துப்பாக்கித் தமிழன்

‘‘சமீப காலமாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில், நம்ம நாட்டுக்கு அதிகமான பதக்கங்கள் துப்பாக்கிச் சுடுதலில்தான் கிடைச்சு இருக்கு. அபினவ் பிந்த்ரா, ககன் நரங், ரஞ்சன் சோதி, விஜயகுமார், ஹீனா சிந்து, அஞ்சலி பகவத் என இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள், உலக அளவில் கலக்குறாங்க. அந்தப் பட்டியலில் சீக்கிரமே என் பெயரையும் பார்க்கலாம்’’

அமர்சக்கரவர்த்தியிடம் இருந்து, தோட்டாவைவிட வேகமாக வெளிப்படுகின்றன தன்னம்பிக்கை வார்த்தைகள்.

மதுரை, டிவிஎஸ் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் அமர்சக்கரவர்த்தி, துப்பாக்கி சுடும் போட்டிகளில் மாநில மற்றும் தேசிய அளவில் பதக்கங்களை வென்றிருக்கும் நம்பிக்கை நட்சத்திரம்.

கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் டெல்லியில் நடந்த, ‘குமார் சுரேந்தர் சிங் நினைவு இன்டர் ஸ்கூல் சூட்டிங் சாம்பியன்ஷிப் (Kumar Surendra Singh Memorial Inter School Shooting Championship) போட்டியில், 10 மீட்டர் ரைஃபிள் பிரிவில், இரண்டு தங்கம், மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.

‘‘நானும் ஆரம்பத்தில், கிரிக்கெட் மட்டையோடுதான் சுத்திட்டு இருந்தேன். ‘அமர், கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு இல்லை. நம்மை தனித்துக் காட்ட இன்னும் நிறைய விளையாட்டுகள் இருக்கு’னு சொன்ன என்னோட அப்பா, மதுரை ரைஃபிள் கிளப்புக்கு கூட்டிட்டுப்போனார். ‘உனக்குப் பிடிச்சிருந்தா இதில் சேர்ந்துக்க, நானும் சேரலாம்னு இருக்கேன்’னு சொன்னார். பார்த்ததுமே பிடிச்சுப்போச்சு” என்கிறார் அமர்சக்கரவர்த்தி.

‘‘பயிற்சியை ஆரம்பிக்கும்போது யோகா கத்துக்கச் சொன்னாங்க. ‘இது என்ன ஜிம்னாஸ்டிக்கா, தடகளமா? இந்த விளையாட்டுக்கு எதுக்கு யோகா?’னு கேட்டேன். ‘துப்பாக்கி சுடுதலில், மனதை ஒருநிலைப்படுத்துறது ரொம்ப முக்கியம். பார்வைத்திறன், கைகள், தோள்பட்டைகள் உறுதியாக இருக்கணும். இதுக்கு யோகாவும் தியானமும் ரொம்ப அவசியம்’னு சொன்னாங்க. அப்பாவும் நானும் பயிற்சியில் இறங்கினோம். ரொம்ப சீக்கிரமே அப்பாவை ஓவர்டேக் பண்ணிட்டேன்” எனச் சிரிக்கிறார் அமர்சக்கரவர்த்தி.

2013-ம் ஆண்டு, கோவையில் நடந்த தமிழ்நாடு அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், சாம்பியன்ஷிப் பெற்றதுதான் முதல் வெற்றி. அந்தப் போட்டியில் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

‘‘2014-ல், சென்னையில் நடந்த மாநிலப் போட்டியில் 3 தங்கம், 2 வெள்ளி ஜெயிச்சேன். அதன் மூலம்தான் டெல்லியில் நடந்த போட்டிக்கு செலக்ட் ஆனேன். இந்த ‘குமார் சுரேந்தர் சிங் சாம்பியன்ஷிப் போட்டி’, சர்வதேச அளவில் முக்கியமானது. அபினவ் பிந்த்ரா, ரஞ்சன் போன்ற வீரர்கள் நின்று ஜெயித்த இடத்தில் நானும் நிற்கிறேன் என்பதை நினைத்தபோது பெருமையா இருந்துச்சு. துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் மகாராஷ்டிரா மாநிலம்தான் முன்னிலையில் இருக்கு. அவங்களுக்கு இணையாக தமிழக வீரர்கள் வரணும். அதுக்கு ஆரம்பமா நான் இருப்பேன். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழன் என்ற செய்தியை வெளியிடத் தயாரா இருங்க அங்கிள்” எனத் துப்பாக்கியை உயர்த்தி, புன்னகையோடு சொல்கிறார் அமர்சக்கரவர்த்தி.

செ.சல்மான்

மீ.நிவேதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick