசமான துறைகளில் பட்டப்படிப்புகள் உள்ளன என்பது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

- படிப்பு தொடரும்...

****

எத்தனை கல்லூரிகள்?

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகம் என்கிற ஒற்றைக் குடையின் கீழ் இயங்கும். ஆனால் கலை, அறிவியல் கல்லூரிகளை நிர்வகிக்க தமிழகத்தில் 10 அரசுப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தப் பத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் எத்தனை என்கிற விவரம் இதோ:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 7 - அட்மிஷன் 2022 ஆரம்பம்!