வணக்கம் மண்ணே!

இங்கே உணவு உருவாகிறது

ந்த மண்ணில் பிறந்து, மண்ணில் விளையும்  உணவை உண்டு வளர்ந்து, இறந்த பின் மண்ணுக்குள் செல்கிறோம். இத்தகைய மண்ணின் முக்கியத்துவத்தை மக்கள் உணரவும், மண்ணைப் பற்றிய விழிப்புஉணர்வைப் பெறவும் இந்த ஆண்டை, ‘சர்வதேச மண் ஆண்டு’ எனப் பிரகடனம் செய்துள்ளது ஐ.நா.சபை.

எல்லாம் மண் மயம்!

பூமியில் நான்கில் மூன்று பகுதி கடல் நீர்ப்பரப்பு என்பது தெரியும். மீதமுள்ள பகுதி அனைத்துமே மனிதன் வாழக்கூடிய பகுதி அல்ல. துருவப் பகுதி, மலைகள், பாலைவனங்கள், பனிப் பிரதேசங்கள் போக, மீதியுள்ள பகுதியில்தான் வாழ்கிறோம். மண் அரிமானம், காடுகளை அழித்தல், தொழிற்சாலைக் கேடுகள் ஆகியவற்றால் மண்ணின் உயிர்த்தன்மை செயலிழந்து வருகிறது. உலகில் உள்ள 700 கோடி மக்களுக்கும் இந்த மண்தானே உணவும் உறைவிடமும் அளிக்க வேண்டும்? அதனால், மண்ணை உயிரோட்டமாக வைத்துக்கொள்வது மிக மிக அவசியம்.

மண்ணுக்கு உயிர் உண்டா?

நிச்சயம் உண்டு. ஒரு ஸ்பூன் மண்ணை எடுத்து, ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்தால், லட்சக்கணக்கான நுண்ணுயிர்கள் அதில் இருப்பதை அறியலாம். மண்ணின் இடையே உள்ள இடைவெளிகளில் காற்று பரவி உள்ளது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்களும் தாவர வேர்களும் மண்ணின் ஊடே சுவாசிக்கின்றன. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, மினரல், உப்பு என அனைத்து சத்துகளும் மண்ணில் உள்ளன. எல்லாவற்றுக்கும் அடிப்படை, மண்தான்.

மண் இறந்துபோகுமா?

மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் இறந்துபோனால், மண்ணும் இறந்துபோகும். விவசாயத்துக்காக ரசாயன உரங்களைப் போடும்போது, சல்பேட் உப்புகளாக மண்ணில் படிந்துவிடுகின்றன. காடுகள் அதிகமாக வெட்டப்படுவதால், மண் அரிப்பு ஏற்பட்டு, மண் கெட்டுப்போகிறது. உலகில், ஒவ்வோர் ஆண்டும் 75,000 மில்லியன் டன் மண் அரிப்பு உண்டாகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 15 லட்சம் ஹெக்டேர் வனப் பகுதி அழிக்கப்படுகிறது. ஓர் அங்குலம் மண் உருவாக,  1,000 வருடங்கள் தேவைப்படுகின்றன.

தொழிற்சாலைகளின் கழிவுகளால் மண் மாசடைகிறது. புவி வெப்பமயத்தால், பூமியில் கார்பன் போன்ற வாயுக்களின் அளவு கூடிக்கொண்டிருக்கிறது. புவி வெப்பமயமாவதைத் தடுக்க, முக்கியமான காரணியாக இருப்பவை மரங்கள். அதனால், மண் பாதுகாப்பு இருந்தால்தான் தாவரங்கள் வளரும். தாவரம் வளர்ந்தால்தான் மனிதன் சுவாசிக்க ஆக்ஸிஜன் கிடைக்கும். எனவே, மண்ணைக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

மண்ணைக் காப்போம்!

மண் பாதுகாப்பை நம் வீட்டிலிருந்தே தொடங்குவோம். பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பொம்மைகள்,  பிளாஸ்டிக் துண்டுகள் போன்ற நெகிழிப் பொருள்களை ஒரே குப்பைக்கூடையில் போடுவதைத் தவிர்ப்போம். தனித்தனிக் கூடைகளில் பிரித்துப் போடுவோம். முடிந்த அளவுக்கு பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்  என்ற உறுதிமொழியை ஏற்று, பின்பற்றுவோம். மண்ணை மாசுபடுத்தும் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவற்றை நம் பகுதியில் கண்டால், அது குறித்து தகவல் அளித்து, தடுக்கும் நடவடிக்கையை எடுப்போம்.

மண்ணைப் போலவே ஒளியும் பூமியின் முக்கிய உயிர்க்காரணி என்பதால், இந்த ஆண்டு சர்வதேச ஒளி ஆண்டாகவும் அறிவிக்கப்பட்டு, ஒளியின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு விழிப்புஉணர்வை உண்டாக்கி வருகிறது ஐ.நா.சபை. அந்த ஒளிக்கும் நம் வணக்கத்தைத் தெரிவிப்போம்.

இரா.தட்சணாமூர்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick