Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனதை மயக்கும் மரச்சிற்பங்கள்!

க்கத்தில் உள்ள அரும்பாவூர் கிராமம், மரச்சிற்பங்களுக்கு புகழ்பெற்றது.  வெளிநாட்டவர்களைச் சுண்டி இழுக்கும்   அரும்பாவூருக்கு விசிட் அடித்தோம்.

துண்டுதுண்டான மரக் கட்டைகள், கொஞ்சம் கொஞ்சமாக உயிர்பெற்று, அழகான சிலைகளாக  மாறுவதைப் பார்க்கவே அழகாக இருந்தது. இந்தக் கிராமத்தில், 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், மரச்சிற்பம் வடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். ஓர் அடி முதல் 10 அடி வரையிலான தெய்வீகச் சிலைகள், விலங்கு மற்றும் பறவைச் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. கோயில்களுக்கான தேர்களும் இங்கு உருவாகின்றன.

அரும்பாவூர் மரச்சிற்பங்கள் பற்றி தமிழக அரசின் கலாஸ்ரீ  விருது பெற்ற, சிற்பி முருகேசனின் சகோதரர், ராயப்பன் அவர்களிடம் பேசினோம். 

‘‘எங்க மூதாதையர்கள், பெரிய பெரிய கோயில்களுக்கு பிரமாண்டமான தேர்களைச் செய்து கொடுத்திருக்காங்க. தாத்தா காலத்தில் இருந்தே சிற்ப வேலையில் ஈடுபட்டு வர்றோம். எங்க அப்பா பெயர், பெருமாள். நான் அவர்கிட்டேதான் மரச் சிற்பங்கள் செய்யக் கத்துக்கிட்டேன். ஏழாவது வரைக்கும்தான் படிச்சேன். 50 வருஷமா  செய்துட்டு இருக்கேன்’’ என்றார்.

 

சிலை செதுக்குவது பாரம்பரியக் கலையாக இருப்பதால், இந்த ஊரில் இருக்கும் சிறுவர்கள், பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோருக்கு உதவியாக இருந்து அழகழகான சிலைகளைச் செய்து அசத்துகிறார்கள்.

இந்த வேலையில் இருப்பவர்களுக்கு வருமானம் எப்படி?

‘‘வெளிநாடு அளவுக்கு புகழ்பெற்றது என்றாலும், எங்களுக்கான வருமானம் குறைவுதான். எங்க குடும்பம், ஆரம்பத்தில் ரொம்பக் கஷ்டப்பட்டது. இப்போது பரவாயில்லை. சிப்காட்டில் இடம் பிடிச்சு தொழில் செய்துவருகிறோம். எங்க யூனிட்டில் 15 பேர் வேலை செய்யுறாங்க. ஆண்கள், சிற்பம் செதுக்குவாங்க. பெண்கள், சிலையை மெருகூட்டுவாங்க’’ என்றார்.

இந்தச் சிற்பங்கள் எந்த மரத்தில் செய்யப்படுகின்றன?

‘‘மாவிலங்கை, பூவாகை மற்றும் தேக்கு உள்ளிட்ட மரங்களில் சிற்பங்களைச் செதுக்குவோம். இந்த மரங்களை,  டிம்பர்்களில் இருந்து வாங்கி வருவோம். அதன் மேலே  உள்ள வெள்ளைப் பாகத்தை நீக்கிடுவோம். அந்த மரத்தில் பூச்சி, பொட்டு இருந்தால் அகற்றிடுவோம். இந்த வேலைகள் எல்லாம் முடிச்சாதான், சிலை செய்றதுக்கான பக்குவத்துக்கு தயாராகும். வாங்க, அதைப் பார்க்கலாம்’ என்று எங்களை பட்டறையின் உள்ளே அழைத்துச் சென்றார்.

முதற்கட்டம் செதுக்கிய மரங்களில், எந்த உருவத்தின் சிலையைச் செய்யப்போறோமோ, அதை வரைந்து, எட்டு பாகங்களாகப்  பிரிச்சுக்குவோம். இந்த வேலைக்கு பொறுமையும், மனதை ஒருநிலைப்படுத்துவதும் ரொம்ப முக்கியம். உடல், கை, கால்கள் என எல்லாத்தையும் செதுக்கி முடிச்சு, கடைசியாகத்தான் முகம் மற்றும் கண்களைச் செதுக்குவோம்’’ என்றவர், ஒரு சிலையைச் செதுக்கிக் காண்பித்தார்.

‘‘தாத்தா, நாங்களும் செதுக்கிப் பார்க்கலாமா?’’ என ஆவலுடன் கேட்டோம்.

 

‘‘அதுக்கென்ன புள்ளைங்களா, தாராளமா செதுக்குங்க” என்றவர், எப்படிச் செதுக்க வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தவாறு பேச ஆரம்பித்தார்.

 

‘‘சிலையைச் செதுக்கி முடிச்சதும், வர்ணப்பூச்சு நடக்கும். பண்டைய காலங்களில் பயன்படுத்திய  இயற்கை முறையிலேயே வர்ணங்களை உருவாக்கி, பூச்சு வேலை செய்வோம். அதுதான், இந்த ஊர்ச் சிற்பங்களுக்கான சிறப்பு. தேர் என்றால், மூன்று அடிக்கு ஒரு பாகம் என மூன்றாகப் பிரித்துக்கொண்டு வேலையை ஆரம்பிப்போம். இங்கு தயாராகும்  சிற்பங்கள், ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் வரை விற்பனையாகுது. நாங்கள் செய்துகொடுக்கும் சிலைகள், ஏஜென்சிகள் மூலம் பாண்டிச்சேரி, சென்னை, மும்பை, டெல்லி, ஹைராபாத் என இந்தியாவில் ஆரம்பிச்சு, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா என வெளிநாடுகளுக்கும் போகுது’’ என்றார் ராயப்பன் தாத்தா.

கடவுள் சிலைகளைத் தவிர, தனிப்பட்ட மனிதர்களின் சிலைகளும்  செய்யப்படுவதாகச் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது.

‘‘சிலர், அவங்களுக்கு விருப்பமானவங்க, அவங்க அம்மா புகைப்படங்களைக் கொடுத்து, சிலை செய்து தரச் சொல்வாங்க. அவங்க  விருப்பப்படி செய்துகொடுப்போம். நாங்க பெருசா படிக்கல, ஆனா எங்க பிள்ளைகளை நல்லா படிக்கவெச்சிருக்கோம். எங்க பிள்ளைகளில் சிலர் டாக்டருக்குக்கூட படிச்சிருக்காங்க. ஆனா, எவ்வளவு உயர்ந்த நிலைக்குப் போனாலும் அவங்களும்  இந்தத் தொழிலை தெய்வீகமாக நினைச்சுச் செய்றது உண்டு.  ஏன்னா, இந்தக் கலை அழிஞ்சிடக் கூடாது பாருங்க’’ என்கிற ராயப்பன் தாத்தா முகத்தில் அக்கறையான புன்னகை.

- ஈஸ்வர்யா, நிவாஷினி, சினேகா, சஞ்சயா, அருண்குமார், தே.ஆதித்யன், சி.ஆதித்யன், அமர்தேஷ், கார்த்திக் பிரபு.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
எங்கள் பள்ளி!
புக் கிளப்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close