சிறகு விரிக்கும் இறகுப்பந்து இளவரசி!

‘12 வயதில் 100 கோப்பைகள், 20-க்கும் மேற்பட்ட மெடல்கள். அதுக்கும் மேல, பயங்கரமான குறும்புத்தனம்’ என வர்ஷினியைப் பற்றி அதிரடி அறிமுகம் தருகிறார்கள்.

இறகுப்பந்து போட்டிகளில் எதிர் அணியைச் சூறாவளியாக சுழற்றி எடுக்கும் வர்ஷினி, பல தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்றவர். மதுரை, டி.வி.எஸ். பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார்.

‘‘என் அப்பாவும் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறவங்களும் தினமும் ஈவ்னிங் டைம்ல பேட்மின்டன் விளையாடுவாங்க. செகன்ட் ஸ்டாண்டர்டு படிக்கிறப்பவே, ஆர்வமா பார்த்துக்கிட்டு இருப்பேன். ஒரு நாள், ‘என்னோடு வா’னு அப்பா ஒரு இடத்துக்கு கூட்டிட்டுப்போனார். வாவ்...சர்ப்ரைஸ். அது, பேட்மின்டன் டிரெய்னிங் சென்டர்’’ என்று வியக்கும் கண்களுடன் அந்த நாளுக்கே நம்மை அழைத்துச்செல்கிறார் வர்ஷினி.

வர்ஷினியின் அப்பா விஸ்வநாத், ‘‘நான் கோச் கிட்ட வர்ஷினியின் பேட்மின்டன் ஆர்வம் பற்றி பேசிட்டு இருக்கும்போதே, மட்டையை எடுத்து அங்கே இருந்த பசங்களோடு வர்ஷினி விளையாட ஆரம்பிச்சுட்டா. கோச் சிரிச்சுகிட்டே, ‘இதுக்கு மேலே எதுவும் சொல்ல வேண்டாம். ஆல்ரெடி, வர்ஷினி இங்கே சேர்ந்தாச்சு’னு சொன்னார்” என்று தன் மகளின் தலையைக் கோதிவிட்டார்.

‘‘எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்த உங்களுக்கு சர்ப்ரைஸ் தந்தேன்ல, அதுதான் வர்ஷினி’’ என்று மட்டையைச் சுழற்றிய வர்ஷினி, ‘‘மதுரை மாவட்ட அளவிலான ஒரு போட்டியில் இரண்டாம் இடம் பிடிச்சேன். அங்கே சந்திச்ச வீரர்களோடு பேசியபோதுதான், மற்றவர்களின் திறமைகளையும் ஆட்டத்தின் சின்னச்சின்ன நுணுக்கங்களையும் கவனிச்சேன். ‘ஆஹா... இங்கே உனக்கு முன்னாடி நிறைய பேர் ஓடிட்டு இருக்காங்க. நீ பின்னாடி நடந்து வந்துட்டிருக்கே. முழிச்சுக்க வர்ஷினி’னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். தினமும் அஞ்சு மணி நேரம் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன்” என்கிறார் வர்ஷினி.

அதன் பிறகு, வர்ஷினி என்றால், வெற்றி எனச் சொல்லும் வகையில் இறகுப்பந்தில் சிறகு விரித்துப் பறக்க ஆரம்பித்தார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சப் ஜூனியர் மாநிலப் போட்டியின் 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தார். ஆல் இந்தியா சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானார்.

‘‘ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (School Games Federation of India -SGFI) சார்பில், நவம்பரில் நடக்கப்போகிற தேசிய பேட்மின்டன் போட்டிக்கு, தமிழகம் சார்பில் தேர்வாகி இருக்கும் ஐந்து பேரில் நானும் ஒருத்தி. இதுக்கு முக்கியக் காரணம், என்னோட  டிரெய்னர் சரவணன் சாரும் என் ஃபேமிலியின் ஒத்துழைப்பும்தான். ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டு என்னை என்கரேஜ் செய்றாங்க” என்கிறார் வர்ஷின்.

சாய்னா நேவால் தன்னுடைய ரோல்மாடல் என்று சொல்லும் வர்ஷினி, “ஒலிம்பிக்கில் விளையாடி, இந்தியாவுக்கு தங்கம் வாங்கித்தரணும். இப்போ, நம்ம நாட்டில் கிரிக்கெட்டுக்கு பயங்கர கிரேஸ் இருக்கு. எல்.கே.ஜி பசங்ககூட தெருவில், வீட்டு வரண்டாவில் ஒரு குச்சியை ஸ்டம்ப்பா வெச்சுட்டு விளையாடுறாங்க. அந்த மாதிரி எதிர்காலத்தில் தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு பேட்மின்டன் விளையாடணும். அதுக்குத் தூண்டுகோலாக, என் வெற்றிகள் அமையணும். ரொம்ப ரொம்பப் பெரிய ஆசைதான். ஆனா, நிச்சயம் நடக்கும்” என்று அழகாகச் சிரிக்கிறார் வர்ஷினி.

சு.சூர்யா கோமதி

மீ.நிவேதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick