Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அம்மாக்களுக்கு ஒரு ஆப்ஸ்

கு.அஸ்வின்

''என் அம்மாவின் சில மணி நேரத் தவிப்புதான் எனது இந்தக் கண்டுபிடிப்புக்குக் காரணம். அதுதான் என்னை குடியரசுத் தலைவர் கையால் விருது பெற வைத்தது' எனச் சொல்லி, அம்மாவை அன்புடன் அணைத்துக் கொள்கிறார் அர்ஜூன்.

 சென்னை, வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார் அர்ஜூன். ''இந்திய அரசு, ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகள் தினத்தில், பல்வேறு துறைகளில் சாதித்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, ‘National Child Award for Exceptional Achievement’ என்ற விருதை வழங்குகிறது. அதில், கணிப்பொறித் துறைக்காக தமிழகம் சார்பில் இந்த விருதைப் பெற்றேன்' என்றார்.

அர்ஜூனின் அம்மா, அந்த உற்சாகத்தின் ஆரம்பத்தைச் சொன்னார். ''ஒரு மழை நாளில், ஸ்கூல் முடிஞ்சு ரொம்ப நேரம் ஆகியும் அர்ஜூன் வரலையேனு ஸ்கூலுக்கு போன் செஞ்சேன். ஸ்கூல் பஸ் எப்பவோ கிளம்பிடுச்சுனு பதில் சொன்னாங்க. என்ன ஆச்சோனு தவிச்சுப்போயிட்டேன். டிராஃபிக் ஜாம் ஆனதால ரொம்ப லேட்டா வந்தான். என்னோட பதற்றத்தைச் சொன்னதும், ‘நான் என்ன சின்னக் குழந்தையா?’னு சிரிச்சான். உங்களுக்கு எத்தனை வயசு ஆனாலும் எல்லா அம்மாக்களும் இப்படித்தான் பதறுவோம்னு சொன்னேன்' என்றார்.

''இனி எந்த ஒரு அம்மாவும் இப்படி பதறக் கூடாது. அதுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அப்போதான், MIT (The Massachusetts Institute of Technology) சில மென்கருவிகளைப் பரிந்துரைத்து, அதன் மூலம் புதிய அப்ளிகேஷனைக் கண்டுபிடிக்கும் போட்டியை அறிவிச்சாங்க. Ez School Bus Locator  என்ற பெயரில் ஒரு அப்ளிகேஷனை உருவாக்கினேன்' என்கிறார் அர்ஜூன்.

இந்த அப்ளிகேஷனை பெற்றோரும், பள்ளி வாகனத்தில் இருக்கும் ஒருவரும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். வாகனத்தில் ஏறும்போது, ஆண்ட்ராய்டு போன் மூலம், மாணவரின் அடையாள அட்டையில் இருக்கும் க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்யப்படும். பெற்றோரின் போனுக்கு ஜி.பி.எஸ் (Global Positioning System)  மூலம் தகவல் சென்று, வாகனம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் காட்டும்.

''இதுக்குதான் எம்.ஐ.டியின் சிறந்த அப்ளிகேஷனுக்கான முதல் பரிசு கிடைச்சது. அதற்குப் பிறகு நடந்ததுதான் மறக்க முடியாதது. பள்ளிப் பேருந்து ஓட்டையில் தவறி விழுந்து இறந்துபோன சிறுமி ஸ்ருதியின் அம்மா, இந்த அப்ளிகேஷனைக் கண்டுபிடிச்சதுக்காக என்னைப் பாராட்டி, ஒரு பரிசும் கொடுத்தாங்க. ரொம்பவும் நெகிழ்ந்துபோனேன்' என்ற அர்ஜூன் குரலில் பரவசம்.

சின்ன வயதிலிருந்தே கணிப்பொறி மீது அர்ஜூனுக்கு ஆர்வம் அதிகம். ''அப்போ, என் உயரம் ரொம்பக் குறைவா இருக்கும். கீ போர்டு கூட எட்டாது. நாற்காலியில் தலையணைகளை அடுக்கி, அதன் மேல் உட்கார்ந்து கம்ப்யூட்டரை இயக்குவேன். தினமும்  ஒரு மணி நேரமாவது கம்ப்யூட்டர் முன் செலவிடுவேன். புதியதாக சந்தைக்கு வரும் அப்ளிகேஷன், சாஃப்ட்வேர்கள் எப்படி இயங்குது எனத் தேடித் தேடிப் படிப்பேன்' என்கிறார் அர்ஜூன்.

எம்.ஐ.டி. நிறுவனம், அவர்கள் கண்டுபிடித்த அப்ளிகேஷனில் என்ன பிழைகள் இருக்கின்றன என்று கண்டறியும் போட்டி நடத்தியது. அதிலும் முதல் பரிசு பெற்றிருக்கிறார் அர்ஜூன்.  

அடுத்து, பெண்களின் பாதுகாப்புக்காக isafe guard என்ற அப்ளிகேஷனைக் கண்டுபிடித்திருக்கிறார். ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனான இதை, மொபைலில் பதிவிறக்கிக்கொண்டு, அந்த அப்ளிகேஷனில் இருக்கும் iRobot  பட்டனைத் தட்டினால், இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இந்த அப்ளிகேஷன் உபயோகிப்பவர்களுக்கு ஜி.எஸ்.எம் மூலம், 'ஒரு பெண் பிரச்னையில் இருக்கிறாள்’ என்று தகவல் சென்றுவிடும். இதன் மூலமும் சம்பந்தபட்ட பெண்ணைக் காப்பாற்றலாம்.

''இப்போ, iRobot என்ற அப்ளிகேஷனை உருவாக்கும் முயற்சியில் இருக்கேன். பொதுவாக, ரோபோக்களை உருவாக்க நினைப்பவர்கள், அதற்குத் தேவையான பொருட்களை வாங்கி, குறிப்பிட்ட செயல்பாட்டுக்கான ‘புரோகிராம் கோடு’ எழுதி, அதனைக் கட்டுப்படுத்துவார்கள். ஆனால், இந்த iRobot அப்ளிகேஷன் மூலம் எந்த புரோகிராம் கோடும் இல்லாமல் ப்ளூடூத் மூலமே இயந்திரங்களை இயக்கலாம். 'லேட்ரல் லாஜிக்’ என்ற பெயரில் சின்னதா ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தை ஆரம்பிச்சிருக்கேன். ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் மாதிரி இதைப் பெரிய நிறுவனமா மாத்தணும்' என  அசரவைக்கிறார் அர்ஜூன்.

 படங்கள்: கு.பாலசந்தர் 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ரஞ்சித் ரகசியம்
திருநங்கைகளுக்கு ஒளி தருவோம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close