"எங்களை டைம்டேபிளுக்குள் அடக்காதீங்க!"

-சுட்டி குறும்பட இயக்குநர்

‘‘குழந்தைகள், பெற்றோர் மற்றும் பெரியவர்கள் பேச்சைக் கேட்டு நடக்கணும். அதுல சந்தேகம் இல்லை. ஆனா, குழந்தைகளுக்கு என ஒரு மனசு இருக்கு. அதைப் பெரியவங்க முதல்ல புரிஞ்சுக்கணும்’’ எனப் பொங்கும் சிரிப்புடன் பேசுகிறார் ரெப்ளின்.

மதுரை, டி.வி.எஸ் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் ரெப்ளின், இரண்டு குறும்படங்களை இயக்கி, சமூக வலைத்தளத்தில் லைக்ஸ் குவித்திருக்கும் சுட்டி இயக்குநர்.

‘‘போன வருஷம் சில்ரன்ஸ் டே அன்னிக்கு ‘ரெஸ்ட்லெஸ் பேர்ட்ஸ்’ என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பை எழுதினேன். நிறையப் பேர் பாராட்டினாங்க. ‘இந்த வருஷம் என்ன புக் வெளியிடப்போற?’னு கேட்டாங்க. எனக்கு, அடுத்தடுத்து புதுப்புது விஷயங்களுக்குள் போவதுதான் பிடிக்கும். அதான், புத்தகத்துக்கு அடுத்த கட்டமா கேமராவைக் கையில் எடுத்தேன். கோடை விடுமுறையில் வீடியோ கேமரா இயக்கக் கத்துக்கிட்டேன்.  அனிமேஷன் கிளாஸுக்கும் போனேன்’’ என்கிறார் ரெப்ளின்.

மரம் நடுவதன் அவசியம் பற்றி ‘ஆக்ஸிஜன்’ என்கிற இரண்டு நிமிட அனிமேஷன் படமும், ‘டஸ்ட்’ என்ற மூன்று நிமிடக் குறும்படமும் எடுத்திருக்கிறார்.

மதுரை ‘ட்ரீம் ஸோன்’ பயிற்சி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, குறும்படங்களை வெளியிட்ட நடிகர் சண்முகராஜா, ‘‘குழந்தைகள் முன்று வயது வரை தனித்தன்மையுடன்தான் இருக்கிறார்கள். ஆனால், நாம் சொல்வதைத்தான் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அவர்களின் திறமையை அழித்துவிடுகிறோம். குழந்தைகள் கேள்வி கேட்டுக் கற்கும் சூழலை உருவாக்க வேண்டும்.  ரெப்ளின் இயக்கிய ‘டஸ்ட்’ படம் சொல்லி இருக்கும் விதம் அற்புதம்’’ என்று பாராட்டினார்.

‘டஸ்ட்’ குறும்படத்தில் கதையின் நாயகியாக ரெப்ளினே நடித்திருக்கிறார்.

‘‘நாங்க சொல்றதை, சொல்ற நேரத்தில்தான் செய்யணும்னு பெரியவங்க எங்களை ஒரு டைம் டேபிளுக்குள் அடக்கும்போது, எங்க கற்பனை, விருப்பங்கள் எப்படி தூசு படிஞ்சு போகுதுனு சொல்ல நினைச்சேன். படத்தைப் பார்த்துட்டு பாராட்டின அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியா ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொல்ல ஆசைப்படுறேன். உங்க குழந்தைகளை டைம் டேபிளுக்குள் அடக்காதீங்க. அவங்களை சுதந்திரமா முடிவு எடுக்க வாய்ப்பு கொடுங்க’’ என்கிறார் இந்த சுட்டி இயக்குநர்.

- செ.சல்மான் படங்கள்:  எம்.விஜயகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick