சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஐ.டி வேலையிழப்பு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஐ.டி வேலையிழப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ.டி வேலையிழப்பு

செலவைக் குறைக்கவும் இழப்பை ஈடுகட்டவுமே ஆட்குறைப்பு... தொடங்கியுள்ள பொருளாதார மந்தநிலை எந்தத் திசையில் செல்லும் என்பது தெரியவில்லை. அதை எதிர்கொள்ள இந்த நடவடிக்கையைத் தவிர்க்கவியலாது

``விலையுயர்ந்த தொலைக்காட்சியோ, வாகனமோ, ஃப்ரிட்ஜோ வாங்கும் யோசனை இருக்கிறதா? எதுவானாலும் அந்தத் திட்டத்தைச் சற்று தள்ளிப்போடுங்கள். பணத்தைச் சேமித்து வைக்கவேண்டிய நேரமிது. உலகில் என்ன நடக்கிறது என்பதை உற்றுக் கவனியுங்கள்"

சுமார் 120 பில்லியன் டாலருக்கும் மேலாக சொத்து மதிப்பைக் கொண்டிருக்கும் உலகின் நான்காவது பணக்காரரும், இணைய வணிகச் சந்தையின் முன்னணியில் இருக்கும் அமேசானின் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் பேசிய வார்த்தைகள் இவை. ஜெஃப் இதைக்கூறிய அதேநாளில் தங்கள் நிறுவனத்தின் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாகச் சொன்னது கூகுள். உலகில் பேராதிக்கம் செலுத்தும் மெட்டா, ட்விட்டர் எனப் பல நிறுவனங்கள் கொத்துக் கொத்தாக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்க ஐ.டி துறையில் பற்றியிருக்கும் இந்த ஆட்குறைப்பு நெருப்பு, அடுத்தடுத்து இந்தியப் பெரு நிறுவனங்களிலும் தொற்ற ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக காக்னிசென்ட் இந்தியா நிறுவனம் 6% ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. வொர்க் ப்ரம் ஹோமில் இருந்தபடி வேறொரு நிறுவனத்துக்காகவும் வேலை செய்ததே பணி நீக்கத்துக்கான காரணம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் பொருளாதார மந்த நிலையின் தாக்கத்தை உணரத்தொடங்கியதே காரணம் என்கிறார்கள் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள்.

ஐ.டி வேலையிழப்பு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

திடீர் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஐ.டி துறைக்குப் புதிதல்ல. அதேபோல ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் வேறொரு நிறுவனத்துக்கு மாறுவதும் இயல்பானதுதான். ஆனால், கனவு நிறுவனங்களாகக் கருதப்படும் மெட்டா தொடங்கி அமேசான் வரை பெருநிறுவனங்கள் பலவும் இவ்வளவு பெரிய ஆட்குறைப்பில் ஈடுபடுவது இதுவரை நடக்காத ஒன்று.

‘‘செலவைக் குறைக்கவும் இழப்பை ஈடுகட்டவுமே ஆட்குறைப்பு... தொடங்கியுள்ள பொருளாதார மந்தநிலை எந்தத் திசையில் செல்லும் என்பது தெரியவில்லை. அதை எதிர்கொள்ள இந்த நடவடிக்கையைத் தவிர்க்கவியலாது’’ என்று அந்த நிறுவனங்கள் காரணம் சொல்கின்றன. ரஷ்ய-உக்ரைன் போரால் பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரப் பின்னடவைச் சந்தித்திருக்கின்றன. ஆனால் மென்பொருள் துறை தாக்குப்பிடித்து நின்றது. திடீரென அத்துறையின் சர்வதேசத் தலைமையிடமெனச் சொல்லப்படும் சிலிக்கான் வேலியில், அதுவும் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியுள்ள நிறுவனங்களில் ஆட்குறைப்பு நிகழ்ந்திருப்பது பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

மற்ற துறைகளைவிட மென்பொருள் துறையில் நிலையற்ற தன்மை மிக அதிகம். கிடைக்கும் புராஜெக்ட்கள் மூலமே அங்கு அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. போதிய அளவில் புராஜெக்ட்கள் வராதபோது அதை ஈடுகட்ட நிறுவனங்கள் முதலில் கை வைப்பது மனிதவளத்தின் மீதுதான். லட்சங்களில் சம்பளம் பெறும் ஓர் ஊழியர் பெஞ்சில் அமர வைக்கப்படுவதும், ஏற்கெனவே பெஞ்சில் உள்ளவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவதும் இதன் காரணமாகத்தான். ஐ.டி துறையில் பணிபுரியும் ஒவ்வொருவரும் இதை அறிவர்.

கொரோனாவால் உலகமே வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க, புத்தியல்பு உலகம் இணையம் வழி இயங்கத் தொடங்கியது. கம்ப்யூட்டர் நுழைந்திருக்காத ஊர்களுக்குள்கூட இணையம் நுழைந்தது. இதனால் ஏற்பட்ட பெருந்தேவையைப் பூர்த்திசெய்யவும் சந்தையைக் கைப்பற்றவும் நிறுவனங்கள் பலவும் போட்டி போட்டுக்கொண்டு ஆட்களை எடுக்கத் தொடங்கின. இந்தப்போட்டியால் அனுபவஸ்தர்களுக்குப் பல மடங்கு சம்பளம் உயர்த்தித் தரப்பட்டதோடு தொடக்கக்கால ஊதிய விகிதமும் அதிகரித்தது. ஆனால் கொரோனா கால வளர்ச்சி நெடுநாள்கள் நீடிக்கவில்லை. பெறுநிறுவனங்கள் பலவும் மனிதவள மிகுதியால் திண்டாடத் தொடங்கின. சேவை நிறுவனங்களைவிட உற்பத்தி நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. அதை ஈடுகட்டவே இப்போது ஆட்குறைப்பு என்ற கசப்பு மருந்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

இவ்வாண்டு நவம்பருக்குள் மட்டும் அமெரிக்க மென்பொருள் துறையைச் சேர்ந்த 73,000-க்கும் அதிகமான ஊழியர்கள் வேலையை இழந்துள்ளார்கள். 7,500 பேர் பணியாற்றிய ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய கையோடு 50% பேரை வீட்டுக்கு அனுப்பினார் புதிய முதலாளி எலான் மஸ்க். இந்தியாவில் பணிபுரிந்த 90% ஊழியர்கள் வேலையிழந்தார்கள்.

சுமார் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது, கூகுளின் தாய் நிறுவனமான Alphabet. பொருளாதார மந்தநிலையால் முதலீட்டாளர்கள் கடும் நெருக்கடி தருவதாலேயே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்று அது தெரிவித்திருக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான Meta-வில் இவ்வாண்டு செப்டம்பர் வரையிலும் 15,344 பேர் புதிதாக இணைந்திருந்தார்கள். அதன்மூலம் 87,000 பேர் பணிபுரியும் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அது வளர்ச்சி பெற்றது. அந்நிறுவனம் 11,000 பேரைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் நிர்வாக ரீதியாக உள்கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை என்று கூறி 1,000 பேரை கடந்த ஜூலை மாதம் பணிநீக்கம் செய்தது. அதேபோல அமெரிக்காவின் பிரபல நிதி சேவை மென்பொருள் நிறுவனமான Stripe ‘இது மாறுபட்ட பொருளாதாரச் சூழலுக்கான தொடக்கம்' எனக் குறிப்பிட்டு 14% பேரைப் பணிநீக்கம் செய்திருக்கிறது.

இவ்வருடத்தின் மூன்றாவது காலாண்டு முடிவில் அமேசான் நிறுவனம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஒரே இரவில் அதன் பங்குகள் பெரும் வீழ்ச்சியடைந்தன. 2020-க்குப் பிறகு அந்நிறுவன சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியனுக்குக் கீழாக முதன்முறையாக இறங்கியது. இந்தச் சரிவை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கைகளைக் கையில் எடுத்துள்ள அந்நிறுவனம், 10,000 பேரைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்திருக்கிறது.

சிலிக்கான் வேலியில் தொடங்கியுள்ள இந்தப் பதற்றம் இந்தியாவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? ஒருகாலத்தில் மேற்கத்திய நாடுகளின் புராஜெக்ட்களை மட்டுமே நம்பி இந்திய நிறுவனங்கள் செயல்பட்டன. இன்று அந்த நிலை ஓரளவு மாறியுள்ளது. பல நிறுவனங்கள் உலகளாவிய புராஜெக்ட்களுடன் உள்நாட்டு மென்பொருள்களையும் தயாரிக்கின்றன. அதுமாதிரியான நிறுவனங்களுக்குப் பெரிதாக பாதிப்பு இருக்கப்போவதில்லை என்கிறார்கள் நிபுணர்கள். வெளிநாட்டு புராஜெக்ட்களை, குறிப்பாக அமெரிக்காவை நம்பியுள்ள இந்திய நிறுவனங்கள் நிச்சயம் தாக்கத்தை எதிர்கொள்ளும்.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இதனால் பெருஞ்சிக்கலைச் சந்திக்கும் என்கிறார்கள். பெரிய நிறுவனங்களைப் போல புராஜெக்ட்டில் இல்லாத ஊழியர்களை பெஞ்சில் அமர வைக்க அவர்களால் முடியாது. முதலீடு தொடங்கி சந்தை வரை அனைத்தும் சிறிய அளவிலேயே இருப்பதால் ஆட்குறைப்பைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பல நிறுவனங்களில் பணிநீக்க நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

கொரோனா ஊரடங்கில் உருவான திடீர் வேலைவாய்ப்புகளால் ஐ.டி பொறியாளர்கள் பலர் கூடுதல் சம்பளம் தேடி அடிக்கடி நிறுவனங்கள் மாறியதைத் தடுக்கும் விதமாக, இந்திய ஐ.டி நிறுவனங்கள் நோட்டீஸ் பீரியடை 3 மாதங்கள் வரை அதிகப்படுத்தின. ஆட்குறைப்பு செய்துவரும் நிறுவனங்களுக்கு இது சிக்கலாக மாறியிருக்கிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இந்தக் குறிப்பிட்ட காலத்துக்கான சலுகைகள் அனைத்தையும் வழங்குவதாக அமெரிக்க நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. ஆனால், அவை அவர்கள் நாட்டினருக்கு மட்டுமே பொருந்தும். வெளிநாட்டுப் பொறியாளர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நிரந்தர விசா இல்லாமல் H1B விசா வைத்திருப்பவர்கள் 60 நாள்களுக்குள் புதிய வேலை தேட வேண்டிய கூடுதல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

இந்த ஆட்குறைப்பால் நிறுவனங்களுக்கு உடனடி பலன்கள் கிடைக்கலாம். அதேநேரம், பணியில் இருப்போரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள் நிபுணர்கள். நிலைத்தன்மை குறித்த சந்தேகத்தால் பயம், திருப்தியின்மை, அர்ப்பணிப்பின்மை, குறைந்த செயல்திறன் என சோர்வடையலாம். அது நிறுவனத்தின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் என்பது அவர்கள் கருத்து.

“அடுத்த ஆண்டு தீவிர பொருளாதார மந்தநிலையை உலகம் சந்திக்கும் என்று பல்வேறு கணிப்புகள் கூறுகின்றன. இதை எதிர்கொள்ளவும் தங்களைத் தற்காத்துக்கொள்ளவும் நிறுவனங்கள் புதிய திட்டங்களை வகுக்கின்றன. அதன் ஒருபகுதிதான் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை. மறுபுறம், கோவிட் பெருந்தொற்று புதிய தொழில்நுட்பங்களுக்கான வளர்ச்சி வேகத்தைப் பன்மடங்காகியுள்ளது. இந்த மாற்றம் பழைய தொழில்நுட்பங்களுடன் பணியாற்றுபவர்களை தேவையற்றவர்களாக ஆக்குகிறது...’’ என்கிறார் Startup TN எனப்படும் தமிழக அரசின் ஸ்டார்ட்-அப் திட்ட நிர்வாக இயக்குநர் சிவராஜா ராமநாதன்.

‘‘ஒரு தொழில்நுட்பத்துக்கான அதிகபட்ச காலம் 3 வருடங்கள். இவற்றுக்கு ஏற்ற வகையில் ஐ.டி ஊழியர்கள் தங்களைக் கட்டாயம் அப்டேட் செய்துகொண்டேயாக வேண்டும். தற்போது நடக்கும் அனைத்தையும் ஒரு பணி கலாசாரத் திற்கான மாற்றமாகவே பார்க்கிறேன். கோவிட் லாக்-டவுனுக்குப் பின்னே Gig workers எனப்படும் நிறுவனங்கள் சாராத, ப்ரீலான்ஸிங் முறை வேகமாக வளர்ந்துவருகிறது. இவர்களிடம் தங்களுக்கு வேண்டியவற்றை மட்டும் கேட்டு வாங்க முடியும் என்பதால் நிறுவனங்களும் இதையே விரும்புகின்றன...” என்கிறார் அவர்.

இந்திய ஐ.டி துறை ஊழியர்கள் மீண்டும் ஒரு பொருளாதார மந்த நிலையின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்கிறார்கள், தொழிற்சார் நிபுணர்கள்.

‘‘மற்ற துறைகளைவிட ஐ.டி துறை இதன் தீவிரத்தைக் கண்டிப்பாக எதிர்கொள்ளும். பணி நீக்கத்தின் முதற்படி பெஞ்ச். ஊழியர்கள் பெஞ்சில் போடப்படும்போது தங்கள் திறனை மறுபரீசீலனை செய்துகொள்வது அவசியம். நிறுவனத்தின் மற்ற புராஜெக்ட்களுக்கு ஏற்றவாறு தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். சிறிதும் தொடர்பில்லாத புராஜெக்ட்களில்கூட நமக்கான இடம் என்ன என யோசித்து முயலவேண்டும். ஆனாலும் திறமையுள்ள ஊழியர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களைக் கைவிட நிறுவனங்கள் முன்வராது...’’ என்கிறார் மனிதவள மேலாண்மை நிபுணர் ஃபெலிஸிடாஸ் ஜனனி.

நாகப்பன், ஃபெலிஸிடாஸ் ஜனனி, சிவராஜா
நாகப்பன், ஃபெலிஸிடாஸ் ஜனனி, சிவராஜா

``ஒவ்வொருமுறை உலகம் பொருளாதார மந்த நிலையைச் சந்திக்கும்போதும் மிகப்பெரும் படிப்பினையைப் பெரு நிறுவனங்கள் கற்றுக்கொள்ளும். அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட துறை பெரும் வளர்ச்சியை எட்டும். இப்போது உலகம் எதிர்கொள்ளவிருக்கும் மந்தநிலையால் அவுட்சோர்சிங் துறை பெரு வளர்ச்சியை எட்டும்’’ என்கிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன்.

‘‘ஊழியர்களை ஆயிரக்கணக்கில் வீட்டுக்கு அனுப்பினால் நிறுவனங்களுக்கு லாபம் உண்டு. ஆனால், செய்ய வேண்டிய வேலைகள் குறையப்போவதில்லை. இந்தத் தருணத்தில் ஒரே வழி அவுட் சோர்சிங்தான். சர்வதேச நிறுவனங்கள் பெரும் பணிநீக்கத்தைக் கையில் எடுக்கும்போது, அவுட்சோர்சிங் சர்வீஸ் துறையில் முன்னணியில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அதன் பலன் கிடைக்கும். 2008-ல் நிகழ்ந்ததுபோல இது ஒரு சுழற்சி. என் பார்வையில், இந்தச் சூழல் இந்தியாவுக்குச் சாதகமாகவே இருக்கும். அப்போது மொத்த உலகமும் சிக்கித் தவித்தபோது இந்தியா 5% - 6% வளர்ச்சியடைந்தது” என்கிறார் நாகப்பன்.

2023, மிகப்பெரும் சவாலான ஆண்டாக இருக்கும் என்பதே உலகளாவிய கணிப்பாக இருக்கிறது. சர்வீஸ், உற்பத்தித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் இந்தச் சூழலைத் தாக்குப்பிடிக்கத் தயாராக வேண்டும். தொழில்நுட்பங்களை உடனுக்குடன் கற்றுத்தேர்வதும், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை வளர்த்துக்கொள்வதும், கூடவே ஜெஃப் பெசோஸ் சொல்வதைப்போல உலகில் நடப்பனவற்றை உற்றுக் கவனிப்பதும்தான் உங்களைக் காப்பாற்றும்!

ஐ.டி வேலையிழப்பு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

சில மாதங்களாகவே இந்திய நிறுவனங்களில் வேலையிழப்புத் தாக்கம் தொடங்கிவிட்டது. பெரிய நிறுவனங்கள் பலவும் நேரடியாக ஆட்குறைப்பு செய்யாவிட்டாலும் ஊழியர்களுக்கு வழங்கிய சிறப்புப்படிகள் (Variable pay), சலுகைகளை நிறுத்திவிட்டன. ஆனால் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்தச்சூழலை தீவிரமாகவே கையாளத் தொடங்கிவிட்டன. 44-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் 15,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்கியுள்ளன.

பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள டாப்-5 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்

ஐ.டி வேலையிழப்பு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

2008-ம் ஆண்டு உலகம் மிகப்பெரும் பொருளாதார மந்தநிலையைச் சந்தித்தது. அமெரிக்க ரியல் எஸ்டேட் துறையில் தொடங்கிய பாதிப்பு அந்நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தையும் புரட்டிப் போட்டது. லட்சக்கணக்கான மக்களின் வீடுகளை வங்கிகள் பறிமுதல் செய்தன. 10% மக்கள் வேலையிழப்பில் திண்டாடினர். மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான லேமன் பிரதர்ஸ் திவாலானதாக அறிவித்தது. இதன் விளைவாக உலகளாவிய நிதிச் சந்தைகள் பாதித்தன. இந்தப் பொருளாதார பெருமந்தத்தால் இந்தியப் பொருளாதாரம் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. 2008 அக்டோபரிலிருந்து 2009 டிசம்பர் வரை ஏற்றுமதி - இறக்குமதியில் 28% வரை குறைந்தது. 2007-ல் 9.8%ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2008-ல் 3.9%ஆக வீழ்ந்தது. ஆனால், அடுத்த ஆண்டே இந்தச் சரிவிலிருந்து மீண்டு, 10.3 %எட்டியது.