ஒரு தேதி...ஒரு சேதி...

அன்புச் சுட்டி நண்பர்களுக்கு...

உண்டியலில் காசு சேமிக்கும் பழக்கம் உங்களிடம் இருக்கிறதா? தினந்தோறும் காசு போட்டு, ஒருநாள் திறந்து பார்க்கும் போது, உண்டியல் நிறைந்து உற்சாகம் பொங்கும். அதுபோல, தினம் ஒரு தகவலைக் கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், உங்கள் மூளையில் பொக்கிஷம் நிறைந்திருக்கும்.  உண்டியல் செல்வம் செலவாகலாம். ஆனால், தகவல் செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்தாலும் குறையாது. தினமும் கேட்கும் தகவல்களை, ஒரு நோட்டில் குறிப்பு எடுத்துக்கொள்ளும் பழக்கத்தையும் தொடர்ந்தால், எழுத்தும் வசப்படும்.

அமெரிக்காவில், அதிகம் பேர் கார் வைத்திருக்கக் காரணம், ஹென்றி ஃபோர்டு. சிறு வயதில் பார்த்த டிராக்டர் வண்டி, இவரை மிகவும் கவர்ந்தது. வாகனங்கள் மீது ஆர்வம் உண்டானது. உதிரிப் பாகங்கள், பழைய உலோகங்களால் தன் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு கூடாரத்தில், தனது முதல் வாகனத்தை வடிவமைத்தார். அவர் தயாரித்த கார், சில 100 டாலர்களில் கிடைத்தது. அமெரிக்காவில் கார் இல்லாத ஆளே இல்லை என்கிற சூழலை உருவாக்கிய ஹென்றி ஃபோர்டு சந்தித்த சவால்களைத் தெரிந்துகொள்வோமா?

ஸ்பெயின் நாட்டின் வீதிகளில், அந்த இளைஞன் தனது ஓவியங்களைக் கடை விரித்துபோது, “இது என்ன பைத்தியக்காரத்தனம்?” என்று ஊரே சிரித்தது. ஆனால், அப்படிச் சிரித்தவர்களில் பலர், பின்னாட்களில் அந்த இளைஞனின் ஓவியத்தை வாங்குவதற்குப் போட்டிபோட்டார்கள். ஹிட்லரின் இரக்கமற்ற, கொடுங்கோல் ஆட்சியை ஓவியத்தின் மூலம் உலகுக்கு  வெளிச்சம்போட்டுக் காட்டினார். ஓவியங்கள் மூலமும் சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போரிட முடியும் என்பதைச் சொன்ன ஓவியர், பாப்லோ பிகாசோவின் வாழ்க்கை அனுபவங்களை அறிந்துகொள்வது அவசியம் அல்லவா?

மகாத்மா என்றதும் காந்தி நினைவுக்கு வருவார். இந்தியாவில், மகாத்மா என்று போற்றப்படும் இன்னொருவரும் இருக்கிறார். மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் பிறந்து, ஆங்கிலேய அரசை எதிர்த்தவர். அடித்தள மக்களின் உரிமைக்காகவும் போராடியவர். தன் மனைவியோடு, இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தார். மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பதை வாழ்நாளின் கடைசி வரை பின்பற்றிய அந்த மகாத்மா, ஜோதிராவ் பூலே. அவரின் போராட்ட வாழ்க்கையை இன்னும் நிறைய அறிந்துகொள்வோமா?

இன்னும் பல தேதிகள்... இன்னும் பல சேதிகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick