Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மை டியர் ஜீபா !

“அன்பு ஜீபா... முதன்முதலில் எந்த நாட்டில் தீபாவளி கொண்டாடப்பட்டது?’’

- சி.பாலமுருகன், நெய்க்காரப்பட்டி, (பழனி).

“பண்டைய இந்தியாவில் தொடங்கிய இந்துக்களின் பண்டிகை, தீபாவளி. 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து அயோத்திக்கு ராமன் திரும்பிய நாள் என்றும், நரகாசுரன் என்ற அசுரனை கிருஷ்ணர் அழித்த நாள் என்றும் தீபாவளி பற்றி இந்தியப் புராணங்களில் வெவ்வேறு கருத்துகள் உள்ளன. இந்தப் பண்டிகையை, பொற்கோயிலை மையப்படுத்தி சீக்கியர்களும், மகாவீரரை வணங்கும் வகையில் சமணர்களும் கொண்டாடுகிறார்கள். இந்துக்கள் அதிகம் வசிக்கும் நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, பிஜி தீவுகள் போன்ற நாடுகளிலும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு, தீபாவளி கொண்டாடப்படுகிறது.”

“ஹாய் ஜீபா... கடல் அட்டைகள் என்பது என்ன? இதைப் பிடிக்கத்  தடை இருப்பது ஏன்?”

- எஸ்.கஸ்ஸானா பானு, பாம்பன்.

“கடல்வாழ் உயிரினங்களில் ஒன்று, கடல் அட்டை (Sea Cucumber). இதில், உலக அளவில் 1,700-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. கடலில் சேரும் கழிவுகளைச் சாப்பிட்டு, கடலை சுத்தம் செய்வது இதன் முக்கியப் பணி. இறைச்சிக்காகவும் மருத்துவப் பயனுக்காகவும் இவை பிடிக்கப்பட்டன. கடல் அட்டைகள் குறைந்தால், பிற கடல்வாழ் உயிரினங்களான மீன்கள், நண்டுகள் ஆகியவற்றின் இனப்பெருக்கம் குறைந்துபோகும். எனவே, இவற்றைப் பிடிக்க பல நாடுகளில் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தியாவில், கடல் அட்டைகளைப் பிடிக்க முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை.”

“ஹலோ ஜீபா... டைனோசர் என்ற உயிரினம் வாழ்ந்ததை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்?”

- மா.சுதர்சன், தருமபுரி.

“இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் சர் ரிச்சர்டு ஓவன் (Sir Richard Owen), உலகம் முழுவதும் பயணம் செய்து, பல்வேறு தொல்லுயிர் எச்சங்களைச் சேகரித்தவர். 1842-ம் ஆண்டில் அவர் கண்டுபிடித்துச் சொன்ன உயிரினம்தான், டைனோசர்.   ஊர்வன இனத்தில் இருந்த பல்லி போன்ற பெரிய உயிரினம்.  கிரேக்க மொழியில் ‘டைனோசாரியா’ (Dinosauria) என்று பெயரிட்டு, புதிய உயிரியல் உட்பிரிவில் கொண்டுவந்தார்.  இதற்கு, கொடூரமான, பிரமிப்பான உயிரினம் என்று பொருள்.”

“ஜீபா, எனக்கு ஒரு டவுட்... சாப்பிட்ட பின் தலைகீழாக நின்றாலும் வெளியே வராத உணவு, பயணத்தில் வாந்தியாக வருவது ஏன்?”

- ஜா.ரா.சிந்தனா, கோயம்புத்தூர்.

“சாப்பிட்டுவிட்டு எதுக்கு தலைகீழாக நிற்கிறே சிந்தனா. நாம் சாப்பிடும் உணவு, தொண்டைக்குழி வழியாக உடனடியாக இரைப்பைக்குள் சென்றுவிடும். எனவே, தலைகீழாக நிற்பதால், உணவு வெளியே வராது. வேறு பிரச்னைகள்தான் வரும். செரிமானத்தில் ஏற்படும் குறைபாடு, குடல் பிரச்னை, உணவுக் குழாயில் உண்டாகும் நோய்த் தாக்கம், சில நோய்களுக்கான அறிகுறி என, வாந்தி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பயணத்தில் ஏற்படும் வாந்தியை, இயக்க நோய் (Motion sickness) அல்லது பயண நோய் (Travel sickness) என்பார்கள். உண்மையில் இது நோயே அல்ல, ஒருவித பலவீனம். எல்லோருக்கும், எல்லாப் பயணங்களிலும் ஏற்படுவது இல்லை. இது, மூளைக்குத் தகவல் செல்வதில் ஏற்படும் ஒரு குழப்ப நிலையே. அதாவது, பேருந்தில் நாம் அமர்ந்திருக்கும்போது, நிலையாக ஓர் இடத்தில் இருப்பது போன்று மூளைக்குத் தகவல் செல்கிறது. திடீரென, ஒரு பள்ளத்தில் சக்கரங்கள் ஏறி இறங்கினாலோ, பேருந்தின் வேகம் கூடினாலோ, உடலில் உடனடி அசைவு ஏற்பட்டு, இயக்கத்தில் இருப்பதாக மூளைக்குத் தகவல் செல்கிறது. இதுபோன்ற குழப்பத்தால், மூளைக்கும் நரம்பு மண்டலத்துக்கும் இடையே ஏற்படும் வேதி மாற்றமே சிலருக்கு ஒவ்வாமை ஆகி, வாந்தியாக வெளிப்படுகிறது.”

“டியர் ஜீபா... கருவேல மரங்கள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை என்பது உண்மையா?”

    - எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.

“அதில் சந்தேகமே வேண்டாம். மெக்ஸிகோ, கரீபியன் தீவுகள், தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் தோன்றிய கருவேல மரங்கள், 12 மீட்டர் உயரம் வளரக்கூடியவை. எவ்வளவு கடுமையான வறட்சிக் காலத்திலும் தாக்குப்பிடித்து, நிலத்தின் அடி ஆழத்தில் இருக்கும் நீரையும் உறிஞ்சி வளரும். இதனால், பிற தாவரங்களுக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு குறைந்து, சுற்றுச்சூழலில் மாற்றத்தை உருவாக்கிவிடும். பயிர்களுக்கு வேலியாகவும், சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்று 1950-களில் இந்தியாவுக்கு இதன் விதைகள் இறக்குமதி செய்யப்பட்டன. இன்று, இந்தியச் சுற்றுச்சூழலுக்கே சவாலாக இருக்கிறது.”

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
வலை உலா !
பென் டிரைவ்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement
[X] Close