Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பண்பாட்டைப் பிடிக்கும் புகைப்பட நாயகன்!

“நிகழ்ச்சி ஆரம்பிக்கப்போகுது, அப்துல் வந்தாச்சா?”

தஞ்சாவூரில், ‘தென்னகப் பண்பாட்டு மையம்’ ஆண்டுதோறும் நடத்தும் புகழ்பெற்ற  விழாவில்தான் இந்தக் குரல்.

தஞ்சாவூர், டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் அப்துல் ஃபாசில், ஜூனியர் புரொஃபெஷனல் போட்டோகிராஃபராக இதுவரை  200 நிகழ்ச்சிகளைப் படம்பிடித்து இருக்கிறார்.

 

‘‘போட்டோ எடுக்கறதுனா, எனக்கு ரொம்ப இஷ்டம்.  டிஸ்கவரி சேனலைப் பார்த்துட்டு, அப்பாவோட செல்போனைத் தூக்கிட்டுப் போய், தோட்டத்தில்  இருக்கும் பறவைகள், தரையில் ஊர்ந்துபோகும் எறும்புகள் என எல்லாத்தையும் படம் பிடிப்பேன்.  ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு படிக்கும்போதே, ‘எனக்கு  ஒரு கேமரா வேணும்’னு அடம்பிடிச்சு அழுதேன். அப்பா, யாஷிகா எம்.எஃப்-2 மாடல் கேமரா வாங்கிக் கொடுத்தார். அதைத் தூங்கும்போதுகூட என் பக்கத்தில்தான் வெச்சுப்பேன்” என்று சிரிக்கிறார் அப்துல் ஃபாசில்.

உறவினர் வீட்டு விசேஷம், தெருவாசிகளின் நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் அங்கே ஆஜராகி, புகைப்படம் எடுத்துக்கொடுத்திருக்கிறார் அப்துல் ஃபாசில்.

“நான் எடுத்த போட்டோக்களைப் பார்த்து எல்லோரும் பாராட்டுவாங்க.ஆறாவது படிக்கும்போது, ‘ஒரு புரொஃபெஷனல் கேமரா வாங்கிக் கொடுங்க. இன்னும் நிறைய விஷயங்களை கத்துக்கிறேன்்னு, அப்பாகிட்ட கேட்டேன். ‘நீ எக்ஸாமில் 90 பெர்சன்ட் மார்க் வாங்கினா, புது கேமரா வாங்கித் தர்றேன்’னு சொன்னார். 95 பெர்சென்ட் மார்க் எடுத்தேன்.  50,000 மதிப்புள்ள நிக்கான் டி3100 மாடல் கேமராவும், லென்ஸும் வாங்கிக் கொடுத்தார். அப்பாவைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தேன்” என்கிறார், மகிழ்ச்சி பொங்கும் குரலில்.

அதன் பிறகு, நிறைய நிகழ்ச்சிகளுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்து, சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அமைப்புகளிடம் காட்டி, பாராட்டுப் பெற்றுள்ளார்.

 

‘‘அப்படித்தான், தென்னகப் பண்பாட்டு மையத்தின் விழாவை போட்டோ எடுத்துக் காண்பிச்சேன். அவங்க என்னைப் பாராட்டினதோடு, ‘இனி, எங்க நிகழ்ச்சி போட்டோகிராஃபர் டீமில் நீயும் இரு’னு சொன்னாங்க. ரெண்டு வருஷமா, இந்த விழாவில் நான்தான் போட்டோ எடுக்கிறேன். இந்த கலாசார விழாவில், பல நாட்டுக் கலைஞர்களின் கலாசார நடன நிகழ்ச்சிகள் நடக்கும். ‘நடன அசைவுகளை அழகாப் படம் பிடிச்சிருக்கே’னு நடனக் கலைஞர்கள் பலரும் பாராட்டினாங்க. பல வெளிநாடுகளில் இருக்கும் தமிழ்ச் சங்கத்தினர், நிகழ்ச்சியில் நான் எடுக்கும் போட்டோக்களின் சி.டி-க்களை வாங்கிட்டுப் போனாங்க. அதுக்கு, பரிசும் அனுப்பிவெச்சாங்க. இங்கே, எந்த ஊரில் நடக்கும் புகழ்பெற்ற கோயில் நிகழ்ச்சியாக இருந்தாலும் எனக்கு போன் பண்ணி, எடுத்து அனுப்பச் சொல்வாங்க. கனடா, லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க தமிழ்ச் சங்கங்கள் எனக்கு நிறைய அசைன்மென்ட் கொடுத்திருக்காங்க. தஞ்சாவூரில் நடக்கும் பல அரசு நிகழ்ச்சிகளையும் போட்டோ எடுத்திருக்கேன். இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை எனப் பல வெளிநாடுகளிலும்  போட்டோ எடுத்திருக்கேன்” என்று ஆச்சர்யப்படுத்துகிறார் அப்துல் ஃபாசில்.

கடந்த ஆண்டு தென்னகப் பண்பாட்டு மையம் நிகழ்ச்சிக்காக இவர் எடுத்த புகைப்படங்களைப் பார்த்துவிட்டு ஆளுநர் ரோசய்யா வாழ்த்தி இருக்கிறார்.

“எனக்கு வைல்டு போட்டோகிராஃபரா ஆகணும்னு ரொம்ப ஆசை. லாங் டைம் லீவ் கிடைக்கும்போதெல்லாம், உயிரியல் காட்சி சாலை, மலைப்பிரதேசம்னு அப்பாவோடு கிளம்பிடுவேன். காட்டுக்குள்ளே போக நான் ரெடி ஆனா, சின்னப் பையனா இருக்கேன்னு வீட்ல பயப்படுறாங்க. போகும்போது எனக்காக, அப்பாகிட்டே சிபாரிசு பண்ணிட்டு போங்க அங்கிள்” என்ற அப்துல் ஃபாசிலின் குரலில், சாதனைப் பயணத்துக்குத் தயாராகும் ஆர்வம் மின்னியது.

கு.ஆனந்தராஜ்

தி.கௌதீஸ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
என் இடம்... என் உரிமை!
சுட்டி மனசு!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement
[X] Close