இது எங்க வீடு!

லகத்தில் உயர்ந்த உயிரினம் எது? நாம் மட்டும்தான் அழகழகான வீடுகள் கட்டி, குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்கிறோமா?

இல்லை, நம்மைவிட மிக சந்தோஷமாக வாழும் உயிரினங்கள் ஏராளம் உண்டு. அதில் ஒன்றுதான், பெளவர் பறவை (Bower bird).

பௌவர் 20

இயற்கையின் அற்புதமான கட்டடக்கலை நிபுணர்களாக   பௌவர் பறவைகள் உள்ளன. இவை, 20 முதல் 50 சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும். ஆஸ்திரேலியா, பப்புவா நியூகினியா போன்ற நாடுகளில் வாழும் பௌவர் பறவைகளில், சுமார் 20 இனங்கள் உண்டு. புதர்கள், கட்டாந்தரை, மழைக்காடுகள், மலைகள் என அனைத்து இடங்களிலும் வசிக்கும். பெரும்பாலும் பழங்களை உண்ணும். ஆனால், தன் குஞ்சுகளுக்கு பூச்சிகளைக் கொடுக்கும். சில பறவைகள் மட்டும் பூக்கள், தேன் மற்றும் இலைகளை உண்ணுகின்றன.

கூடு அல்ல வீடு!

பெளவர் பறவை கட்டும் கூடுகளை மற்ற பறவைகளின் கூடுகளோடு ஒப்பிட முடியாது. பறவைக் கூடு என்று சொல்லிவிட முடியாது அழகான வீடு என்று சொல்லும் அளவுக்கு நேர்த்தியாகவும் கவனமாகவும் கட்டுகின்றன. பெரும்பாலும், ஆண் பறவைதான் நிலப் பகுதியில், குச்சிகளால் தனது வீட்டை உருவாக்கும். வண்ண வண்ண இலைகள், பூக்கள், பழங்களைச் சேகரித்துவந்து, வீட்டைச் சுற்றி அலங்கரிக்கும். மனிதர்கள் தூக்கி வீசிய வண்ண வண்ணப் பொருட்கள், கண்ணாடித் துண்டுகள், தகர மூடிகள், பிளாஸ்டிக் துண்டுகள், க்ளிப்புகள் எதையும் விடுவது இல்லை.

சில பறவைகள் நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பர்ப்பிள் என, சில குறிப்பிட்ட வண்ணங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வீட்டை அழகுபடுத்தும். சில பௌவர் பறவைகளின் கூடுகளில், கூஸ்பெரி பழங்கள், அலுமினிய மூடிகள் போன்றவை இருக்கும்.

எல்லாம் உனக்காக!

இந்தோனேஷியாவில் காணப்படும் பழுப்பு நிற தோட்டப் பறவை (Brown Gardener bird-Vogelkop bowerbird), இந்த இனத்தைச் சேர்ந்ததுதான். இவை, குச்சிகள் மூலம் பந்தல், மேல் விதானம் அமைத்து, அதன் வாசல் முகப்பில், பல வண்ணப் பொருட்களை அடுக்கிவைக்கும். தினமும் விதானத்தின் மேல் விழும் இலை தழைகளை அப்புறப்படுத்துவது, அதன் முக்கிய வேலை. சில நேரம், வேறு ஆண் பறவையின் கூட்டிலிருந்து அழகானவற்றைச் ‘சுட்டு’ வந்தும் தனது வீட்டை அழகு படுத்தும். இப்படி, தனது வீட்டை முழுமையாக்க, ஆண் பறவை எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா? 10 முதல் 12 மாதங்கள். பெண் பெளவர் பறவையைக் கவர்வதற்குத்தான் இத்தனையும். தான் கட்டிய வீட்டை, பெண் பறவைக்குப் பெருமையுடன் காட்டி, எல்லாம் உனக்காகத்தான் என்பது போல, பெண் பறவை முன்னால் நின்று பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடும். மற்ற விலங்குகளின் குரலில் மிமிக்ரி செய்யும். மனிதன் சிரிப்பு போலவும் குரல் எழுப்பும்.

நல்லதோர் குடும்பம்!

ஆண் பௌவர் வீடு கட்டி முடித்தவுடன், அது நன்றாக இருக்கிறதா என்பதை அறிய, பெண் பெளவர் வருகை புரியும். அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து பௌவர்களின் வீடுகளுக்கும் ஒரு ரவுண்டு  அடிக்கும். எந்த வீடு பிடித்திருக்கிறதோ, அந்த வீட்டுக்குள் போகும். பிறகு, ஆண் பறவையுடன் ஜோடி சேர்ந்து வசிக்கும். இரண்டு அல்லது மூன்று முட்டைகள் இரும். குஞ்சு பொறிந்து வந்ததும், அவைகளுக்கு உணவூட்டிப் பாதுகாத்து வளர்க்கும். அப்பா, அம்மா, குழந்தைகளோடு, ‘எங்களைப் பாருங்க, எங்க வீட்டு அழகைப் பாருங்க’ என்று சந்தோஷமாக வாழும்.

பேராசிரியர் சோ.மோகனா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick