Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கனவுகளை விதைத்தவர்!

‘கனவு காணுங்கள்; திட்டமிடுங்கள்; செயல்படுங்கள். சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை.  துன்பங்களைச் சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை’ என்ற கனவு நாயகன் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி, நம் அனைவரையும் கண்ணீரில் நனையவிட்டு மறைந்துவிட்டார்.

சிலருக்கு, பள்ளி மாணவராக   இருக்கும்போது, ஒருவர் ரோல் மாடலாக இருப்பார். கல்லூரி மாணவராக மாறும்போது, வேறொருவர் ரோல் மாடலாக இருப்பார். வேலைக்குச் சென்றதும், தங்கள் துறையில் சாதிக்க மற்றொருவரை ரோல் மாடலாக நினைப்பார்கள்.  ஆனால், பள்ளிச் சிறுவர்,  கல்லூரி மாணவர், ஆசிரியர்  மற்றும் பல துறை சார்ந்தவர்களும் தங்கள் ரோல் மாடலாகப் பெருமிதத்தோடு உச்சரித்த பெயர், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

ராமேஸ்வரத்தில் 1931-ம் ஆண்டு, அக்டோபர் 15-ம் தேதி  வறுமையான மீனவக் குடும்பத்தில்  பிறந்த கலாமின் கனவுகள் எல்லாமே வளமானவை. அவைதான், பல மைல் தூரம் நடந்து கல்வி கற்கும் உத்வேகத்தை  அவருக்குத் தந்தது. பகுதி நேரமாக செய்தித்தாள் விநியோகிப்பது, அப்பாவுக்கு வேலைகளில் உதவுவது என ஒவ்வொரு நாளும் தனது உயர்வுக்காக என மட்டும் இல்லாமல், தேசத்தின் உயர்வுக்காகவும் கனவு கண்டு ஓடியவர் கலாம்.

தனது பெரும் முயற்சியால் கல்லூரிப் படிப்பில் சேர்ந்தார் அப்துல் கலாம். அப்போது வினாத்தாள் வெளியாகி, ஒரு வருடக் கல்லூரி வாழ்க்கையை இழந்தார். ஒன்பதாவது ரேங்கைப் பெற்றதால், தவறவிட்ட போர் விமானியாகும் கனவுக்காக கங்கையில் மூழ்கிக் கண்ணீர்விட்டார். உடனடியாக எழுச்சிபெற்று நிமிர்ந்தார். விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்தார். மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்ந்தார்.

எஸ்.எல்.வி.ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தியபோது, முதல் முறை கடலில் விழுந்தது. அடுத்தடுத்த முயற்சிகளை மழையும், புயலும் தடை செய்துகொண்டே இருந்தன. கேலி, கிண்டல்... என விமர்சனங்கள் குவிந்தன.

‘இயற்கையின் ஆற்றல் எல்லை இல்லாதது. கடலை நம்பி வாழ்ந்ததால், அதன் வலிமை எனக்குத் தெரியும். அது நம்முடைய இலக்குகள், திட்டங்களை கண்சிமிட்டும் நேரத்துக்குள் அழித்துவிடும். அவற்றை எதிர்கொண்டு, நம்முடைய வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க வேண்டும்’ எனச் சொன்னவர், அந்த ராக்கெட்டையும் எண்ணற்ற ஏவுகணைகளையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினார்.

அக்னி ஏவுகணை திட்டப் பொறுப்பில் இருந்தபோது எண்ணற்ற தோல்விகள் துரத்தின. பாக்கெட்டில் பதவி விலகல் கடிதத்தை வைத்துக்கொண்டே, இமாலய வெற்றிகளை சாத்தியம் ஆக்கியவர்.

ஒடிசாவில் இயற்கைப் பேரிடரால் வீடுகளை இழந்து, முகவரி தொலைத்து கண்ணீர் துளிர்க்க நின்றுகொண்டிருந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுவன் கண்களில் பட்டான். அவனுக்கு ஆறுதல் சொல்ல அருகே அழைத்த அப்துல் கலாமிடம் அந்தச் சிறுவன், ‘அடுத்த முறை எங்களின் புதிய வீட்டுக்கு நீங்கள் அவசியம் வரவேண்டும்’ என்றான், மிகுந்த நம்பிக்கையோடு.

அந்தச் சிறுவன் உட்பட அத்தனை இந்திய இளைஞர்களுக்கும்  தன்னம்பிக்கையும் உத்வேகமும் அளித்து நல்ல நம்பிக்கைகளை விதைத்த நாயகன் கலாம்.

‘பொக்ரான்’ அணுகுண்டுச் சோதனையில் பெரும் பங்கு இவருக்கு உண்டு. அணு ஆராய்ச்சியில் பல்வேறு வெற்றியின்போது உலகமே கலாமைப் பாராட்டியது. அதையெல்லாம் புன்னகையால் கடந்தவர், உறுப்புகளை இழந்த பிள்ளைகளுக்காக அரை கிலோவுக்கும் குறைவான எடையில் செயற்கைக் கால்களை உருவாக்கிவிட்டு, ‘இதுவே எனக்கு நிறைவான தருணம்’ என மனித நேயம் பேசிய மாமனிதர் அவர்.

2002-ம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கும் சமயம். ‘குடியரசுத் தலைவராக நல்ல நேரத்தில் பொறுப்பேற்கிறீர்களா?’ எனக் கேட்ட கேள்விக்கு, ‘சூரிய மண்டலம் இயங்கும் எல்லா நேரமும் எனக்கு நல்ல நேரம்தான்’ என்றார்.

குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், ஓய்வாக வீட்டில் இருக்கவில்லை. நாடு முழுக்க, உலகம் முழுக்கப் பயணம் செய்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தனது எழுச்சியான உரையால் மாணவர்களுக்கு உத்வேகம் அளித்தார். ‘கனவு காணுங்கள்... நிச்சயம் ஜெயிக்கலாம்’ என்றார்.

சுட்டி விகடன் மூலம் நடந்த ஒரு சந்திப்பில், ‘விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர்... இவற்றில்  உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்த பொறுப்பு எது?’ என ஒரு சுட்டி  கேள்வி கேட்டதற்கு,  ‘ஆசிரியர்’ என அத்தனை விருப்பத்தோடு பதில் சொன்னார். மாணவர்களோடு கலந்துரையாடுவதையே தனது ஒரு நாளின் மிகச் சிறந்த நேரமாக நினைத்தவர், தனது வாழ்வின் கடைசி நொடியிலும் அவர்கள் எதிரிலேயே இருந்தார்.

ஆம், மேகாலயா தலைநகர், ஷில்லாங்கில், ‘அனைவரும் வாழ உகந்த உலகம்’ என்கிற தலைப்பில் பேசிக்கொண்டிருக்கும்போது, இதயம் வலிக்கச் சரிந்தார்; நம்மைவிட்டுப் பிரிந்தார்.

நம் உயர்வுக்காக உழைத்த  நாயகனை  சிரம் தாழ்த்தி வணங்குவோம்!

பூ.கொ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
நாசாவில் மூன்று நாட்கள்!
ஈஸியாக அறியலாம் தசம பின்னங்கள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement
[X] Close