மீன்களும் நாங்களும்...

நீரில் துள்ளித் திரியும் மீன்களைக் கண்டால் நம் அனைவருக்கும் கொள்ளைப் பிரியம் உண்டாகும். அந்த மீன்களோடு தங்கள் வாழ்க்கையை நடத்தி வரும் மீனவர்களைச் சந்திக்க, மேச்சேரியில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீரக்கானூர் மீன்பிடித் துறைமுகத்துக்குச் சென்றோம். 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இங்கே இருக்கிறார்கள். காவிரி ஆற்றுக்குள் பரிசலில் பயணித்தவாறே ஒரு சிறப்புப் பேட்டி...

‘‘இந்த ஆற்றில் என்னென்ன வகை மீன்கள் இருக்கின்றன?’’

‘‘கட்லா, ரோகு, மிர்கால், கெண்டை, கெழுத்தி, குரவை, பஞ்சால், ஜிலேபி, ஆரால், ஆரஞ்சான் என 30 வகையான மீன்கள் இருக்கு.’’

‘‘ஒரு நாளில் எத்தனை மணி நேரம் மீன் பிடிப்பீர்கள்?’’

‘‘விடியற்காலை 4 மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி ஆத்துக்குள்ள போனா, கரை திரும்புறதுக்கு 11 மணி ஆகிடும். ஆத்துக்குள்ள நாலைஞ்சு கிலோமீட்டர் போய் மீன் பிடிப்போம். மீன்கள் குறைவா கிடைச்சா, 10 கிலோமீட்டர்கூட உள்ளே போவோம்.’’

‘‘எந்தக் காலங்களில் மீன்கள் அதிக அளவு கிடைக்கும்?’’

 

‘‘மழைக் காலங்கள்ல ஆத்துக்கு அடியில உள்ள பாறைகள்ல பதுங்கிக்கும். வெயில் காலங்கள்ல வெளியே வந்து விளையாடும். அப்போ, வலையில ஈஸியா மாட்டிக்கும். மீன் வகையைப் பொறுத்து, வலைகளைப் போடுவோம்.’’

‘‘உங்களுக்கு கிடைக்கும் மீன்களை எங்கு விற்பனை செய்கிறீர்கள்?’’

‘‘தமிழ்நாடு அரசு மேட்டூர் அணை மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமா அலுவலர்கள் வந்து, வாங்கிட்டுப் போவாங்க. சங்கத்துக்கு கொடுத்தது போக, மீதியை வெளியாட்களுக்குத் தருவோம்.’’

‘‘நீங்கள் பிடித்த பெரிய மீனின் அளவு என்ன?’’

‘‘இந்தக் காவிரி ஆத்துல சுமார் 50 கிலோ எடை வரைக்கும் மீன்கள் இருக்கு. 65 கிலோ கட்லா மீன்களைக்கூட பிடிச்சிருக்கோம்.’’ 

‘‘மீன்களின் இனப்பெருக்க காலம் எது?’’

‘‘வைகாசி, ஆனி மாதங்கள்தான் மீன்களின் இனப்பெருக்க காலம். ஆடி, ஆவணியில முட்டை இடும். அந்தக் காலத்துல மீன் பிடிக்கும்போது, முட்டை வெச்சிருக்கிற பெண் மீன்கள் வலையில அகப்பட்டா, ஆத்துலேயே விட்டுடுவோம். முட்டை இருக்கும் மீன்களை எப்படிக் கண்டுபிடிக்கிறதுன்னா, வயிறு பெருசா இருக்கும். ஒரு பெண் மீன்ல பல லட்சம் முட்டைகள் இருக்கும்.’’

‘‘ஆற்றில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதாலும், கழிவு நீர்கள் கலப்பதாலும் மீன் வளம் குறைந்துவிடுமா?’’

‘‘நிச்சயமா. ஆத்துல கழிவு நீர் கலக்கிறதாலும், ரசாயன வர்ணம் பூசிய சிலைகளை கரைக்கிறதாலும் ஆத்தோட தன்மை கெட்டுப்போவதோடு, படிப்படியா மீன் இனமும் அழிஞ்சிடும். அதனால ஆற்றை தூய்மையா வெச்சுக்கிறது நம்ம கைலதான் இருக்கு.’’

- ச.வெ.சசின், து.சௌமியா, மு.காவியாஞ்சலி, சு.பூஜா கோ.அ.விக்னேஷ், சௌ.யோகேஸ்வரன், சி.மனோஜ் கண்ணன், கனிமொழி, ஜெயஸ்வரூபா, சுகுனேஷ், கோகுல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick