மை டியர் ஜீபா

‘‘அன்புள்ள ஜீபா... பென்ஸ் கார் நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது?’’

- எஸ்.இளங்கோ, சென்னை- 57.

‘‘கார் தயாரிக்கும் பழைமையான நிறுவனங்களில் ஒன்று, மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes benz). பேருந்து, லாரி போன்ற வாகனங்களையும் இந்த நிறுவனம் தயாரிக்கிறது. 1886-ம் ஆண்டு, கார்ல் பென்ஸ் (Karl Benz) மற்றும் காட்லீப் டைம்லர் (Gottlieb Daimler) ஆகியோர் இந்த நிறுவனத்தை தொடங்கினர். மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் சிறப்பு, அதன் சொகுசுதான். வசதியான இருக்கைகள் இருக்கும். பவர்ஃபுல்லான இன்ஜின் இருந்தாலும், அதன் சத்தத்தையோ, அதிர்வுகளையோ உள்ளே உணர முடியாது; குலுங்கல் இருக்காது. இப்போது விற்பனையில் இருக்கும் பென்ஸ் எஸ் கிளாஸ் காரில், ஹெட்லைட் உள்பட எல்லாமே LED லைட்டிங்தான். 2017-ம் ஆண்டுக்குள், டிரைவர் இல்லாமல் ஓடக்கூடிய கார்களையும் விற்பனைக்குக் கொண்டுவர மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.’’

‘‘டியர் ஜீபா... ஸ்விஸ் வங்கி பற்றி அடிக்கடி செய்தி வருகிறதே, அதைப் பற்றி சொல்ல முடியுமா?’’  

                     - ம.அக்‌ஷயா, கரூர்.

‘‘‌ஸ்விட்சர்லாந்து நாட்டில், 1854-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஸ்விஸ் வங்கி. இரண்டாம் உலகப் போரில் கலந்துகொள்ளாத நாடு ஸ்விட்சர்லாந்து. அதனால், பல நாட்டைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாக்க, அங்கே கணக்கு ஆரம்பித்தனர். இந்த வங்கியில், கணக்காளர் பெயரோ முகவரியோ இருக்காது. மாறாக, 36 எண்கள் மட்டுமே கொடுக்கப்படும். கணக்கைத் தொடங்கும் அதிகாரி மற்றும் வங்கியின் உயர்நிலை அதிகாரிகளுக்கு மட்டுமே கணக்கு விவரங்கள் தெரியும். எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இங்கே கணக்கு தொடங்கலாம். இங்கு செலுத்தப்படும் பணம் பற்றிய தகவல்கள் ரகசியமாக இருக்கும். எனவே, பல நாட்டைச் சேர்ந்தவர்களும் தங்கள் நாட்டின் சட்ட விதிகளுக்கு எதிராகச் சம்பாதித்த பணத்தை இங்கே டெபாசிட் செய்துள்ளார்கள். இதுவே, ‘கறுப்புப் பணம்’ எனப்படுகிறது.’’

‘‘ஹலோ ஜீபா... காஷ்மீரின் மாநில மரம் எது?’’

   - ஏ.மோகன்குமார், டி.ரெங்கநாதபுரம்.

‘‘கோடை வந்ததுமே குளிர்ச்சியான காஷ்மீர் நினைவுக்கு வந்துவிட்டதா மோகன்குமார்? காஷ்மீர் மாநிலத்தின் மரம், சினார் (Chinar). இது, பிளாட்டனஸி (Platanaceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. 30 மீட்டர் உயரம் வளரக்கூடியது. ஸ்ரீநகர் உள்ளிட்ட காஷ்மீரின் ஏரிப் பகுதிகளில் இருக்கும் இதன் அழகு, சுற்றுலாப் பயணிகளைச் சுண்டி இழுக்கும்.”

‘‘ஹாய் ஜீபா... யூரி கெல்லர் யார்... அவருக்கு அசாதாரண சக்தி உண்டாமே?’’

           - பா.கிருஷ்ணசாய். சேலம்.

“1946-ம் ஆண்டு, இஸ்ரேலில் பிறந்தவர் யூரி கெல்லர். சிறுவயதிலேயே மனதை ஒருமுகப்படுத்தி, அசாத்திய சம்பவங்கள்  சிலவற்றைச் செய்தார். கையில் கட்டியிருந்த கடிகாரத்தை வேகமாகச் சுழலவைத்து, சக மாணவர்களை வியக்கவைத்தார். கல்லூரி முடித்து, ராணுவத்தில் சேர்ந்தார். காயம் காரணமாக, பணியில் இருந்து விலகினார். பிறகு, இவர் செய்த சாகசங்கள் எல்லாமே வியப்பின் உச்சம். பார்வையாலே இரும்புக் கம்பியை வளைத்தார். அடுத்த அறைக்குள் சிலர் ஓவியங்கள் வரைந்து, கவரில் போட்டு மூடி வைத்துவிட்டனர். அங்கே நுழைந்த கெல்லர், அவர்கள் வரைந்த ஓவியங்களை அப்படியே வரைந்து பிரமிக்கவைத்தார். 1973-ல் பி.பி.சி ரேடியோவில் பேட்டி கொடுக்கும்போது, தன் கையில் இருந்த ஸ்பூனை பார்வையாலேயே வளைத்தார். ரேடியோ கேட்டுக்கொண்டு இருந்தவர்களையும் அதுபோல செய்யச் சொன்னார். பலரும்  தங்கள் வீடுகளில் ஸ்பூன், சாவி போன்றவை வளைந்துவிட்டதாக ரேடியோ நிலையத்துக்கு போனில் தகவல் சொன்னார்கள். அடுத்த நாள் செய்தித்தாளில், தலைப்புச் செய்தி இதுதான். யூரி கெல்லர் மேஜிக்தான் செய்கிறார் என அவரை மறுத்தவர்களும் உண்டு. அதில், ஜேம்ஸ் ரேண்டி என்பவரும் ஒருவர். இவர் ஒரு மேஜிக் நிபுணர். யூரி கெல்லருக்கு எதிராக புத்தகம் எழுதினார். யூரி கெல்லராலும் எப்போதும் சாகசங்கள் செய்ய முடியவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், நன்கு சோதிக்கப்பட்ட ஸ்பூன்களை வளைக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டார். மனதை ஒருமுகப்படுத்தினால், மனிதனால் அபார சாகசங்களைச் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம், யூரி கெல்லர்.”

‘‘ஹலோ ஜீபா... புத்தகங்கள் வாங்குவதற்கு ஏதாவது இணையத்தளம் உண்டா?”

               - ஜோ.மனோஜ், அறந்தாங்கி.

‘‘உனது புத்தக ஆர்வத்துக்கு மகிழ்ச்சி மனோஜ். இப்போது, பெரும்பாலான பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள் புத்தகங்களை விற்க, தங்களுக்கான இணைய முகவரியைத் தொடங்கி செயல்படுத்தி வருகின்றன. www.amazon.in, www.flipkart.com, discoverybookpalace.com, panuval.com போன்ற இணையதளங்கள் வழியாக  புத்தகங்களை வாங்க முடியும். விகடன் நிறுவனமும் இணையம் வழியாக புத்தகங்களை விற்பனை செய்கிறது. http://books.vikatan.com என்ற முகவரிக்குச் சென்றால், விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள புத்தகங்களை வாங்க முடியும்.’’

 ஜெயசூர்யா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick