60 ஆண்டு அயரா உழைப்பு... காலமானார் தொழில்துறை மூத்த பத்திரிகையாளர் எஸ்.விஸ்வநாதன்..!

அஞ்சலி
சென்ற தீபாவளிக்கு இரு தினங்களுக்குமுன் தமிழகத்தின் தொழில் துறையைச் சேர்ந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது அந்தச் செய்தி. ‘தொழில்துறை உலகின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.விஸ்வநாதன் காலமானார்’ என்பதே அந்தச் செய்தி. சென்னையில் இருந்து வெளியாகும் தொழில் துறை பத்திரிகையான ‘The Industrial Economist’ பத்திரிகை யின் நிறுவனர் - ஆசிரியர் எஸ்.விஸ்வநாதன். அவர் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் இரங்கல் செய்தி வெளியிட்டதில் இருந்து, தொழில் துறைக்கு அவர் அளித்த பங்களிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
எல்லோராலும் எஸ்.வி என செல்லமாக அழைக்கப் படும் எஸ்.விஸ்வநாதன் ஒரு கணித ஆசிரியராகத்தான் வாழ்க்கையைத் தொடங்கி னார். 1962-ல் அவர் வாங்கிய சம்பளம் ரூ.486. அதுவே அப்போது பெரிய சம்பளம் தான். ஆனால், அந்த வேலையை விட்டுவிட்டு, கிருஷ்ண ஶ்ரீநிவாஸ் என்கிற கவிஞர் நடத்திவந்த ‘இண்டியன் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற தொழில்துறை பத்திரிகையில் உதவி ஆசிரிய ராக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், அங்கு சில காலமே அவரால் பணியாற்ற முடிந்தது. தனியாக ஒரு பத்திரிகை ஆரம்பிக்கும் முடிவை எடுத்தார் எஸ்.வி.

அந்தச் சமயத்தில், ஏர் ஃபோர்ஸில் ஆபீஸர் வேலைக்காக டெல்லிக்கு நேர்முகத் தேர்வுக்குப் போனார். அரிசி சோறு சாப்பிட்டுப் பழகியவருக்கு கோதுமை சப்பாத்தி சரிப்பட்டு வரவில்லை! ஆபீஸர் வேலை சரிவராது என்று நினைத்த எஸ்.வி, டெல்லியில் பத்திரிகை களைப் பதிவு செய்யும் அலுவலகத்துக்குச் சென்றார்.
‘டிரான்ஸ்ஃபோர்ட் டைம்ஸ்’ என்கிற பெயரில் தனது பத்திரிகையின் பெயரைப் பதிவு செய்ய, அந்தப் பெயரில் ஏற்கெனவே ஒருவர் பதிவு செய்திருந்தார். உடனே, ‘மொபைல் டைம்ஸ்’ என்ற பெயரில் பதிவு செய்துவிட்டு, சென்னைக்கு வந்து பத்திரிகையை நடத்த ஆரம்பித்துவிட்டார்.
இரண்டு மாதங்கள் கழித்து ரயில்வேயில் ரூ.75 தந்து டிக்கெட் வாங்கினார். இந்த டிக்கெட் மூலம் 45 நாள் களுக்கு இந்தியா முழுக்க ரயிலில் பயணம் செய்யலாம். டெல்லி, மும்பை, கல்கத்தா என இந்த எல்லா நகரங்களில் இருக்கும் தொழிற்சாலை களுக்கு நேரடியாக விசிட் செய்து, பல்வேறு நிறுவனங் களின் தொழிலதிபர்களைப் பேட்டி கண்டார். அந்தத் தொழிலதிபர்கள் சிலர் அப்போது ரூ.100 கோடிக்குள்தான் வியாபாரம் செய்தனர். ஆனால், இன்றைக்கோ லட்சம் கோடிகள் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்.
1964-ல் தனது பத்திரிகைக்காக விளம்பரம் கேட்டு டெல்லிக்குப் போனார் எஸ்.வி. அமெரிக்கன் வேர்ல்ட் ஏர்வேஸ் நிறுவனத்தில் நுழைந்து விளம்பரம் கேட்டார். அவர்கள் விளம்பரம் தருகிற மாதிரி இல்லை. ‘‘ஓகே, உங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தை 12 இதழ்களில் வெளியிடுகிறேன். ஐரோப்பாவுக்கு என்னை விமானத்தில் அழைத்துச் சென்று வருகிறீர் களா?’’ என்று கேட்க, அந்த டீலுக்கு உடனே ஒப்புதல் தந்தனர் அந்த விமான நிறுவன அதிகாரிகள். பிற்பாடு இதே டீலைக் காட்டி, பல்வேறு விமான நிறுவனங் களின் விளம்பரத்தை வாங்கினார் எஸ்.வி.
ஆனாலும், 1967-ம் ஆண்டுதான் அவர் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு கார் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு நேரில் சென்று பார்த்தார். ஐரோப்பியர் அல்லாத ஒருவர் அந்தத் தொழிற் சாலைகளில் செய்தி சேகரிக்க வந்திருப்பதைப் பார்த்து அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்தவர் களுக்கு ஆச்சர்யம். ஜெர்மனியில் வோல்ஸ்வேகன் கார் தொழிற்சாலையில் தினமும் 6,200 கார் தயாரிக்கப்படுவதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். வெளிநாட்டில் உள்ள தொழிற்சாலைகள் செயல் படுவதைப் பார்த்த அவர், நம் நாடு தொழில் துறையில் இன்னும் வளர்ச்சி காண வேண்டிய அவசியத்தைப் பற்றி விளக்கமாகப் பேசவும் எழுதவும் தயாரானார்.
இதற்கேற்ப, 1968-ல் தனது பத்திரிகையின் பெயரை ‘இண்டஸ்ட்ரியல் எக்கானமிஸ்ட்’ என்று பெயர் மாற்றம் செய்தார். பி.ஹெச்.இ.எல், மெட்ராஸ் ரிஃபைனரீஸ் உட்பட பல பொதுத்துறை நிறுவனங் களைப் பற்றி அவர் விளக்கமாக எழுத, பத்திரிகையின் விற்பனை உயர்ந்தது. காஷ்மீர் தவிர, அனைத்து மாநிலங்களின் தொழில்துறை பற்றி அவர் எழுதியதன் காரணமாக பல மாநிலங்களின் முதல்வர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசுவதற்கு எஸ்.வி-க்கு வாய்ப்பு கிடைத்தது.
1973-ல் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிவந்தது. இந்த நிறுவனம் லாபம் அடைய வேண்டுமெனில், நிலக்கரி எடுக்கும் திறனை அதிகரிக்க வேண்டும் என அப்போது மத்திய அமைச்ச ராக இருந்த மோகன் குமார மங்கலத்திடம் எடுத்துச் சொல்ல, எஸ்.வி தந்த யோசனையை வெகுவாகப் பாராட்டினார் அமைச்சர். டெல்லிக்குப் போய் ஆக்ஷன் எடுக்கிறேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பியவர், நடுவழியில் விமான விபத்தில் இறந்தார். என்றாலும், அடுத்து வந்த அமைச்சர் எஸ்.வி-யின் யோசனையை நடைமுறைப்படுத்தினார்.
1973-ம் ஆண்டு முதல் டெல்லியில் பொருளாதாரப் பத்திரிகைகளுக்கான ஆசிரியர்களின் மாநாடு நடக்கத் தொடங்கியது. (2016-க்குப் பிறகு இந்த மாநாடு நடப்பதில்லை) 1973 முதல் இந்த மாநாட்டில் எஸ்.வி, தொடர்ந்து 44 ஆண்டுகள் கலந்துகொண்டது மிகப் பெரிய சாதனைதான். இந்த 44 ஆண்டுகளில் அவர் பல நிதி அமைச்சர்களையும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்திருக்கிறார். அந்த மாநாடுகளில் நடக்கும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தொழில்துறை வளர்ச்சி தொடர்பாக பல கேள்விகளைக் கேட்பார். குறிப்பாக, தென் இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்க வேண்டும் என்பதில் அக்கறையோடு பேசுவார்.
ஒருமுறை இந்தப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு, ஐ.என்.எஸ் கெஸ்ட் ஹவுஸ் விடுதியை நோக்கி செல்ல வெளியே நடந்துவந்தார். அவர்முன் திடீரென ஒரு கார் வந்து நின்றது. ‘‘எஸ்.வி, எங்கே போறீங்க?’’ - கேள்வி கேட்டவர், முன்னாள் நிதியமைச்சர், பிரதமர் மன்மோகன் சிங். எஸ்.வி பதில் சொல்ல, ‘‘நான் காங்கிரஸ் கட்சி அலுவலகம் செல்கிறேன். வாங்க, நீங்கள் தங்கும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன்’’ என்று அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்.

பிறகு, இன்னொரு முறை நடந்த மாநாட்டில், நிதி அமைச்சராகவும் வர்த்தகத்துறை அமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரத்திடம் நிறைய கேள்விகள் கேட்டார். அவர் கேட்ட கேள்விகள் ப.சிதம்பரத்தை விமர்சிப்பதாக இருந்தன. ஆனால், சிதம்பரம் நிதானமாக பதில் சொல்ல, மீட்டிங் முடிந்த பிறகு அவருடன் சகஜமாகப் பேசினார் எஸ்.வி. ‘‘அதுதான்எஸ்.வி; அவருக்கு கருத்து உண்டு. கட்சி இல்லை’’ என்று சொன்னாராம் ப.சிதம்பரம்.
ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகள் மட்டுமல்ல, இந்தியாவின் முக்கியமான தொழில் நிறுவனங்களை நடத்திய தலைவர்கள் அனைவருடனும் அவருக்குப் பழக்கம். டி.சி.எஸ் நிறுவனத்தின் எஃப்.சி.கோஹ்லி, அடுத்து வந்த ராமதுரை, அதற்கடுத்து வந்த என்.சந்திரசேகரன் (இன்றைய டாடாவின் தலைவர்), டாடாவில் இயக்குநரான கோபால கிருஷ்ணன் என அவரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை.
தனது பத்திரிகைக்காக அவர் செய்தி சேகரிக்க செல் லாத நாள் இல்லை. கடந்த 15-ம் தேதி அன்று மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் வளாகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, தனது கருத்துகளை சொல்லிக்கொண் டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். அடுத்த ஒரு வார காலம் கோமா நிலையில் இருந்தவர், தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்குமுன் காலமானார்.
60 ஆண்டுகள் தொழில் துறையில் நிகழ்ந்த மாற்றத்தின் நேரடியாக சாட்சியாக நின்று கவனித்த அவர், தனது வாழ்க்கை வரலாற்றை எழுதா மலே போய்விட்டார். அவர் எழுதிய 2000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளே அவர் வாழ்க்கை வரலாறு. அவர் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் காலத்தின் சாட்சி என்று சொன்னால், அது மிகையில்லை!