அயல் தேசக் கதைகள் - இத்தாலி

தமிழண்ணா ஓவியம் : ஜெயசூர்யா

அந்த வரைபடத்தை பீட்டர் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். எப்படி அது கிடைத்தது?

சாலையில் நடந்துவரும்போது, காற்றில் பறந்துவந்து பீட்டர் முகத்தில் மோதியது அந்தக் காகிதம். ‘யாராவது தவறவிட்டிருக்க வேண்டும்’ என நினைத்த பீட்டர், சுற்று முற்றும் பார்த்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருவரும் இல்லை. பிறகு, அதில் இருந்ததைப் படித்தான். ‘பெரும் புதையல்... ரகசியக் குறிப்புகள்’ என்று இருந்தது. காடு, மலை, சமவெளி, பாலைவனம், கடல் எனப் படங்களுடன் குறிப்புகள் இருந்தன.

பீட்டருக்கு சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது.   ‘இந்தப் புதையல் வேட்டை, ஒரு வீர சாகசமாக அமையப்போகிறது’ என நினைத்தவன், ஒரு தோள் பையில் அத்தியாவசியமான‌ பொருள்களை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

நகரத்தைவிட்டு வெகுதூரம் நடந்து, காட்டுக்குள் போய்விட்டான். இப்போது, வரைபடத்தைப் பார்த்தான். ‘காட்டு ராஜா’ என்ற குறிப்பு இருந்தது. கொஞ்ச தூரம் நடந்ததும், ‘‘கண்டேன் காட்டு ராஜாவை’’ என்று வாய்விட்டுக் கத்தினான்.

அங்கே நின்றிருந்த ஒரு சிங்கத்தின் அருகே சென்றான். ‘‘காட்டு ராஜாவே, நீ பலசாலியாகவும் வீரம் நிறைந்தும் விளங்குகிறாய். நான் ஒரு புதையல் வேட்டைக்காகச் செல்கிறேன். என்னோடு நீயும் வருகிறாயா?’’ என்று கேட்டான்.

சிங்கம், அவனை கம்பீரமாகப் பார்த்தது. ‘‘எனக்கும் காட்டுக்குள் இருந்து சலித்துவிட்டது. உன்னோடு வருகிறேன்” என்று தலையைச் சிலுப்பி, சம்மதம் சொன்னது.

இருவரும் சேர்ந்து நடந்தனர். அடர்த்தியான மரங்கள், விலங்கினங்களின் சத்தம் பீட்டரைக் கொஞ்சம் கலவரப்படுத்தியது. அந்தப் பக்கமாக வந்த சில பயங்கர விலங்குகள் எல்லாம் சிங்கம் அருகே இருந்ததால், பீட்டரை அமைதியாகக் கடந்துசென்றன.

இருவரும் காட்டைக் கடந்து, ஒரு பெரிய மலையை எதிர்கொண்டனர். பீட்டர் வரைபடக் குறிப்பைப் பார்த்தான். ‘கூரிய பார்வை கொண்ட பட்சி’ என்றிருந்தது.  ‘‘கண்டேன் பட்சியை’’ என்றான்.

மரம் ஒன்றில் அமர்ந்திருந்த அந்தக் கழுகைப் பார்த்து, ‘‘கழுகாரே, நானும் சிங்க ராஜாவும் புதையல் வேட்டைக்காகப் போகிறோம். உமது உதவி தேவை. உமது கூரிய பார்வையால், தூரத்தில் வரும் ஆபத்தைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்யலாம். எங்களோடு வர இயலுமா?’’ என்று கேட்டான்.

அந்தக் கழுகு சம்மதம் தெரிவிக்க, மூவருமாக புதையலைத் தேடிக் கிளம்பினர். செங்குத்தான பாறையில் ஏறும்போது சிங்கம் வழுக்கி உருள, நல்லவேளையாக பீட்டர் தடுத்துக் காப்பாற்றினான்.

ஒரு வழியாக மலையின் மறுபக்கத்தை அடைந்தனர். உயரப் பறந்த கழுகு, அவ்வப்போது சூழ்நிலையைப் பற்றி சொல்லி, வழி காட்டியது. மூவரும் சமவெளியை அடைந்ததும், குறிப்பை எடுத்துப் பார்த்தான் பீட்டர்.

‘போர்வை’ என்று இருந்தது. கொஞ்ச தூரத்தில் அந்த செம்மறி ஆடு நின்றுகொண்டிருந்தது. ‘‘செம்மறி ஆடே, எங்களுடைய புதையல் வேட்டையில் நீயும் இணைந்துகொள்கிறாயா? உன்னால் எங்களுக்கு நிச்சயம் பயன் ஏற்படும்’’ என்றான்.

செம்மறி ஆடும் தன் சம்மதத்தைத் தெரிவிக்க, நால்வருமாக புதையல் வேட்டையைத் தொடர்ந்தனர்.

தாழ்நிலப் பகுதியில் போகும்போது, குளிரால் நடுங்கினர். செம்மறி ஆட்டின் அரவணைப்பில் வெதுவெதுப்பாக அந்தக் குளிர்ப் பகுதியைக் கடந்து, சேர்ந்த இடம், பாலைவனம். வரைபடக் குறிப்பைப் பார்த்தான் பீட்டர். ‘பாலைவனக் கப்பல்’ என்று இருந்தது. அங்கே ஒரு ஒட்டகம் ஒய்யாரமாக நின்றுகொண்டிருந்தது.

‘‘பாலைவனக் கப்பலே, நாங்கள் புதையல் வேட்டைக்காகப் போகிறோம். இந்தப் பாலைவனத்தைக் கடக்க எங்களுக்கு உதவி செய்வதோடு, நீயும் புதையல் வேட்டையில் இணைந்துகொள்ளலாம்’’ என்று தன் விருப்பத்தைச் சொன்னான் பீட்டர்.
ஒட்டகமும் மகிழ்ச்சியோடு சம்மதித்தது. தன் மீது மூவரையும் ஏற்றிக்கொண்டது. மணற்கடலில் பயணத்தைத் தொடங்கினர். கழுகு மட்டும் இவர்களுக்கு மேலாகப் பறந்துகொண்டிருந்தது.

ஒட்டகத்தின் வேகப் பாய்ச்சலில், பரந்து விரிந்திருந்த அந்தப் பாலைவனத்தைக் கடந்தனர். ஒட்டகத்தோடு பயணித்த அந்தப் பயணம் புதுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது பீட்டருக்கு.

பாலைவனம் கடந்த இவர்கள், கடலுக்குமுன்பாக நின்றுகொண்டிருந்தார்கள். வரைபடக் குறிப்பை பீட்டர் பார்த்தபோது, ‘மிதக்கும் உயிர்ப் பாறை’ என்று இருந்தது.

அப்போது, கடலில் பெரிய ஆமை ஒன்று இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. ‘கண்டேன் மிதக்கும் உயிர்ப் பாறையை’ என்று பீட்டர் கத்தினான்.

அருகில் வந்த ஆமையிடம், ‘‘இந்தப் பெருங்கடலைக் கடக்க எங்களுக்கு உதவ வேண்டும். நாங்கள் புதையல் தேடிப் போகிறோம். நீயும் எங்களோடு இணைந்துகொள்ள வேண்டும்’’ என்றான் பீட்டர்.

ஆமை மறுப்புச் சொல்லாமல் சம்மதித்தது.  பீட்டர், சிங்கம், செம்மறி ஆடு, ஒட்டகம் ஆகியவை ஆமை மீது ஏறிக்கொள்ள, கடற்பயணம் தொடங்கியது. வழியில் கடல் சீற்றம்கொண்டது. ஆமை, அதையெல்லாம் சமாளித்து கடலைக் கடந்து, கரைக்கு வந்துசேர்ந்தது.
அப்போது நள்ளிரவு. பீட்டர், வரைபடக் குறிப்பைப் பார்த்தான். ‘இரவு நண்பன்’ என்றிருந்தது. அங்கே ஒரு மரத்தில் பெரிய‌ ஆந்தை அமர்ந்திருந்தது. ‘‘ஓ! இரவு நண்பர் இதோ இருக்கார்’’ என்றவாறு ஆந்தையிடம் போனான்.

பீட்டர் கேட்கும் முன் ஆந்தை பேசியது. ‘‘என்னுடைய பாராட்டும் வாழ்த்தும் உங்களுக்கு. ஏனென்றால், நீங்கள் இறுதியாகப் புதையலைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்’’ என்றது.

இதைக் கேட்டு திகைத்த அவர்கள், ‘‘எங்கே?’’ என்று கேட்டனர்.

‘‘முதலில் பெருங்காட்டைக் கடந்தீர்கள். பின், செங்குத்தான மலையை ஏறிக் கடந்தீர்கள். அதன் பின்  பள்ளத்தாக்கைக் கடந்தீர்கள். தைரியமாக பாலைவனத்தைக் கடந்தீர்கள். நீலப் பெருங்கடலையும் கடந்தீர்கள். இப்படி வரும்போது, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொண்டீர்கள். உங்களில் யாராலும் தனி ஒருவராக இதைச் சாதித்திருக்க முடியாது. உங்கள் ஒற்றுமை மூலம் இதைச் சாதித்தீர்கள். அதோ, அந்த மரப்பொந்தில் புதையல் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு செல்லுங்கள்” என்றது ஆந்தை.

அவர்கள், வேகமாகச் சென்று மரப்பொந்தில் பார்த்தார்கள். அங்கே, தங்கமும் வைரமும் மின்னின.

‘‘மனிதனே, இந்தத் தங்கம் மற்றும் வைரத்தால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நீ அழைத்ததும் நாங்கள் உன்னோடு வந்தது ஆந்தை கூறியது போல ஒற்றுமை என்ற புதையலின் அனுபவத்தைத் தெரிந்துகொள்ளவே. இவை, எல்லாவற்றையும் நீயே எடுத்துக்கொள்” என்றது சிங்கம்.

புன்னகை பூத்த பீட்டர், ‘‘நான் பயணத்தை ஆரம்பித்தபோது, தங்கத்தையும் வைரத்தையும் எதிர்பார்த்துக் கிளம்பியது உண்மைதான். ஆனால், உங்கள் ஒவ்வொருவரின் உதவியோடு, பல தடைகளைக் கடந்தபோதே அன்பு, ஒற்றுமை என்ற புதையலைக் கண்டுபிடித்துவிட்டேன். இப்போதும் நான் ஒரு புதையலை எடுத்துக்கொள்ளத்தான் போகிறேன்” என்றவன், பொந்துக்குள் கையைவிட்டான்.

அங்கே ஒரு குருவிக் குஞ்சு இருந்தது. அதை எடுத்த பீட்டர், ‘‘பார்க்கும்போதே இதன் தாய் இல்லை என்று புரிகிறது. இதை எடுத்துச்சென்று வளர்க்கப்போகிறேன்” என்றான்.

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ‌ஆந்தைக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினர்.


இத்தாலி

இத்தாலியின் தலைநகரம் ரோம். மன்னர் ஆட்சியிலிருந்து 1946 ஜூன் 2-ல், குடியரசு நாடாக மாறியது. ஆட்சி மொழி, ரோமானிய மொழி. இதை, இத்தாலியம் என்றும் சொல்வார்கள்.

தமிழில் பல்வேறு நூல்களை படைத்த வீரமா முனிவர் எனப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joesph Beschi) இத்தாலியில் பிறந்தவரே. கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப 1710-ல் தமிழகத்துக்கு வந்தார். சிறந்த ஓவியரும் சிற்பியுமான, லியானார்டோ டாவின்சி இத்தாலியில் பிறந்தவரே.

இத்தாலியின் பைசா நகரத்தில்தான் சாய்ந்த கோபுரம் உள்ளது.

இன்று உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் பீட்சா, இத்தாலியக் கண்டுபிடிப்பே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick