துளசியும் தூதுவளையும் எங்கள் தோழர்கள்!

“இந்தச் செடிதான் திருநீற்றுப் பச்சை. அந்தக் காலத்தில், நம்ம தாத்தாக்களும் பாட்டிகளும் தலைக்கு குளிச்ச பிறகு, இந்த இலையைக் கிள்ளி, காது பக்கத்துல ஒட்டவெச்சுப்பாங்களாம். இதுக்கு, தலையில் இறங்கும் தண்ணியைத் தடுக்கும் ஆற்றல் இருக்கு. நாம நெற்றியில் விபூதி பூசுறதும் தலையில் இறங்கும் நீரைக் கட்டுப்படுத்தத்தான். அதனாலதான் இந்தப் பச்சிலைக்கு, திருநீற்றுப் பச்சைனு பேரு” என்று தேர்ந்த மூலிகை மருத்துவராகப் பேசுகிறார் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரமணி.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு, ‘மூலிகைப் பள்ளி’ என்ற செல்லப் பெயரும் உண்டு. இந்தப் பள்ளி வளாகத்தில் இருக்கும் சிறிய இடத்தில்,  துளசி, தூதுவளை எனப் பல்வேறு மூலிகைச் செடிகளைப் பராமரித்துவருகிறார்கள் மாணவர்கள்.

“முன்னாடி, எனக்கு அடிக்கடி சளி பிடிக்கும். டாக்டர் கிட்டபோய் ஊசி போட்டுகிட்டு மருந்து சாப்பிடுவேன். இந்த ஸ்கூலுக்கு வந்த பிறகு, துளசி இலையைச் சாப்பிடச் சொன்னாங்க. இப்போ, சளியும் பிடிக்கிறது இல்லை. இருமலும் வர்றது இல்லை” என்கிறார் மற்றொரு மாணவி நந்தினி.

அங்கே வந்த தலைமையாசிரியை சீதா லட்சுமி, ‘‘இன்னைக்கு நீங்கதான் செடிகளுக்குத் தண்ணி ஊத்துறீங்களா... வெரிகுட்” என்று பாராட்டிவிட்டு, நம் பக்கம் திரும்பினார்.

‘‘பன்றிக் காய்ச்சலில் தொடங்கி, உலகையே பயமுறுத்தும் பல்வேறு நோய்களுக்கு, நம் நாட்டு மூலிகைகள் மருந்தாக இருக்கு. நோய்களை வரும் முன் தடுக்கும் அற்புதக் காவலர்களாக இருக்கும் மூலிகைகளைப் பற்றி தெரிஞ்சுக்கவும், பயன்படுத்தவும் எங்க பள்ளிக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறோம்.  மாதம் ஒரு முறை நிலவேம்புக் கஷாயம் செய்து எல்லோருக்கும் கொடுக்கிறோம். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் ஸ்கூலுக்குப் பக்கத்தி்ல் இருக்கும் மாணவர்கள், இங்கே வந்து செடிகளுக்கு தண்ணீர் ஊத்திட்டுப் போறாங்க. அந்த அளவுக்கு இந்த மூலிகைச் செடிகளைப் புரிஞ்சுகிட்டு நேசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதுதான் எங்களுக்கு கிடைச்ச வெற்றி” என மகிழ்ச்சியோடு சிரிக்கிறார் சீதா லட்சுமி.

அங்கிருந்த மூலிகைச் செடிகளும் அழகாகச் சிரித்தன.

ம.மாரிமுத்து

வீ.சக்தி அருணகிரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick