வருது வருது விசுவக்குடி அணை!

வணக்கம் நண்பர்களே...

தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு அணை, சாத்தனூர் அணை எனச் சொல்லும் அந்தப் புகழ்பெற்ற பட்டியலில் சீக்கிரமே எங்கள் ‘விசுவக்குடி அணை’யும் வரும். இன்னும் திறப்பு விழா காணாத அந்த அணைக்கு ஒரு விசிட் அடித்தோம். அந்த அணை பற்றிய தகவல்கள்...

 ஆங்கிலேயர் ஆட்சி செய்த 1942-ம் ஆண்டில் இருந்தே, ஆலோசிக்கப்பட்ட திட்டம், ‘விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம்’. தற்போது நிறைவேற்றப்பட்டதில், மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

 2011-ல், ‘இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையான, விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும்’ என தனது தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். 2012 செப்டம்பர் 28-ல் அணைக்கான வேலைகள் தொடங்கப்பட்டன.

 இந்த அணைக்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமது, கூடுதல் கவனம் எடுத்து செயல்படுத்தினார்.

 ஜவ்வாது மலை, கல்வராயன் மலை,  சேர்வராயன் மலை ஆகிய கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் பச்சைமலையும் ஒன்று. 527.61 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், கடல் மட்டத்தில் இருந்து 160 முதல் 1072 அடி உயரமும் உள்ள இந்த மலையில், அரிய வகை மரங்களும் மூலிகைகளும் உள்ளன.

 பச்சைமலையில் உற்பத்தியாகி வரும் ஆறுகளில் கல்லாறும் ஒன்று. இந்த மலையில் இருந்து விழும் மயிலூற்று அருவி, பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்களில் ஒன்று.

 விசுவக்குடி அணை 33 கோடி மதிப்பில், கல்லாற்றின் குறுக்கே 31 ஆயிரம் மில்லி கனஅடி நீரை சேமிக்கும் விதமாக 665 மீட்டர் நீளத்தையும், 10.3 மீட்டர் ஆழத்தையும்கொண்டது. இரண்டு மதகுகள் உள்ளன. இதன் மூலம், 1,400 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் என்கிறார்கள்.

 33.7 அடி உயரம்கொண்ட விசுவக்குடி அணையில், கடந்த சில வாரங்களாகப் பெய்த மழையால், நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்தது. புதிய அணையில் இவ்வளவு நீர்மட்டம் கூடாது என்பதால், தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

 பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள முதல் அணை என்பதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் அணையைப் பார்ப்பதற்கு வருகிறார்கள். பச்சைமலை மற்றும் செம்மலையின் இயற்கை அழகையும், அணையில் தேங்கியுள்ள செந்தண்ணீரையும் பார்த்துப் பரவசம் அடைகிறார்கள்.

நேரம் கிடைத்தால், நீங்களும் ஒரு விசிட் வாங்க நண்பர்களே!

- த்ரிஷா, ரித்தின் ஆண்ருசன், தருண், தினேஷ்குமார், ரித்திக் ராஜ், தன்யா, பவானி, சினேகா, ஸ்ரீசக்தி, ஏஞ்சலா ஷைனி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick