சதுரங்க ராஜா!

‘‘சதுரங்கம், விருதுக்கான விளையாட்டு மட்டும் கிடையாது. வாழ்க்கையின் பல்வேறு சமயங்களில், இக்கட்டான சூழ்நிலைகளில், நல்ல முடிவை எடுப்பதற்கு நம்மை தயார்படுத்தும் அற்புதமான ஆசிரியர்’’ என அழகாகச் சிரிக்கிறார் இனியன்.

ஈரோடு, இண்டியன் பப்ளிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் இனியன், செப்டம்பர் மாதம் ஜம்முவில் நடந்த ‘நேஷனல் சப் ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்.

‘‘எல்லாக் குழந்தைகளுக்கும் அவங்களோட அப்பா, அம்மாதான் முதல் சூப்பர் ஹீரோஸ். எனக்கும் அப்படித்தான். என் அம்மா சரண்யாவும், அப்பா பன்னீர் செல்வமும் ஓய்வு நேரத்தில் செஸ் விளையாடுவாங்க. அதைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்துச்சு. ஐந்து வயசில் விளையாட ஆரம்பிச்சேன். அவங்களோட என்கரேஜ், எனக்கு பெரிய பலம்’’ எனத் தனது சதுரங்க ஆட்டத்தின் ரியல் ராஜா, ராணியை அறிமுகம் செய்கிறார்.

கோவை, டெல்லி, அஹமாதாபாத் எனத் தொடங்கி சீனா வரை சென்று பல்வேறு வெற்றிக் கோப்பைகள், பதக்கங்களை அள்ளிவந்து, தனது வீட்டில் நிறைத்து இருக்கிறார்் இனியன்.

‘‘சதுரங்கத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும்  இன்ஸ்பிரேஷன் ஆனந்த் அங்கிள்தான். எனக்கும் அப்படித்தான். ஆனந்த் - கார்ல்ஸன் இடையே நடந்த வேர்ல்டு செஸ் சாம்பியன்ஷிப் செலிபிரேஷன்ல நானும் கலந்துக்கிட்டேன். ஆனந்த் அங்கிளை மீட் பண்ணிப் பேசினேன். ‘உங்களைப் போல கிராண்ட் மாஸ்டர் டைட்டில் வின் பண்ணுவேன். அகெய்ன் மீட் பண்ணுவோம் சார்’னு சொன்னேன். அதையேதான் உங்களுக்கும் சொல்றேன். அகெய்ன் மீட் பண்ணுவோம்’’ எனச் சிரிக்கிறார் இந்தக் குட்டிச் சதுரங்க ஹீரோ.
 

- ச.ஆனந்தப்பிரியா படங்கள்: க.சத்தியமூர்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick