நோபல் தெரியும் ஏபெல் தெரியுமா?

லகின் பல துறைகள் கொண்டாடும் நோபல் பரிசு, கணிதத்துக்கு மட்டும் வழங்கப்படுவது இல்லை. இந்தக் குறையை ஈடுகட்டும் விதமாக, நார்வே நாட்டைச் சேர்ந்த கணித மேதை, நீல்ஸ் ஹென்ரிக் ஏபெல் (Niels Henrik Abel) என்பவரின் நினைவாக, ஆண்டுதோறும் ஏபெல் பரிசு வழங்கப்படுகிறது.

கணிதத்துக்கு ஏபெல் பரிசு வழங்கப்பட வேண்டும் என 1902-ம் ஆண்டே, நார்வே அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 2002-ம் ஆண்டு, அதே கோரிக்கை மீண்டும் வைக்கப்பட்டு, 2003-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏபெல் பரிசு வழங்கப்படுகிறது. 2007-ம் ஆண்டு, இந்தியாவைச் சேர்ந்த சீனிவாச வரதன் ஏபெல் பரிசு பெற்றார்.

2015-ம் ஆண்டுக்கான ஏபெல் பரிசு, அமெரிக்காவின் ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் (John forbes nash) மற்றும் கனடாவைச் சேர்ந்த லூயிஸ் நீரென்பெர்க் (Louis nirenberg) இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கணிதத்தில், பகுதி வகையீட்டுச் சமன்பாடு (Partial Differential Equations) என்ற கணிதக் கோட்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ததற்காக, ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் மற்றும் லூயிஸ் நீரென்பெர்க் இருவருக்கும் இந்த ஆண்டுக்கான ஏபெல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ்,  மேற்கு வெர்ஜீனியாவின் ப்ளூஃபீல்ட் நகரில் 1928-ம் ஆண்டு பிறந்தார். தனது வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களையும் சோதனைகளையும் சந்தித்தவர். பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டுவந்து, கணிதத்தில் சிறந்த கோட்பாடுகளை உருவாக்கினார்.

விளையாட்டுக் கோட்பாடு (Game theory), நாஷ் சமநிலை (Nash Equilibrium) போன்ற மிகவும் புதுமையான கோட்பாடுகளை உருவாக்கினார். இவற்றுக்காக, 1994-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

ஜான் ஃபோர்ப்ஸ் நாஷின் வாழ்க்கை வரலாற்றை, சில்வியா நாசர் என்பவர், ‘எ பியூட்டிஃபுல் மைண்ட்’ (A Beautiful Mind) என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். இதே பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம், சிறந்த திரைப்படத்துக்கான விருது உள்பட, நான்கு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது.

லூயிஸ் நீரென்பெர்க், கனடாவின் ஹேமில்டன் நகரில் 1925-ல் பிறந்தவர். அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றவர். கணிதத்தில் குறிப்பிடத்தக்க பல பரிசுகளை வென்றவர். அமெரிக்கக் கணிதச் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட, பல விருதுகளை வென்றிருக்கிறார்.

வரும் மே மாதம் 19-ம் தேதி, நார்வே நாட்டின் அரசர் ஹெரால்டு, இருவருக்கும் ஏபெல் பரிசை வழங்கவிருக்கிறார்.

சுப.தமிழினியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick