ஈஸியா செய்யலாம் யோகா !

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பிரேமா படங்கள் : சொ.பாலசுப்ரமணியன் மாடல்: தனிஷ்கா,கே.ஹரீஷ்

சிசுபாலாசனம்

 

கடந்த ஓராண்டாக நிறைய ஆசனங்களைக் கற்றுக்கொண்டீர்கள். நிறைவாக, இரண்டு ஆசனங்களைச் சொல்லித்தருகிறார், விஜயா ராமச்சந்திரன்.  பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன், யோகாசனங்களைச் செய்யுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்!

செய்முறை: கால்களை நீட்டி, கைகளைத் தொடைகளின் மேல் வைத்து, முதுகுத் தண்டுவடத்தை நேராகவைத்து அமரவும்.

பிறகு, வலது காலை மடக்கி, வலது கையால் தூக்கிய காலை, கீழே தாங்கிப் பிடிக்கவும். உங்கள் வலது பாதம், இடது கை முழங்கையை தொட்டபடி இருக்கும். இடது கையை , வலது கையோடு கோத்துப் பிடிக்கவும்.

 இந்த நிலை, ஒரு குழந்தையை மடியில் வைத்திருப்பது போல இருக்கும். இதே நிலையில் 10 எண்ணிக்கை வரை இருக்கவும். இரு கைகளாலும் குழந்தையைத் தாலாட்டுவது போல காலை லேசாக (வலம் இடமாக) ஆட்டலாம்.

பிறகு, மெதுவாக வலது காலை இறக்கி, பழையபடி நீட்டவும். பிறகு, இடது காலை மடக்கிவைத்து, இடது கையைக் கீழே கொண்டுவந்து, வலது கையோடு கோத்துப் பிடிக்கவும்.

இந்த நிலையில் 10 எண்ணிக்கை வரை செய்து, பின் கால்களை மெதுவாகக் கீழே வைத்து, சீரான மூச்சு விடவும்.
இரு கால்களுக்கும் 5 சுற்றுகள் செய்யவும்.

பலன்கள்:  முதுகுத் தண்டுவடம் வலுப்பெறும்.

கால்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும்.

தசைகள் பலம் பெறும். கைகள், தோள்பட்டைக்கு இது நல்ல பயிற்சி.

உட்கட்டாசனம்

 

நாற்காலியில் உட்காருவது போல கீழே உட்கார்ந்து எழுவதுதான் உட்கட்டாசனம்.

செய்முறை:

விரிப்பின் மீது இரு பாதங்களையும் ஒன்று சேர்த்துவைத்து நிற்கவும்.

கைகளைப் பக்கவாட்டில் கொண்டுவந்து தலைக்கு மேல் வணங்குவது போல நமஸ்கார முத்திரை பிடித்து, முட்டி வளைக்காமல் காதுகளை ஒட்டிவைக்கவும்.

குதிகாலை உயர்த்தாமல், அப்படியே ஒரு நாற்காலியில் உட்கார்வது போல அமரவும். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். குனியவும் கூடாது.

அப்படியே 5 முதல் 10 எண்ணிக்கை வரை இருந்து, கைகளைப் பக்கவாட்டில் பிரித்து, மெதுவாக எழவும். இப்படியே 5 சுற்றுகள் செய்யவும்.

குறிப்பு: கைகளை மேலே தூக்கச் சிரமமாக இருந்தால், முன்புறமாக நீட்டியும் அமரலாம். அதேபோல, கீழே முழு அளவு அமர முடியவில்லை எனில், நாற்காலியில் உட்கார்வது போல பாதி நிலையில் அமரலாம்.

பலன்கள்:

சிறுவர்களுக்கு, தற்போதைய உணவுப் பழக்கம் சரியாக இல்லாததால், வயிறு தொடர்பான பிரச்னைகளும் உடல் பருமனும் ஏற்படுகின்றன. இந்த ஆசனம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது.

 ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆசனம் இது.
தோள்பட்டை, கால்களுக்கு நல்ல வலிமை தரும்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick