நந்தவனமாக மாறிய பள்ளிச் சுவர் !

க.தனலட்சுமி படங்கள் : கு.பாலசந்தர்

அரசுப் பள்ளிகளின் வெளிச் சுவர்கள், அழுக்குப் படிந்துதான் இருக்க வேண்டுமா? பிஞ்சுக் கைகள் ஒன்றுசேர்ந்தால், அவற்றை அழகாக மாற்ற முடியும் என்று சொல்கிறது ஒரு பள்ளி.

சென்னை, கிண்டியிலிருந்து தாம்பரத்துக்கு ரயிலில் செல்பவர்களுக்கு, வழியில் உள்ள ஏ.ஜே.எஸ்.நிதி பள்ளியின் வண்ணமிகு சுவர்கள் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைகின்றன. மழை நீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, மின்சார சிக்கனம், புகை பிடிப்பதால் ஏற்படும் தீமை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை எனப் பல விஷயங்களை ஓவியங்களாகக் காணலாம். இந்த ஓவியங்களில், சமீபத்தில் செவ்வாயை அடைந்த மங்கள்யான் வரை இருக்கிறது.

பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்ரீனிவாசன், ‘‘இது அரசு நிதி உதவி பெறும் பள்ளி. முன்னாடி, சுவர் முழுக்க அழுக்குப் படிஞ்சுதான் இருந்துச்சு. ‘சுத்தம் பற்றி பாடம் படிக்கிற நம்ம பள்ளிக்கூடமே இப்படி இருக்கே. இதுக்கு என்ன செய்யலாம்?  நீங்களே யோசிச்சுகிட்டு வாங்க’ என மாணவர்களிடம் சொல்லியிருந்தேன். அவங்க எண்ணத்திலும், கை வண்ணத்திலும் உருவானதுதான் இந்த ஓவியங்கள். மிச்ச விஷயத்தை அவங்ககிட்டயே கேளுங்க” என்றார்.

‘‘எங்களுக்கு அறிவைக் கொடுத்து, வருங்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரமா இருக்கும் இடத்தை, சுத்தமாகவும் அழகாகவும் வெச்சுக்க வேண்டியது எங்க பொறுப்புதானே. அதனால், சுவர் முழுக்க பெயின்ட் அடிச்சு, ஓவியங்கள் வரைய முடிவுசெய்தோம். இதுக்கான செலவுக்கு, இங்கே படிச்ச முன்னாள் மாணவர்கள், ஆர்வம் உள்ள தன்னார்வலர்களிடம் நிதி திரட்டினோம்” என்கிறார் 11-ம் வகுப்பு மாணவி.

‘ஓவிய ஆர்வம் உள்ளவர்கள், ஏதாவது ஒரு தலைப்பில் ஓவியங்களை வரைந்து வாருங்கள்’ என்று சொல்லியதும் குவிந்திருக்கிறது ஓவியங்கள்.

‘‘நம்ம பள்ளிக்கூடத்திலேயே இத்தனை ரவிவர்மாக்கள் இருக்கிறப்ப எதுக்கு வெளி ஆட்களை வெச்சு வரையணும். ‘நம்மால் முடியும் நாமே வரைவோம்’னு முடிவுபண்ணினோம்.

இதோ, இந்த ஓவியம் நான் வரைஞ்சது” என்று பெருமையுடன் சுட்டிக்காட்டுகிறான் ஏழாம் வகுப்புப் படிக்கும் ரியாஸ்.

தங்கள் பள்ளியை ஒரு நந்தவனமாக மாற்றிய பெருமிதம் அவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick