முதல் படம்... முதல் விருது!

-காசிமேடு கலக்கல் ஸ்டார்ஸ்

‘‘உள்ளே வாங்க அண்ணா... சென்னை, காசிமேடுல இருந்து டெல்லிக்குப் போய், குடியரசுத் தலைவரைப் பார்க்கப்போகும் காக்கா முட்டைகள் நாங்கதான்’’ எனக் குறும்புச் சிரிப்புடன் வரவேற்கிறார்கள், அந்த அழகு நட்சத்திரங்கள்.

சமீபத்தில், 62-வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த குழந்தைகள் திரைப்படமாக, ‘காக்கா முட்டை’ என்ற படமும், சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக, ரமேஷ் மற்றும் விக்னேஷ் விருது பெற்றிருக்கிறார்கள்.

‘‘என் பேரு ரமேஷ். என் அப்பா மீன் பிடிக்கிறவர். எனக்கு ரெண்டு அண்ணன்கள். இந்தக் காசிமேடுதான், நாங்க பிறந்து வளர்ந்த இடம். நான் ஆறாவது படிக்கிறேன். விக்னேஷ், ஒன்பதாவது படிக்கிறான். முன்னாடி ரெண்டு பேரும் பக்கத்துப் பக்கத்து வீட்டுலதான் இருந்தோம். இப்போதான் அவன் வேற தெருவுக்குப் போயிட்டான். ஆனா, இப்பவும் ஒண்ணாவே விளையாடுவோம், ஒண்ணாவே ஸ்கூலுக்குப்போவோம். இவன் அப்பாவுக்கும் மீன் பிடிக்கிற வேலைதான். இவனுக்கு ஒரு அக்கா, ஒரு அண்ணன் இருக்காங்க” என்றார் ரமேஷ்.

‘‘இந்தப் படத்தில் நடிக்க எப்படி சான்ஸ் கிடைச்சது?’’

‘‘நான் சொல்றேன்... நான் சொல்றேன். விட்டா, எல்லாத்தையும் இவனே சொல்லிடுவான்” என்றபடி பாய்ந்துவந்த விக்னேஷ், ‘‘எப்பவும் போல நாங்க ரெண்டு பேரும் பீச்ல விளையாடிட்டு இருந்தோம். அப்போ, மணி அண்ணாவும் (இயக்குநர் மணிகண்டன்) அவர்கூட கொஞ்சப் பேரும் போட்டோ எடுத்துட்டு இருந்தாங்க. எங்களையும் கூப்பிட்டு போட்டோ எடுத்தாங்க. ஜாலியா போஸ் கொடுத்தோம். மணி அண்ணா எங்க பக்கத்தில் வந்து, ‘நாங்க ஒரு படம் எடுக்கப்போறோம். அதில், நீங்க நடிக்கிறீங்களா?’னு கேட்டார். ‘சும்மா கலாய்க்கிறாங்கடா’னுதான் தோணுச்சு. அப்போ, என் அம்மா அங்கே வந்து, என்ன விஷயம்னு விசாரிச்சாங்க. அம்மாகிட்டேயும் மணி அண்ணா அதையேதான் சொன்னார். அடுத்த நாள், எங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் வந்து பேசினார். அப்பறம் என்ன? கேமராதான்...

ஆக்‌ஷன்தான்... ஷூட்டிங்தான்’’ என்று சிரித்தார்.

‘‘ஸ்கூலுக்கு நிறைய ‘கட்’ அடிச்சு இருப்பீங்களே?’’

‘‘அதான் இல்லை. நாங்க படிப்பாளிப் பசங்க. ஸ்கூல் லீவு நாளில்தான் நடிக்கப்போவோம். மத்த நாளில் டீச்சர், படிப்பு, ஹோம் வொர்க்னு எதுவும் மாறலை. ஆனா, நடிப்பும் படிப்புமா அந்த நாட்கள் ரொம்ப ரொம்ப ஜாலியா இருந்துச்சு” என்கிறார் ரமேஷ்.
‘‘நடிப்பு உங்களுக்குப் புதுசு ஆச்சே. எப்படி சமாளிச்சீங்க?’’

‘‘வீட்டுல அம்மாகிட்டேயும், ஸ்கூலில் டீச்சர்கிட்டேயும் நாங்க நடிக்காத நடிப்பா? இருந்தாலும் கேமரா முன்னாடி நிறுத்தி நடிக்கச் சொன்னதுமே பயமா இருந்துச்சு. திகைச்சு நின்னுட்டோம். மணி அண்ணாதான் பொறுமையா சொல்லிக்கொடுத்தார். நல்லா நடிச்சா, உடனே ஒரு சாக்லேட் தருவார். அப்புறம், அவருக்கே கட்டுப்படி ஆகாத அளவுக்கு நிறைய சாக்லேட் வாங்க ஆரம்பிச்சுட்டோம்’’ என்றார் விக்னேஷ்.

‘‘சரி, ‘காக்கா முட்டை’ படத்தின் கதை என்ன?”

‘‘அது, சஸ்பென்ஸா இருக்கட்டுமே. சீக்கிரமே, படம் தமிழ்நாடு ஃபுல்லா ரிலீஸ் ஆகப்போகுது. பார்த்துட்டு கதை எப்படி, எங்க நடிப்பு எப்படினு சொல்லுங்க” 

‘‘நீங்க தேசிய விருது வாங்கி இருக்கீங்களே... அதைப் பற்றியாவது சொல்லுங்க.”

‘‘ஆரம்பத்தில் தெரியலை. மணி அண்ணா போனில் சொன்னதும், நான் எங்க அம்மாகிட்ட போய், ‘அம்மா, நாங்க நடிச்ச படம், ‘தேசிய விருது’ வாங்கியிருக்காம். எங்களுக்கும் விருது கொடுப்பாங்களாம்’னு சொன்னேன். அதையும் ஒரு சாக்லேட் மாதிரி நினைச்சாங்களோ என்னமோ, ‘அப்பிடியா சரிடா’னு சாதாரணமா சொல்லிட்டு, அவங்க வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம்தான் பேப்பரைப் பார்த்தும், மணி அண்ணா விளக்கமா சொல்லியும் தெரிஞ்சது விருதோட சிறப்பு’’ என்று ரமேஷ் முடிக்க...

‘‘ஆனா, எனக்குத் தெரியும். இதுக்கு முன்னால தனுஷ் வாங்கியிருக்காங்க, வெற்றிமாறன் வாங்கியிருக்காங்க. இன்னும் நிறையப் பேர் வாங்கியிருக்காங்க, தோ... இப்போ நான் வாங்கப்போறேன், ரமேஷ் வாங்கப்போறான்’’ என ராகமாக இழுத்துச் சொன்னார் விக்னேஷ்.

‘‘தொடர்ந்து நடிப்பீங்களா... உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆகணும்னு ஆசை?’’

‘‘இப்போதைக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லேண்ணா. எங்க ஃப்ரெண்ட்ஸ் பாராட்டுறாங்க, தனுஷ் சார் வந்து செயின் போட்டார், நிறையப் பேர் வாழ்த்துறாங்க. ஆனா, சினிமாவில் தொடர்ந்து நடிக்கிறதா இருந்தாலும் படிப்பை விட மாட்டோம். படிப்பு ரொம்ப ரொம்ப முக்கியம். நல்லாப் படிச்சு, எங்க அம்மா, அப்பாவுக்கு பேரு வாங்கிக் கொடுப்போம். நல்லா நடிச்சும் பேரு வாங்கிக் கொடுப்போம்” என்று  ‘பன்ச்’ அடித்தார்கள்.

முதல் பாட்டு... முதல் விருது!

தேசிய விருதுப் பட்டியலில், ‘சிறந்த  பின்னணிப் பாடகி’ விருதைத் தட்டியிருக்கும் இருக்கும் உத்ரா, பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள்.

                       

    

‘‘என் அண்ணா, வாசுதேவ் கிருஷ்ணா சூப்பரா பியானோ வாசிப்பார். நான் ஏதாவது பாட்டு பாடும்போது, அதுக்கு ஏத்த மாதிரி வாசிச்சு, என்னை ஊக்கப்படுத்துவார். அப்படித்தான் எனக்கு பாடும் ஆசை வந்துச்சு. ‌‘சைவம்’ படத்தில், நா.முத்துக்குமார் அங்கிள் எழுதி, சாரா நடிச்ச ‘அழகே அழகே’ என்ற பாட்டைப் பாடினேன். முதல் பாட்டுக்கே நேஷனல் அவார்டு கிடைச்சது சந்தோஷம். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? என் அப்பாவும் சினிமாவில் பாடின முதல் பாட்டுக்கு நேஷனல் அவார்டு வாங்கினார். நானும் அவரை மாதிரி பெரிய சிங்கர் ஆகணும். இப்போ, விஜய் அங்கிள் நடிக்கிற ஒரு படத்தில் பாடறேன். அதைக் கேட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க” என்கிறார் கொள்ளைச் சிரிப்புடன்.

பா.ஜான்ஸன்

சொ.பாலசுப்ரமணியன்,

 ஆ.முத்துக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick