Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீங்க நிக்கலா... குந்தலா?

‘‘எங்களுக்கு கேப் கிடைக்கும் ஒவ்வொரு நிமிஷமும் பி.டி பீரியடுதான். கிளாஸையே கிரவுண்டா நினைச்சு விளையாட ஆரம்பிச்சுடுவோம். நிக்கல் குந்தல், ஜாய் ஆட்டம், லெட்டர் லெட்டர் ஏ, ஒருப்பிட்டியான் திருப்பிட்டியான் எனப் புகுந்து வருவோம்ல...” என உற்சாகத்தோடு வரவேற்றார்கள் கோயம்புத்தூர், நியூ பாரத் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியின் செம பிளேயர் சுட்டிகள்.

விளையாட்டுகளின் பெயர்களே சூப்பரா இருக்கே. எப்படி விளையாடுவது? அதை, அந்தந்த விளையாட்டுக்களில் கில்லாடிகளான சுட்டிகளே சொல்றாங்க கேளுங்க...

நிக்கல் குந்தல்!

‘நிக்கல் குந்தல் கிங்’ என்று பட்டம் வாங்கிய ஐந்தாம் வகுப்பு ஜீவானந்தம், ‘‘நீங்க யார்கூட விளையாடுறீங்களோ, அவங்க கட்டை விரலையும் உங்க கட்டை விரலையும் முட்டவெச்சு, ‘நிக்கல் குந்தல்’ ஒப்பந்தம் போட்டுக்கணும். அப்புறம், ரெண்டு பேரும் எதிரெதிரே நின்னுக்கிட்டு, ‘நிக்கல், குந்தல்’ என மாறி மாறிச் சொல்லிக்கிட்டே நிக்கணும். உக்காரணும். குந்தல்னு சொல்லும்போது கட்டைவிரலை கீழ் நோக்கியும், நிக்கல்னு சொல்லும்போது மேல் நோக்கியும் காட்டணும். தப்பாச் சொல்லிட்டாலோ, தப்பா செய்துட்டாலோ அவுங்க அவுட். அப்படி அவுட் ஆனவங்களை ஜெயிச்சவங்க குட்டிக்கலாம், அடிச்சுக்கலாம். அவுட் ஆனவங்க திருப்பி அடிக்கக் கூடாது. இதுதாம்பா ரூல்ஸ். என்னோடு நிக்கல் குந்தல் அக்ரிமென்ட் போட்டு விளையாட வர்றீங்களா?’’ எனத் தயாரானார் ஜீவானந்தம்.

‘ஆஹா... வம்பு வண்டி ஏறி வருதே” என எஸ்கேப் ஆனோம்.

ஜாய் ஆட்டம்!

இந்த ஆட்டத்தில் பல சாம்பியன்ஷிப் வாங்கிய நான்காம் வகுப்பு கிருத்திகா, ‘‘இந்த விளையாட்டுக்கு ஒரு பேனா போதும். நம்ம உள்ளங்கை ஓரத்துல, ‘ஜாய்’னு எழுதி, வட்டம் வரைஞ்சுக்கணும். நம்மோடு விளையாடுறவங்களும் அதே மாதிரி செய்துக்கணும். அதை அழியாமப் பார்த்துக்கணும். கொஞ்ச நேரம் கழிச்சு, ‘ஜாய்’னு சொல்லிக்கிட்டே உள்ளங்கையைக் காட்டிக்கணும். யாருது அழிஞ்சு இருக்கோ, அவங்க அவுட். ஜெயிச்சவங்களுக்கு சாக்லேட் வாங்கித் தரணும். சில சமயம் ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் கழிச்சுகூட ஜாய் சொல்லிப்போம். அதுவரைக்கும் வியர்வை படாமப் பாதுகாக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? இதுவரைக்கும் நான் யாருக்கும் சாக்லேட் வாங்கிக் கொடுத்தது இல்லை. ஆனா, நிறைய சாப்பிட்டிருக்கேன். என் ஃப்ரெண்டு ஜனனி மட்டும் எனக்கு 15 சாக்லேட் தந்திருக்கா’’ என கெத்தாகச் சொன்னார்.

ஒருப்பிட்டியான் திருப்பிட்டியான்!

‘‘இந்த விளையாட்டுக்கு அஞ்சு பேராவது வேணும். ஒரு கல் வேணும். எல்லோரும் வட்டமா உட்கார்ந்துக்கணும். ஒருத்தர் மட்டும் தூரமாப் போய் திரும்பி நின்னுக்கிட்டு ‘ஒண்ணு, ரெண்டுனு அஞ்சு வரைக்கும் எண்ணணும். அதுக்குள்ளே உட்கார்ந்து இருக்கிறவங்க, ‘ஒருப்பிட்டியான் திருப்பிட்டியான்... ஓரியா மங்கலமா? யார்கிட்ட எவர்கிட்ட? கண்ணை மூடி கதவைச் சாத்துங்கோ’னு சொல்லிக்கிட்டே ஒருத்தர் உள்ளங்கையில் கல்லை வெச்சு மூடிக்கணும். மத்தவங்க

வெறும் கையை மூடிக்கணும். யார்கிட்டே கல்லு இருக்குனு சரியா கண்டுபிடிக்கணும். லஞ்ச் டைமில் வெளியே விளையாடுவோம். டீச்சர் வராதப்போ, கிளாஸ்லயே, ஒவ்வொரு பெஞ்ச் பசங்களும் டீம் போட்டு விளையாடுவோம்” என்ற தனுஷ், ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.

லெட்டர் லெட்டர் ஏ!

‘‘இந்த ‘லெட்டர் லெட்டர் ஏ’ விளையாட்டும் கிட்டத்தட்ட இப்படித்தான். ஆறு பேர் வரிசையா நிக்கணும். அதில் ‘சாட் பூட் த்ரி’ போட்டு அவுட் ஆன ஒருத்தர் மட்டும் 10 அடி முன்னாடி போகணும். அவங்கதான் அவுட் பார்ட்டி. அவர், ‘லெட்டர் லெட்டர்’னு சொல்லி, ஏதாவது ஒரு ஆங்கில எழுத்தைச் சொல்லணும். பின்னாடி நிக்கிறவங்க பெயர்கள்ல அந்த எழுத்து யாருக்கெல்லாம் இருக்கோ, அவங்க ஒரு அடி முன்னாடி வரணும். அவுட் பார்ட்டி, அடுத்த ஒரு லெட்டர் சொல்லணும். அப்படியே நகர்ந்து நகர்ந்து, சொல்றவங்களுக்குப் பக்கத்துல யாரு முதல்ல வர்றாங்களோ, அவங்க அவுட் பார்ட்டி  முதுகைத் தொட்டுட்டு பின்னாடி ஓடிடணும். அப்படி முதுகைத் தொடும்போது பிடிபட்டுட்டா  அவுட். அப்படி அவுட் ஆனவங்க முன்னாடி நின்னுக்கிட்டு சொல்லணும். இப்போ, அந்த விளையாட்டுதான் விளையாடப்போறோம்’’ என்று திவ்ய ப்ரியா சொல்ல, எல்லோரும் உற்சாகமாக விளையாட ஓடினார்கள்.

 என்ன ஃப்ரெண்ட்ஸ் நீங்களும் வர்றீங்களா?

- சா.கவியரசன் படங்கள்: கோ.க.தினேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
வாம்மா காஞ்சனா!
செம ஜாலி ரேஸ்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close