முட்டை எங்கே இருந்து வருது

டி.ஆரோன் பிரின்ஸ் காட்ஸன் படங்கள்: பா.அருண்

'ஒரு கிராமத்தை மொத்தமாகத் தூக்கி வந்து இங்கே வெச்சுட்டாங்களோ?’ என்ற சந்தேகத்தோடு, சென்னை, அண்ணாநகரில் இருக்கும் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரிக்குள் நுழைந்தோம்.

உலகக் குடும்பப் பண்ணை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட, 'ஃபார்ம் ஃபெஸ்ட் 2014’ என்ற கண்காட்சி அது.

ஒரு பக்கம் குதிரையின் கனைப்பு, கழுதையின் கத்தல், கோழிகளின் 'கொக்...கொக்’ சத்தம், ஆடு மற்றும் மாடுகளின் அழைப்பு. நெருப்புக்கோழி, முயல்கள் எல்லாம் நம்மைப் பார்த்து, 'குட்மார்னிங்’ சொல்ற மாதிரியே இருந்துச்சு. இன்னொரு பக்கம் மாதிரி கிராமத்து வீடுகள், பல வகையான பூச்செடிகள், மூலிகைப் பொருட்கள், பாரம்பரிய உணவுப் பயிர்ச்  செடிகள். ஒரு வேப்பங்குச்சி கிடைச்சா, பல் துலக்கிக்கிட்டே நடக்கலாம் போல... பக்கா கிராமத்தில் நுழைஞ்ச ஃபீலிங்.

பள்ளியின் முதல்வர் செல்வா ரமணி, 'நகரத்திலேயே பிறந்து வளர்ந்த ஒரு சிறுவனிடமோ, சிறுமியிடமோ, 'அரிசியும் பாலும் எங்கே இருந்து கிடைக்குது?’ எனக் கேட்டீங்கன்னா, 'வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற மளிகைஷாப்ல இருந்து கிடைக்குது’னு சொல்றாங்க. விவசாயம், உழவர்களின் அர்ப்பணிப்பு, கால்நடைகளின் பங்களிப்புப் பற்றி இவங்களுக்குத் தெரியாமலே இருக்கிறது. அது பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கம்' என்றார்.

சாதாரண கோழி முட்டையில் தொடங்கி, ஈமு கோழி முட்டை வரை வரிசையாகப் பார்த்ததும் படு குஷியானார்கள் மாணவ, மாணவிகள். மாதிரி கிராமத்து வீடுகளுக்குள் சுற்றிவந்தார்கள். தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகியவற்றையும் பார்த்து ரசித்தார்கள்.

பாரம்பரிய உணவுகள், இயற்கை விவசாயம், பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றையும் எளிமையாக விளக்கினார்கள்.

அங்கே சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த சில சுட்டிகள், ''நம்முடைய சாப்பாட்டுக்காக, விவசாயிகள் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்றாங்கன்னு இங்கே பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டோம். இனிமே, சாப்பாட்டை வேஸ்ட் பண்ண மாட்டோம்' என்று சொன்னபோது, அந்தக் கண்காட்சியின் வெற்றி தெரிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick