
தேர்வாணையம் வெளியிட்ட பதிலில், ``முற்பகலில் நடைபெற்ற தேர்வு, கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வு. அதில் தேர்ச்சி பெற்றால் போதும். மாறாக, மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
‘பல்வேறு குளறுபடிகளுடன் தாமதமாகத் தொடங்கி, பல முறைகேடுகளுடன் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடியிருக்கிறது. விரைவில், மறுதேர்வு நடத்த வேண்டும்” என்று பலதரப்பினரும் கொந்தளித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தகுதித் தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அப்போதே, வினாத்தாளில் பல கேள்விகள் தவறானதாக, பிழையான மொழிபெயர்ப்புடன் இருந்ததாகப் புகார் வாசிக்கப்பட்டது. ஆனால், `எந்தவொரு கேள்வியும் தவறாக அச்சிடப்படவில்லை; ஒவ்வொரு தேர்வின்போதும் இது போன்ற சர்ச்சைகள் எழுவது இயல்புதான்’ என கூலாக பதிலளித்தது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

ஏறத்தாழ 9 லட்சம் பேர் எழுதிய அந்தத் தகுதித் தேர்வில் 55,071 பேர் தேர்ச்சிபெற்றதாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தமிழ்நாடு முழுக்க 186 தேர்வு மையங்களில் நடைபெற்றது. `காலை 9:30 முதல் 12:30 மணி வரை தமிழ் தகுதித்தாள் தேர்வும், மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை முதன்மைத்தேர்வும் நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் தகுதித்தாள் தேர்வு நேரத்திலேயே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாகத் தேர்வர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
தேர்வர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘எங்களுக்கான பதிவு எண்களின் அடிப்படையில் வினாத்தாள் வழங்கப்படவில்லை. அந்தத் தவற்றை தாமதமாகவே உணர்ந்த தேர்வு கண்காணிப்பாளர்கள் வினாத்தாள்களைத் திரும்பப் பெற்று, சரியானபடி வழங்கவே ஒரு மணி நேரம் கடந்துவிட்டது. இதனால் தேர்வு எழுதும் நேரம் வீணானது. இதற்கிடையே, வினாக்கள் வெளியில் கசிந்ததால், பலர் தங்களின் செல்போன்கள் மூலமாக இணையத்தில் விடைகளைத் தேடத் தொடங்கினர். இது பிரச்னை ஆனதால் தேர்வு மையத்தில் பதற்றம் நிலவியது. மேலும், முற்பகல் தேர்வு முடிந்து, அடுத்த தேர்வுக்குத் தயாராகும் இடைவெளி மிகக் குறைவாக இருந்தது. அதிலும் வினாத்தாள்களைப் படிப்பதற்கான நேரம் தரப்படவில்லை” என்றனர் கவலையுடன்.
இதே மாதிரியான பல்வேறு குற்றச்சாட்டுகள் சென்னை, கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம் எனப் பல்வேறு மையங்களிலும் எழுந்திருக்கின்றன. இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம், `மறுதேர்வு நடத்தவேண்டிய அவசியமில்லை’ என்ற கருத்துடன் தன் விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது.
தேர்வாணையம் வெளியிட்ட பதிலில், ``முற்பகலில் நடைபெற்ற தேர்வு, கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வு. அதில் தேர்ச்சி பெற்றால் போதும். மாறாக, மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இருப்பினும், நடைபெற்ற சிரமங்கள் விடைத்தாள்கள் திருத்தும்போது கருத்தில் கொள்ளப்படும். பிரச்னைக்குக் காரணமானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறது.
`கட்டாயத் தமிழ்த் தேர்வை ஏதோ சடங்குபோல மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலட்சியமாக அணுகுவதும், பொறுப்பற்ற தன்மையுடன் பதிலளித்திருப்பதும் வேதனை அளிக்கிறது’ என்று கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தத் தேர்வுகளுக்கான ரிசல்ட்டாவது சீக்கிரம் வருமா பாஸ்!?