பரீட்சைக்குப் படிக்கும் மாலை நேரத்தில், கொறிக்கக் கொஞ்சம் ஸ்நாக்ஸ் பக்கத்தில் இருந்தால், சுறுசுறுப்பா இருக்குமே. கிச்சனில் எப்போதும் இருக்கும் பொருட்களில், ஒரு சூப்பர் ஸ்நாக்ஸ் செய்யக் கற்றுத்தர்றாங்க ரித்திகா.
மினி ரொட்டி
தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு, கோதுமை மாவு - தலா கால் கப், ரவை, கோதுமை ரவை, ஓட்ஸ் - தலா 3 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 2, கொத்தமல்லி இலை - சிறிது, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி இலை எல்லாத்தையும் கழுவி, பொடியா நறுக்கிக்குங்க.
எல்லா மாவுகளையும் ஒரு பாத்திரத்தில் போடுங்க. வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, கொஞ்சமா தண்ணீர் தெளிச்சுப் பிசைஞ்சுக்குங்க. (சப்பாத்தி மாவு அளவில் நெகிழ்வா இருக்கணும்).
கையில் எண்ணெய் தடவிக்கிட்டு, இந்த மாவைச் சின்ன உருண்டைகளாக எடுங்க. ஒரு துண்டு வாழை இலையில், சின்னச்சின்ன ரொட்டிகளாகத் (அடைகளாக) தட்டி எடுங்க.
அடுப்பில் தோசைக்கல்லைக் காயவெச்சு, தட்டி வைத்து இருக்கும் ரொட்டிகளைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய்விட்டு, முறுகலாக வெந்ததும் எடுங்க.
சாயந்திர நேரத்துக்கு சத்தான ஸ்நாக்ஸ் ரெடி!
மித்ரா
ஆ.முத்துக்குமார்