மோட்டார் மவுத்!
பேசிப் பேசியே சாதனை படைத்திருக்கிறார், லண்டனைச் சேர்ந்த ஸ்டீவ் வுட்மோர் (Steve woodmore). நிமிடத்துக்கு 637 வார்த்தைகள். காரணம், மூளையில் இருக்கும் ஸ்பீக் சென்டர் மற்றும் மோட்டார் ஏரியாக்களின் அதிவேகச் செயல்பாடு. எலெக்ட்ரானிக் பொருள்கள் விற்பனையாளரான இவர், மூக்கும் தாடையும் அதிகம் செயல்படும்படி வார்த்தைகளை உச்சரித்துப் பழகினாராம்.
வாவ்... பூங்கா!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான் லாண்டி (Jon Landy), வாழைப்பழத்துக்கு சிலை வைத்து, காண்போரை அசரவைத்துள்ளார். கான்கிரீட் மற்றும் கண்ணாடி இழைகளைக்கொண்டு, ‘பிக் பனானா’ என்னும் பொழுதுபோக்கு இடத்தை உருவாக்கியுள்ளார். சுமார் 20 ஏக்கர் நிலப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாழைப்பழப் பூங்காவில், 30 அடி நீள வாழைப்பழச் சிலை உள்ளது. வாழையின் பிறப்பு, அதன் இனம்,வகைகள், ரெசிப்பிகள் போன்ற பல தகவல்களை இங்கே அறிந்துகொள்ளலாம்.
மீண்டும் நாளந்தா!
பீஹார் மாநிலத்தின் மையப் பகுதியில், 5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம். இதுவே, உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழம். துருக்கியரின் படையெடுப்பில் முற்றாக அழிக்கப்பட்டது. தற்போது, 15 மாணவர்களுடனும் 11 பேராசிரியர்களுடனும் இந்தப் பல்கலைக்கழகம் 29 ஆகஸ்ட் 2014 முதல் தனது கற்பித்தலைப் புதுப்பொலிவுடன் தொடங்கியுள்ளது.
அனகோண்டாவுக்கு அண்ணன்!
அனகோண்டாதான் பெரிய்ய்ய்ய பாம்பு என்று நினைத்திருந்தோம். ஆனால், அதைவிடப் பெரியது, டைட்டனோபா (Titanoboa) என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலம்பியா நதிக்கரையில் அவை வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைட்டனோபாவின் நீளம், 42 அடிகள். எைட, 1,135 கிலோ வரை இருக்கும் என்கிறார்கள்.
கேட்டில் எக்ரெட்!
கேட்டில் எக்ரெட் (Cattle Egret) என்பது ஓர் கொக்கு இனம். இவை, மாட்டுக் கொக்குகள் என்றும் உண்ணிக் கொக்குகள் என்றும் அழைக்கப்படும். மாடுகள், காண்டாமிருகங்களுக்கு உற்ற தோழனாகத் திகழ்கின்றன. அவற்றின் உடலில் இருக்கும் உண்ணிகளைக் கொத்திச் சாப்பிடும். காண்டாமிருகத்தின் மீது சவாரி செய்யும் இவை, அவற்றின் எதிரிகள் தென்பட்டால், உடனே ‘கீச் மூச்’ என்று சத்தம் எழுப்பி, நண்பனுக்கு எச்சரிக்கை செய்யும்.
காண்டாமிருகத்தின் தோல் மீதுள்ள பூச்சிகளையும் ‘கேட்டில் எக்ரெட்’ பிடித்துச் சாப்பிடுகிறது. இதனால், இந்தப் பறவையைத் தவிர வேறு எந்தப் பறவை தன் மீது உட்கார்ந்தாலும் காண்டாமிருகம் அனுமதிப்பது இல்லை.
நான் அணில் இல்லை!
மடகாஸ்கர் தீவு என்றதும் அரிய விலங்குகள் நினைவுக்கு வரும்.அவற்றில் ஒன்று நரிமுகக் குரங்கு. 1800-ல் முதன்முதலாக இந்த விலங்கைப் பார்த்தவர்கள், அணில் வகைகளில் பெரியது என்றே நினைத்தனர். பெரிய கண்கள், வட்டக் காதுகள் எனப் பார்ப்பவர்களைக் கவரும். உண்பது, உறங்குவது எல்லாம் மரத்தில்தான். கீழே வர விரும்பாது. இது, தன் நடுவிரலை நீட்டி ஒருவரைக் காட்டினால், அவர் அதிர்ஷ்டம் இல்லாதவராக ஆகிவிடுவார் என்ற மூடநம்பிக்கையால், கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் குரங்கு இனத்தையே அழிக்க ஆரம்பித்தார்கள். இப்போது, இந்த விலங்கை வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பலே யோகா பாட்டி!
சாதனைக்கு வயது பிரச்னை இல்லை என்பதை நிரூபித்து, 2012-ம் ஆண்டில் கின்னஸில் இடம்பிடித்தவர், 96 வயது பாட்டி தாவோ போர்ச்சன் லின்ச் (Tao Porchon Lynch). இந்தியாவில் பிறந்து, இப்போது நியூயார்க்கில் வசித்துவரும் இவர், யோகாவில் அசத்துகிறார். காலை 5 மணிக்கே எழுந்து, தனது மாணவர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்கிறார். நன்றாக நடனம் ஆடுகிறார். வீட்டு வேலைகள் அனைத்தையும் இந்தப் பாட்டியே ஜாலியாக செய்கிறார். பலே பாட்டிதான்.
மனித அதிசயம்!
பிறந்த குழந்தையின் தலையின் நீளம், அதன் உடல் நீளத்தில் நான்கில் ஒரு பங்கு. வளர்ந்ததும் தலையின் நீளம், உடலின் மொத்த நீளத்தில் எட்டில் ஒரு பங்கு. குழந்தையாக இருக்கும்போது, மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 350. வளரும்போது சில எலும்புகள் ஒருங்கிணைந்து, 206 ஆகும்.
l50,000 வகை வாசனைகளைக் கண்டறியும் தன்மை மனித மூக்குக்கு உண்டு.