பாக்ஸிங் புயல்!

‘‘நாம செம ஜாலியா விளையாடிட்டு இருக்கும்போது, ‘ஆம்பளைப் பசங்க மாதிரி என்னடி அமர்க்களம்? பொண்ணா, அடக்க ஒடுக்கமா இரு’னு ஒரு குரல் அதட்டும். அந்தக் குரல் அநேகமா அம்மா அல்லது பாட்டி குரலாத்தான் இருக்கும். குறிப்பா, பாட்டிகள் அதிகமாகவே அதட்டுவாங்க. இப்படி உட்காராதே, அப்படி சிரிக்காதே, சத்தமாப் பேசாதேனு நிறைய அட்வைஸ் பண்ணிட்டே இருப்பாங்க. ஆனா, என்னோட பாட்டி ரொம்ப வித்தியாசமானவங்க. எந்த விஷயத்திலும் ஆண், பெண் எனப் பிரிச்சுப் பார்க்கவே மாட்டாங்க. அவங்க கொடுத்த ஊக்கம்தான் இந்த வெற்றிக்குக் காரணம்’’ என்கிறார், குத்துச்சண்டை விளையாட்டில் நாளைய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வரும் அமலா.

சென்னை, பெரம்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் அமலாவுக்கு, சிறு வயது முதலே தற்காப்புக் கலைகளில் ஆர்வம் அதிகம். ‘’அஞ்சு வயசில் ‘டேக்வாண்டோ’ விளையாட்டில் என்னோட பாட்டி சேர்த்துவிட்டாங்க. 2013-ம் ஆண்டு மாநில அளவில்  நடந்த டேக்வாண்டோ போட்டியில் தங்கப்பதக்கம் ஜெயிச்சேன். ‘தேர்டு டான் பிளாக் பெல்ட்’டும் வாங்கினேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி, டி.வி- யில் வந்த ஒரு பாக்ஸிங் விளம்பரத்தைப் பார்த்ததும் பாக்ஸிங் மேலே ஆர்வம் வந்துச்சு. பாட்டிகிட்டே சொன்னதும் உடனே சேர்த்துவிட்டாங்க” என்கிறார் அமலா.

பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவு போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றிருக்கும் அமலா, கிக் பாக்ஸிங் பிரிவில் சிறப்பாக விளையாடுவதைப் பார்த்துவிட்டு, தமிழ்நாடு கிக் பாக்ஸிங் நெட்வொர்க்கைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் கரண் மாஸ்டர், தேசிய அளவில் நடக்க இருந்த ‘தாய் பாக்ஸிங்’ போட்டியில் அமலாவை கலந்துகொள்ள அழைத்திருக்கிறார்கள்.

‘’மூன்று வாரம்தான் பயிற்சி கொடுத்தோம். ரொம்ப ஆர்வமாகவும் வேகமாகவும் கத்துக்கிட்டு போட்டிக்குத் தயாரானாங்க. அக்டோபர் மாதம், மத்தியப்பிரதேசத்தில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியா முழுக்க 300-க்கும் அதிகமானவங்க கலந்துக்கிட்டாங்க. மூன்று கட்டப் போட்டிகளைக் கடந்து, தேசிய அளவிலான தங்கப்பதக்கத்தைத் தட்டிட்டு வந்தாங்க’’ என்கிறார் பயிற்சியாளர் கரண்.

அமலாவின் இந்த தேசிய அளவிலான வெற்றிக்குத் துணையாக இருந்த பாட்டி சுசீலா, “எனக்கு சின்ன வயசில் விளையாட்டுப் போட்டிகள் மேல ஆர்வம் இருந்துச்சு. ஆனா, பெண் பிள்ளைக்கு விளையாட்டு வேணாம்னு என்னோட அம்மா, சேர்த்துவிடலை. ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் குறைஞ்சவங்க இல்லை. தன்னம்பிக்கை இருந்தால், பெண்களும் எல்லா விளையாட்டுகளிலும் ஜொலிக்க முடியும்னு என் பேத்தி அமலா நிரூபிச்சுட்டா!’’ என்கிறார் பெருமிதமாக.

‘‘ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கிட்டு இந்தியாவுக்கு பதக்கம் வாங்கித் தரணும். சிறந்த பாக்ஸிங் கோச்சரா பல மாணவர்களுக்கு குத்துச்சண்டையைச் சொல்லித்தரணும். இப்படி எனக்கு பல லட்சியங்கள் இருக்கு. இந்த மாதிரி பாட்டி இருக்கிற வரைக்கும் எல்லாமே ஈஸிதான்.” என்றபடி  பாட்டியை சந்தோஷமாக அணைத்துக்கொள்கிறார் அமலா.

- ஜெ.விக்னேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick