
விகடன் பிரசுரம் மற்றும் எஸ்.எஸ்.சி மேக்ஸ் அகாடமி
விகடன் பிரசுரம் மற்றும் எஸ்.எஸ்.சி மேக்ஸ் அகாடமி இணைந்து எஸ்.எஸ்.சி தேர்வுக்கான (Staff Selection) இலவசப் பயிற்சி முகாம் ஒன்றை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடத்தியது. தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.சி போட்டித் தேர்விற்கு வழிகாட்ட வழங்கப்படும் முதல் முகாம் இதுவே.

முகாமில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சி.இராஜேந்திரன் ஐ.ஆர்.எஸ் “எஸ்.எஸ்.சி போட்டித்தேர்வின் மூலமாக நிரப்பப்படும் பணியிடங்கள் வேர்கள் போன்றவை. மரம் நன்றாக இருக்கவேண்டுமெனில் வேர்கள் நன்றாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கின்ற மத்திய அரசு காலிப்பணியிடங்களில் தமிழர்களே இல்லை. தமிழகத்தில் உள்ள மத்திய அலுவலகங்களில் இன்னும் பத்து வருடங்களில் தமிழில் பேச முடியாது. எஸ்.எஸ்.சி-யில் வருடத்திற்கு 10,000 பேர் தேர்வாகிறார்கள். பத்தாயிரம் பேரில் 111 பேர் மட்டும்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆங்கில மொழி குறித்து உள்ள தாழ்வு மனப்பான்மை போட்டித்தேர்வுகளில் உங்களைப் பங்கெடுக்க விடாமல் தடுக்கலாம். தினமும் பத்து வார்த்தைகளைப் புதிதாகப் படிக்க வேண்டும். ஆங்கில நாளிதழ்களைத் தொடர்ச்சியாகப் படிப்பதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்தலாம். கடின உழைப்பு இருந்தால் எதுவும் சாதிக்க முடியும்” என்றார்.
முகாமில் பேசிய போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் டாக்டர் சங்கர சரவணன், “குறிப்பிட்ட துறையில் வல்லுநராகப் பத்தாயிரம் மணிநேரம் பயிற்சி செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஆறு மணிநேரம் என்றால் நான்கு ஆண்டுகள். ஆங்கிலம், பொது அறிவு, கணிதம் மூன்றும் எஸ்.எஸ்.சி தேர்வுக்கு மிக முக்கியமானவை” என்றார்.

எஸ்.எஸ்.சி தேர்வு குறித்து சங்கர் கணேஷ் கருப்பையா ஐ.ஆர்.எஸ் பேசும்போது “எஸ்.எஸ்.சி போட்டித் தேர்வையும் டி.என்.பி.எஸ்.சி, பேங்கிங் தேர்வு பேட்டர்னில் கொண்டுவந்தால் நிறைய பேர் தேர்வெழுத வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன்” என்றார்.
எஸ்.எஸ்.சி மேக்ஸ் அகாடமியின் கௌரவ இயக்குநர் எஸ்.எஸ்.சி தேர்வில் இருக்கும் சிக்கலான விஷயங்கள், வெற்றி பெறுவதற்கான வழிகள், பலகட்டத் தேர்வு முறைகள், மனதளவில் தேர்வுக்குத் தயாராவது ஆகியவற்றைப் பற்றி விளக்கிப் பேசினார். தொடர்ந்து, முகாமில் பங்கேற்றவர்களுக்கு மாதிரிப் பயிற்சி வகுப்பும் நடத்தினார். வகுப்பிற்குப் பின் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்வில் பங்கேற்ற ஆர்வலர்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெற்றனர்.
எஸ்.எஸ்.சி தேர்வு தொடர்பான சந்தேகங்களைக் கலந்துகொண்டவர்கள் பதிவு செய்தனர். 2020-ல் வெளியாகும் விகடன் இயர் புத்தகத்தில் ‘எஸ்.எஸ்.சி எக்ஸாம் தெரிந்ததும் தெரியாததும்’ என்ற தலைப்பில் சந்தேகங்களுக்கான விடைகள் வல்லுநர்களின் பதில்களுடன் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.