முதல் புள்ளியாக நாம் இருப்போம் !

கு.ஆனந்தராஜ் படங்கள் : அ.நவின்ராஜ்

‘‘எந்த ஒரு நல்ல விஷயத்துக்கும் ஆரம்பப் புள்ளி ஒன்று வேண்டும். அந்தப் புள்ளியைப் பார்த்து மற்றவர்களும் இணைய அது... அழகான கோலமாக மாறும். அந்த ஆரம்பப் புள்ளியாக மாணவர்கள் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்கிறார் மகேஷ் துளசி. ‘போதி’ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி, மகேஷ் துளசி.

கல்வி நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு மற்றும் அவற்றுக்கான ஆலோசனைகளை அளித்துவரும் நிறுவனம். ஒவ்வோர் ஆண்டும் பொது மக்களிடையே விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இந்த ஆண்டு, தாராபுரம் கலைக்கோவில் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியுடன் இணைந்து, ‘சங்கமம்’ என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியை நடத்தியது.

‘கொடுத்து மகிழ்வோம்’ மற்றும் ‘சுத்தமான இந்தியா’ எனும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.முதல் நாள், தாராபுரம் பேருந்து நிலையப் பகுதியில், மாணவர்களின் பேரணி நடந்தது. அந்த வழியாக வந்த பள்ளி, கல்லூரி மற்றும் இதர பேருந்து ஓட்டுநர்களிடம், பாதுகாப்பாக வாகனங்களை இயக்கவும் நேரத்தை முறையாகப் பயன்படுத்தவும் வலியுறுத்தி, கடிகாரங்கள் வழங்கப்பட்டன. அடுத்து, பள்ளி வளாகத்தில், பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புஉணர்வு ஓவிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அடுத்த நாள் காலையில், மாணவ,மாணவிகளின்  மாரத்தான் ஓட்டத்தை, மூலனூர் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் மற்றும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். ‘கொடுத்து மகிழ்வோம்’ எனும் உணர்வை வலியுறுத்தி மாணவர்கள், உற்சாகமாக ஓட்டத்தில் பங்கேற்றனர். ஸ்கேட்டிங் ஓட்டமும் நடைபெற்றது.

அடுத்து, ‘தூய்மையான இந்தியா’வை உருவாக்க வலியுறுத்தி, தாராபுரம் பேருந்து நிலையத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை நடத்தினர். இதைப் பார்த்ததும், பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் பலரும் தாங்களாகவே முன்வந்து, அந்தப் பணியில் சேர்ந்துகொண்டனர்.
‘‘பார்த்தீர்களா, இதுதான் ஆரம்பப் புள்ளி, கோலமாக மாறுவது. இந்த நோக்கத்தை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் செயல்படுத்த முயற்சி எடுத்துவருகிறோம்” என்கிறார் மகேஷ் துளசி.

‘‘இது எங்களுக்கு புது அனுபவமா இருந்துச்சு. நாங்க பள்ளிக்கு பஸ்ஸில்தான் வருவோம். அப்படி வர்றப்ப, பஸ் முழுதும் குப்பையா இருக்கும். இனிமே, பஸ்ஸில் ஏறினதும் முதல் வேலையா, எங்க காலடியிலும் பக்கத்திலும் இருக்கிற குப்பையை சுத்தம்செய்வோம். எங்களைப் பார்த்து மற்றவங்களும் செய்தால் சந்தோஷம்” என்கிறார்கள் அந்த மாணவிகள்.

‘‘ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஒண்ணுசேர்ந்து, மாதா மாதம் பணம் கலெக்ட் பண்ணி, ஏதாவது அமைப்புக்கு கொடுக்கலாம்னு இருக்கோம். வருஷத்தில் ஒரு வாரம் மட்டும் இல்லாமல், வருஷம் முழுக்கவே ஜாய் ஆஃப் கிவிங் கொண்டாடினால் நல்லதுதானே” என்கிறார்கள் அந்த மாணவர்கள்.

மாற்றத்துக்கான புள்ளி அழகாக ஆரம்பிக்கிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick