குவாக்...குவாக் வாத்து - ஜாலி பண்ணை விசிட்

‘குவா குவா வாத்து

குள்ளமணி வாத்து

சின்னதுரைப் பண்ணை வாத்து

சிரிக்குது நம்மைப் பார்த்து’

குஷியாகப் பாடியவாறு வாத்துகளை விரட்டிக்கொண்டிருந்தார்கள் அந்தச் சுட்டிகள். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் இருக்கும் சின்னதுரை என்பவரின் வாத்துப் பண்ணையில்தான் இந்தக் கலாட்டா.

‘‘சம்மர் லீவு விட்டாச்சு. வித்தியாசமா எங்காவது போகலாம்னு, ‘லீவை ஜாலியாக என்ஜாய் பண்ணுவோர் சங்கம்’ சார்பாக முடிவு பண்ணினோம்” என்றான், எட்டாம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக முடித்திருக்கும் கர்ணன். சார்தான்  சங்கத்தின் தலைவராம்.
இந்தச் சங்கத்தின் மகளிர் அணித் தலைவி, ஆறாம் வகுப்பு ராகவர்த்தினி.

“வாத்து அங்கிள், எங்களுக்கு வாத்து வளர்ப்பு பற்றி சொல்றீங்களா?” எனக் கேட்டாள் ஓவியா.

‘‘என்னது வாத்து அங்கிளா...  நான் வளர்க்கிறதுதான் வாத்துகள். சின்னதுரை அங்கிள்னு கூப்பிடுங்க” என்று சிரிப்புடன் அவர்களை அழைத்துச் சென்றார் சின்னதுரை.

‘குவாக்... குவாக்’ என்றவாறு குட்டையில் கூட்டமாக இருந்த வாத்துகள், தலையைத் திருப்பி லுக் விட்டன.

“ஏன் அங்கிள், வாத்துகளை வெட்டவெளியிலேயே விட்டிருக்கீங்க?” எனக் கேட்டான் மனோஜ்.

‘‘வாத்துகளுக்கு, உடம்பில் ஈரப்பதம் இருக்கணும். உடம்பில் ஈரம் இருக்கிற வரை தரையில் திரியும். பிறகு, குட்டைக்கு வந்துடும். கோழி மாதிரி அடைச்சுவெச்சா செத்துடும்’’ என்றார் சின்னதுரை.

‘‘ஒரு வாத்தைத் தூக்கிப் பார்க்கலாமா... கடிக்குமா அங்கிள்?” எனக் கேட்டாள் சஞ்சனா.

‘‘பயப்படாதே, எந்த வாத்தும் கடிக்காது. வாத்துகளை, கழுத்து அல்லது இறக்கைகளைப் பிடிச்சுத் தூக்கணும்’’ என்றவர், ஒரு வாத்தைப் பிடித்துக் கொடுத்தார்.

‘குவாக்... குவாக்’ என இறக்கையை அடித்துக்கொண்ட அந்த வாத்து, ‘ரொம்ப நல்ல பொண்ணு கையிலதான் வந்திருக்கோம்’ எனப் புரிந்துகொண்டதுபோல, சஞ்சனா கையில் தனது அலகை உரசிக் கொஞ்சியது.

குஷியான அனைவரும் ஆளுக்கு ஒரு வாத்தைப் பிடித்துத் தூக்கினார்கள்.

‘‘அங்கிள், நீங்க எவ்வளவு நாளா வாத்து வளர்க்கிறீங்க?” எனக் கேட்டான் சந்தோஷ்.

“எங்க பரம்பரைத் தொழிலே வாத்து வளர்ப்புதான். நான், 30 வருஷமா இந்தத் தொழிலில் இருக்கேன். என்கிட்டே 2,000 வாத்துகள் இருக்கு. எல்லாமே நாட்டு வகை வாத்துகள்தான். இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் வளர்த்து விற்கிறேன். நம்ம நாட்டுல, கோழி வளர்ப்புக்கு அடுத்தபடியா, வாத்து வளர்ப்பு முக்கியமான தொழிலா இருக்கு. கோழிகளைவிடவும் வாத்துகளை வளர்க்கும் செலவு குறைவு. நோய்த் தாக்கமும் குறைவு. காலரா, பிளேக் எனச் சில நோய்கள் தாக்கலாம். முறையான தடுப்பூசி போட்டால், எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார் சின்னதுரை.

‘‘எல்லா வாத்துமே ஒரே மாதிரி இருக்கே, இதில்  ஆண், பெண்ணை எப்படிக் கண்டுபிடிப்பீங்க?’’ எனக் கேட்டான் கர்ணன்.

“ஆண் வாத்து, குறைவான ஒலியில் குவாக் குவாக் எனக் கத்தும். பெண் வாத்து, பக்... பக் எனச் சத்தமா கத்திட்டே இருக்கும். ஆண் வாத்தின்  கழுத்துப் பகுதி, மயில் தோகை நிறத்தில் இருக்கும். பெண் வாத்துக்கு அப்படி இருக்காது” என்றார் சின்னதுரை.
தன் கையில் இருந்த வாத்தைக் கவனித்த தர்ஷனா, ‘‘ஹேய்... இது ஆண் வாத்து. இதுக்கு நான் டைகர்னு பேர் வைக்கப்போறேன்” என்றாள்.

‘‘பார்த்து தர்ஷனா, உன்னை அடிச்சு சாப்பிட்டுடப்போகுது. அங்கிள், வாத்துகள் என்ன சாப்பிடும்?” எனக் கேட்டான் நிதின்குமார்.

‘‘வாத்துக் குஞ்சுகளுக்கு சில நாட்கள் வரை கேழ்வரகு மாவு கொடுப்போம். அப்புறம், குருணை அரிசி சாப்பிடும். கொஞ்சம் வளர்ந்ததும்... முழு அரிசி,  நெல், தானிய வகைகளைக் கொடுப்போம்.  தண்ணீரில் இருக்கும் புழு, பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும்’’ என்றார் சின்னதுரை.

‘‘அது சரி, வாத்தைச் சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மை?” எனக் கேட்டாள் ஓவியா.

‘‘வாத்துகளும் அதன் முட்டைகளும் சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு நல்லது. கோழி இறைச்சியைவிட வாத்து இறைச்சி ரொம்ப மென்மையா  இருக்கும். சரி வாங்க, முட்டைகளை எடுக்கலாம்’’ என்ற சின்னதுரை, பாதியளவு வைக்கோல் போட்டிருந்த ஒரு கூடையை எடுத்துக்கொண்டார்.

‘‘ஆஹா... எக்ஸாம் முடிச்சுட்டு வந்ததுமே முட்டையைப் பார்க்கிறது நல்ல சகுனமா?’’ என்று ஜர்க் அடித்தாள் சஞ்சனா.

‘‘பயப்படாதே, நாம எல்லாம் தனியா முட்டை வாங்க மாட்டோம். ஒன்றுக்குப் பக்கத்திலே ரெண்டு முட்டைகள் வாங்குவோம்” என்று தைரியம் சொன்னான் மனோஜ்.

பண்ணைக்குள் இருந்த முட்டைகளைச் சேகரித்தவாறே பேச்சு தொடர்ந்தது. “ஒரு பெண் வாத்து ஆண்டுக்கு 100 முதல் 150 முட்டைகள் இடும். விற்கும் முட்டைகளைத் தவிர, பொரிக்கும் முட்டைகளை 30டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கணும். இளம் சூடான நீரை இரண்டாம் நாளிலிருந்து 23-ம் நாள் வரை முட்டைகள் மீது தெளிக்கணும். தினமும் நான்கு முறையாவது முட்டைகளைத் திருப்பி வைக்கணும். 28 நாட்களுக்குள்  முட்டையில் இருந்து குஞ்சு வெளியே வரும். வாத்து முட்டைகள், கோழி முட்டையைவிட 20 கிராம் அதிக எடை இருக்கும்’’ என்றார் சின்னதுரை.

‘‘வாத்தை வீட்டிலும் வளர்க்கலாமா?” எனக் கேட்டாள் ராகவர்த்தினி.

‘‘வளர்க்கலாமே... நல்ல முறையில் கவனிச்சுக்கிட்டா, மூணு ஆண்டுகள் உயிர் வாழும். நாங்க ஆறு  மாசத்தில் இருந்து ஓர் ஆண்டுக்குள் வித்திடுவோம். சில பெரிய வீடுகளில் வளர்க்கும், அன்னப் பறவை மாதிரி இருக்கிற வெள்ளை நிற வாத்துகளை, ஊசி வாத்துனு சொல்வாங்க. சீமை வாத்துங்கிறது கறுப்பா இருக்கும். இந்த வாத்து இறக்கையில்தான் இறகுப்பந்து செய்வாங்க. காக்கி கேம்பல், மஸ்கவி, வெள்ளை பெக்கின், ரூவன், இண்டியன் ரன்னர், மணிலா என, வாத்துகளில் 50-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு’’ என்றார் சின்ன துரை.

‘‘வாத்துகள் பறக்காதா அங்கிள்?” எனக் கேட்டான் நிதின்குமார்.

‘‘தான் இருக்கும் இடத்தில் உணவு கிடைக்காத போதும், வேறு இடத்தைத் தேர்வு செய்யும்போதும் பறந்துபோகும். தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி, ஆங்கில எழுத்து ‘வி’ வடிவில் பறக்கும்” என்றார் சின்ன துரை.
‘‘கடைசியா ஒரு டவுட். வாத்தை ஏன் முட்டாளுக்கு உதாரணமா சொல்றாங்க?” எனக் கேட்டாள் ஓவியா.

“காரணம் இருக்கு. ஒரு வாத்தைப் பிடிச்சு  கோணிப் பையில் போட்டுட்டு, அந்தப் பையைத் திறந்துவெச்சுட்டா, மற்ற வாத்துகளும் வரிசையா வந்து கோணிப்பைக்குள் புகுந்துக்கும். வாத்துகளை பிடிக்கத் துரத்தும்போது, சிதறி ஓடாமல், எல்லா வாத்துகளும் ஒரே பக்கமாவே ஓடும். ஈஸியா பிடிச்சுடலாம். சுயமாக முடிவெடுக்காமல், அடுத்தவனைப் பின்பற்றிப் போகிறவனை ‘வாத்து மடையன்’னு சொல்வாங்க’’ என்றார் சின்னதுரை.

“ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். ஒரு வருஷமா, ஹோம் வொர்க், எக்ஸாம்னு இருந்த டென்ஷன் எல்லாம் இங்கே இருந்த கொஞ்ச நேரத்தில் பறந்துபோயிடுச்சு. பை... பை வாத்துகளா...’’ என்றார்கள் கோரஸ்ஸாக.

‘குவாக்... குவாக்’ சத்தத்துடன் விடைகொடுத்தன வாத்துகள்.

கு.ஆனந்தராஜ்

த.ஸ்ரீநிவாசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick