மைடியர் ஜீபா

ஜெயசூர்யா

'டியர் ஜீபா... கால்பந்து வீரர் மெஸ்ஸி எந்த நாட்டில் பிறந்தவர்?'

ஏ.தினேஷ், கோயம்புத்தூர்.

'லயனல் ஆண்ட்ரெஸ் மெஸ்ஸி (Lionel Andres Messi) எனப்படும் மெஸ்ஸி, அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோ (Rosario) நகரில், 1987 ஜூன் 24ல் பிறந்தார். எளிமையான குடும்பம். இவரது தந்தை, ஒரு தொழிற்சாலைப் பணியாளர். தாய், சுத்திகரிப்புப் பணியாளர். மெஸ்ஸி, ஐந்து வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் சூரர். 11 வயது ஆகும்போது, இவருக்கு  ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்க ஒரு மாதத்துக்கு சுமார் 900 டாலர் (50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்) செலவாகும். மருத்துவச் செலவுக்கு வசதி இல்லை. உள்ளூர் கிளப் அணிகள் இவரது திறமையைக் கண்டு வியந்தாலும், இவ்வளவு செலவு செய்வதற்குத் தயாராக இல்லை. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா விளையாட்டுத் துறை, மெஸ்ஸிக்கு உதவ முன்வந்தது. அந்த நாட்டின் அணியில் விளையாடியவாறு சிகிச்சை எடுத்துக்கொண்டார். பல்வேறு போராட்டங்களைக் கடந்து, சாதனை படைத்தார். பிறகு, சொந்த நாடான அர்ஜென்டினாவுக்காக விளையாட ஆரம்பித்தார்.  20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் தொடர் நாயகன் விருது (2005) பெற்றார். 21வது வயதில், 2006 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றார். அர்ஜென்டினா அணியில், மிக இளம் வயதில் உலகக்கோப்பைப் போட்டியில் பங்கேற்ற வீரர் இவர்தான். மூன்று முறை உலகின் சிறந்த இளம் வீரர் விருது, ஆண்டின் சிறந்த வீரருக்கான திமிதிகி விருது, (2009) தங்கப் பந்து விருது எனப் பெற்றார். 2008ம் ஆண்டு கோடை ஒலிம்பிக் போட்டியில்... இவரது பங்களிப்பால் அர்ஜென்டினா அணி தங்கப் பதக்கம் வென்றது. காயங்கள், அர்ஜென்டினா அணியுடனான பிரச்னை என இடையிடையே பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்தாலும், கால்பந்து விளையாட்டில் தவிர்க்கவே முடியாத வீரராக இருக்கிறார். 'கால்பந்துக் கடவுள்’ எனப் புகழப்படும் மாரடோனா, 'கால்பந்து விளையாட்டில் எனது வாரிசு’ என்று புகழும் வெற்றி வீரராக வலம் வருகிறார், மெஸ்ஸி.'

'டியர் ஜீபா... உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட கார்ட்டூன் சேனல் எது?'

டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

'நியூயார்க் நகரில் அமைந்துள்ள 'டைம் வார்னர் இன்க்’ (Time Warner Inc) என்ற பொழுதுபோக்கு ஊடக நிறுவனம், 1992 அக்டோபர் 1ல் இந்த 'கார்ட்டூன் நெட்வொர்க் சேனலை’ அமெரிக்காவில் ஒளிபரப்பியது. புகழ்பெற்ற கறுப்பு வாத்து, லூனி டூன்ஸ் (Looney Tunes)  அட்டகாசத்துடன் ஒளிபரப்பு தொடங்கியது. பிறகு, உலகம் முழுவதும் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் விரிவுபடுத்தப்பட்டது. டாம் அண்ட் ஜெர்ரி, ஸ்கூபி டூ, பேட்மேன், பென் 10, ஸ்பேஸ் கோஸ்ட்  (Space Ghost)), யோகி பியர் (Yogi Bear), கார்ஃபீல்டு (Garfield), ஜானி பிராவோ (Johnny Bravo), ட்விட்டி பேர்டு (Twitty Bird) என இவர்கள் ஒளிபரப்பிய எல்லாமே ஹாட் ஹிட். இன்று வரை உலகின் நெம்பர் 1 கார்ட்டூன் சேனலாக இருப்பது இதுதான்.'

'ஜீபா... சர்வதேச ஓசோன் தினம், சுற்றுச்சூழல் தினம் போல நீர் மற்றும் காற்றுக்கும் உள்ளதா?'

மு.இராமஜெயம், உறங்கான்பட்டி.

'இருக்கிறது இராமஜெயம். தண்ணீரின் அவசியம், சிக்கனமாகப் பயன்படுத்துதல், மாசுபடாமல் பாதுகாத்தல் ஆகியவற்றை உணர்த்தும் வகையில், ஜ.நா சபையினால் 1992 மார்ச் 22 ல் 'சர்வதேச தண்ணீர் தினம்’ அறிவிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதேபோல, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ம் தேதி உலகக் காற்று தினம் (World Wind Day) கடைப்பிடிக்கப்படுகிறது. காற்றின் தூய்மை, காற்றாலை சக்தியை முறையாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக இருக்கிறது.'

'ஹலோ ஜீபா... சுவாமி விவேகானந்தர் எதற்காக சிகாகோ சென்றார்?'

டி.சதீஷ்குமார், திருப்பூர்.

'கொலம்பஸ், அமெரிக்காவைக் கண்டுபிடித்து 400 ஆண்டுகள் நிறைந்திருந்தது. அதை முன்னிட்டு, 1893ம் ஆண்டு செப்டம்பர் 11 முதல் 27 வரை, அமெரிக்காவின் சிகாகோ நகரில், 'உலகக் கொலம்பியா கண்காட்சி’ என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலக நாடுகள் அவற்றில் பங்கேற்றன. அதில் ஒரு நிகழ்ச்சி, 'உலக சமயங்களின் பாராளுமன்றம்’ (Parliament of the World’s Religions). ஒவ்வொரு நாட்டின் மதம், ஆன்மிகச் சிறப்புகளை மற்றவர்களும் தெரிந்துகொள்வதற்காக நடந்த மாநாடு. இதில், 23வதாக சுவாமி விவேகானந்தர் இந்து சமயம் பற்றி பேசினார். 'அமெரிக்க சகோதர, சகோதரிகளே’ என்று உரையைத் தொடங்கிய தனது முதல் வரியிலேயே பலத்த கைதட்டல் பெற்றார். காரணம், அதற்கு முன்பு பேசியவர்கள் எல்லோரும் 'கனவான்களே, மதிப்புக்குரியவர்களே’ என்றே ஆரம்பித்தார்கள். இந்த மாநாட்டில், 6 நாட்கள், பல்வேறு கட்டங்களாகப் பேசினார். இவர் சொன்ன 'கிணற்றுத் தவளை’ கதை, அனைவரையும் கவர்ந்தது. நாம் இருக்கும் இடம் மட்டுமே பெரியது என இருந்துவிடாமல், பரந்த உலகில் வலம்வர வேண்டும் என்பதை அழகாகச் சொன்னார். 'பசியால் வாடிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் சென்று, மதப் பிரசாரம் செய்வது அவனைக் கேலி செய்வது போன்றது. எங்கள் நாட்டில் வறுமையால் பலரும் இறந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களோ, அங்கே தேவாலயங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பதில், உணவு கொடுங்கள். அவர்களின் பசியைப் போக்க உதவி கேட்கவும்தான் இங்கு வந்தேன்' என்று தைரியமாகச் சொன்னார். இது, பலரின் மனதை உலுக்கியது. கிறிஸ்துவம், புத்த மதம் போன்றவற்றின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். 'சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு, விண்வெளியைப் போல பரந்ததாக, எல்லா மதங்களின் சிறந்த சாரத்தை உள்ளடக்கியிருந்தது’ என்று பத்திரிகைகள் புகழ்ந்தன. 'இவர் பேசும்போது, மாவீரன் நெப்போலியனைப் பார்ப்பது போல இருந்தது’ என்று வியந்து எழுதினார்கள்.'

'ஹலோ ஜீபா... ஐஸ்க்ரீம் கோன் எதில் செய்யப்படுகிறது?'

அ.யாழினி பர்வதம், சென்னை-78.

'கோதுமை, கம்பு போன்ற தானியங்களைக் கூழாக்கி, அதிலிருந்து உருவாக்கும் மெல்லிய பிஸ்கட், வேஃபர் (Wafer)  எனப்படும். பட்டர் வேஃபர், சாக்லேட் வேஃபர் எனப் பல்வேறு வெரைட்டிகளில் சாப்பிட்டிருப்பாயே... அதுதான் கோன் ஐஸ்க்ரீமுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது, 1904ம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஐஸ்க்ரீமை கப் மூலம் சாப்பிட்டுவிட்டு, கப்பைத் தூக்கி வீசுவது அல்லது சுத்தம் செய்வதற்குப் பதிலாக, அதையும் சாப்பிடும் வகையில் செய்தால் என்ன? என்று யோசித்ததன் பலன் இது.'  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick