தேடி வரும் கோடை எதிரி!

கோடை விடுமுறையில் நிறைய நண்பர்கள் தேடி வருவாங்க. ஒண்ணா விளையாடுவீங்க. கூடவே, கண்ணுக்குத் தெரியாமல் சில எதிரிகளும் வர வாய்ப்பு இருக்கு. முக்கியமாக, ஐந்து எதிரிகள். அந்த எதிரிகளைத் தடுப்பது எப்படி?

ஆலோசனை தருகிறார், குழந்தைகள் நல மருத்துவர் கார்த்தியாயினி.

வேர்க்குரு!

வியர்வைத் துளைகளில் ஏற்படும் அடைப்பின் காரணமாக வருவதே, வேர்க்குரு. இதற்கு, விளம்பரங்களில் சொல்கிறார்களே என்று பவுடர்  வாங்கிப் பயன்படுத்துவது சரியான தீர்வு ஆகாது. பவுடர் துகள்கள், வியர்வைத் துளைகளில் அடைப்பை உண்டாக்கும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குளிர்ந்த நீரினால் உடம்பில் ஒத்தடம் கொடுங்கள். காலையும் மாலையும் குளியுங்கள். மெல்லிய பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

உணவு நச்சு!

 விடுமுறையில் நண்பர்களோடு சேர்ந்து... பூங்கா, விளையாட்டு மைதானம் எனச் செல்பவர்கள், அங்கே விற்கும் சுகாதாரமற்ற குளிர் பானங்களையும் உணவுகளையும் வாங்கிச் சாப்பிடுவதால், உணவு நச்சு ஏற்படும். இது, உடனடியாக வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்றுவலி போன்றவற்றை உருவாக்கும். எனவே, வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். வீட்டில் இருந்தே பழத்துண்டுகள், அவித்த சுண்டல் வகைகள் என எடுத்துச் சென்று சாப்பிடுவது நல்லது. சாப்பிடும் முன்பு  கை கழுவுதல், காய்ச்சி ஆறவைத்த நீரை அருந்துதல் மூலம் உணவு நச்சு வராமல் தடுக்கலாம்.

நீர்ப்போக்கு (Dehydration)

 உடலில் இருக்கும் நீர், வியர்வையாக அதிகம்  வெளியேறுவதால், நீர்ப்போக்கு ஏற்படுகிறது. இதனால், அதிக சோர்வு உண்டாகும். அதிக அளவு தண்ணீர் அருந்துங்கள். இளநீர், பழச்சாறு குடியுங்கள். உப்பு மற்றும் சர்க்கரைக் கரைசல் [Oral Rehydration Solution-ORS) பவுடர், எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதைத் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இதில், குளூக்கோஸ் மற்றும் எலெக்ட்ரோலைட் (Electrolyte) உள்ளது. இதைக் குடிப்பதன் மூலம், நீர்ப்போக்கைத் தவிர்க்கலாம்.

வெப்பத்தாக்கு நோய் (sun stroke)

கோடைக்கால நோய்களில் மிகவும் ஆபத்தானது. உடலின் வெப்பநிலை 104 ஃபாரன்ஹீட் உயர வாய்ப்புள்ளது. இதனால், உடல் எரிச்சல், தசைப் பிடிப்பு போன்றவை ஏற்படும். இது, மயக்கத்தில் ஆரம்பித்து  கோமா வரை கொண்டுசெல்லும். ஒருவருக்கு உடலின் வெப்பநிலை அதிகமாவது தெரிந்தால், உடனடியாக  குளிர்ந்த பகுதிக்குத் தூக்கிச்சென்று, அவர்களின் ஆடைகளை அகற்றி,   குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் காலை 11 மணி முதல் மாலை 3 வரை, வெளியே விளையாடுவதைத் தவிர்ப்பது மிக மிக நல்லது. அதன் பிறகு விளையாடும்போதும் இடையிடையே ஓய்வு எடுக்க வேண்டும்.

தோல் நோய்கள்!

கோடையில் சூரியனின் தாக்கத்தால், தோலில் ‘சன்பர்ன்’ (sunburn) என்கிற காயம் ஏற்படலாம்.சன்ஸ்க்ரீன் லோஷன், காட்டன் ஆடைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி, இவற்றைத் தடுக்கலாம்.  தோல் நோய்த் தொற்றுகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கு முக்கியக் காரணம், நீச்சல் குளங்கள். பொது நீச்சல் குளங்களில் குளிக்கும் முன், அந்தக் குளத்தில் உள்ள நீர் சுகாதாரமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நீச்சல் குளத்து நீர், அடிக்கடி மாற்றப்படுகிறதா... குளோரின் சரியான அளவில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொண்டு, குளிக்க வேண்டும்.

எச்சரிக்கையோடு இருந்து, கோடையை உற்சாகமாகக் கொண்டாடுங்கள் நண்பர்களே!

அ.பார்த்திபன்

ராம்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick