தன்னம்பிக்கை தந்த தளிர்கள்!

த.க.தமிழ் பாரதன்படம்: கே.குணசீலன்

'எனக்கு, வெளிநாட்டு சாக்லேட் சாப்பிட  ஆசை.  பக்கத்து வீட்டு அண்ணன் சதீஷ், சிங்கப்பூர்ல இருந்து வந்திருந்தார். அவர்கிட்ட கேட்டதுக்கு, 'இந்தமுறை சிங்கப்பூர் போயிட்டு வரும்போது நிச்சயம் சாக்லேட் வாங்கிட்டு வர்றேன்’னு சொன்னார். ஆனால், அன்னைக்கு ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா, சதீஷ் அண்ணன் விஷம் குடிச்சு செத்துட்டதா அம்மா சொன்னாங்க. வீட்டுல ஏதோ சண்டையாம்' என கண் கலங்குகிறாள் ஏழாம் வகுப்பு தீபா. 

ஆறாம் வகுப்பு மகாதேவியின் அப்பாவும், அகல்யாவின் அப்பாவும் தற்கொலையில் இறந்தவர்கள்தான். ஏழாம் வகுப்பு அஜயன் சிரித்தால், ரொம்ப அழகாக இருக்கும். அவன் அம்மா தற்கொலை செய்துகொண்ட பின், அவன் முகத்தில் சிரிப்பே இல்லை. இப்படி... அந்தப் பள்ளியில் படிக்கும் பலரின்  அப்பா, அம்மா, அண்ணன்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்தில் இருக்கும் காளாச்சேரி மேற்கு என்ற கிராமம், பார்க்க பச்சைப்பசேல் என்றிருக்கிறது. ஆனால், கிராமத்துக்குள் நுழைந்தால், கலங்கவைக்கும் தற்கொலைக் கதைகள்.

''உறவினர்கள் செத்துட்டதா சொல்லி அடிக்கடி பசங்க லீவ் போடுவாங்க. அப்பதான், ஒரு கணக்கு எடுத்துப் பார்த்தோம். இயற்கையா சாகுறவங்களைவிட தற்கொலை அதிகமா இருந்தது. இதைத் தடுத்து நிறுத்த, மாணவர்களோட சேர்ந்து களம் இறங்கினோம்'' என்கிறார், இந்த ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் ஆனந்த். இவர், தனது மாணவர்களுடன் இணைந்து உருவாக்கிய ஆய்வறிக்கை, இந்திய அளவில் பள்ளிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் பரிசைப் பெற்றுள்ளது.

'' 'டிசைன் ஃபார் சேஞ்ச்’  (Design for change) ) என்கிற அமைப்பு, ஆண்டுதோறும் இந்திய அளவில் நடத்தும் போட்டி இது. நாம் படிக்கும் பள்ளிக்கூடத்திலும், ஊரிலும் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் யோசனைகளைத் தெரிவிக்கும் வீடியோ புராஜெக்ட் தயார்செய்ய வேண்டும். நாங்கள், இந்தத்  தற்கொலைகளைப் பற்றி ஆய்வுசெய்து புராஜெக்ட் தயார்செய்தோம்'' என்கிறார், மாணவி பாரதி.

''அடிக்கடி யாரோ ஒருவர் கிராமத்தில் இறந்துகொண்டே இருப்பதால், மாணவர்களாகிய நாங்களும் பாதிக்கப்பட்டோம். ஆசையாக இருந்த ஓர் உறவினர் திடீரென இல்லாமல் போய்விடும் சோகம்.  வீட்டுச் சூழ்நிலையும் சோகமாக இருக்கும். படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இந்த நிலையை மாற்றுவதற்குத்தான் களம் இறங்கினோம்'' என்கிறார், மாணவர் மனோஜ்.

இப்படி ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து கிராமத்தில் களப்பணி செய்தனர். முதலில், 'நம் கிராமத்தில் அதிகம் தற்கொலைகள் நடக்கின்றன’ என்பதை அந்த ஊரில் உள்ளவர்களுக்கு உணர்த்தினார்கள். குடிப்பழக்கம், தன்னம்பிக்கை இல்லாதது போன்றவையே தற்கொலைகளுக்குக் காரணங்களாக இருக்கின்றன என்பதைக் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, விழிப்புஉணர்வு நாடகம், பேரணி எனப் பல வகையில் பிரசாரம்செய்து, 'தற்கொலை செய்யக் கூடாது’ என்பதை, மக்களின் மனங்களில் அழுத்தமாகப் பதியவைத்தனர்.

''அறிவுரை கூறினால் யாருக்கும் பிடிக்காது. அதனால், வீதி நாடகங்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புஉணர்வை ஏற்படுத்தினோம். ஊர்த் தலைவரின் உதவியுடன், பெரியவர்கள் மற்றும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்தோம். வேலை இல்லாத பெண்களுக்கு, கூடை பின்னக் கற்றுக்கொடுத்தோம்' என்கிறார், ஆசிரியர் ஆனந்த்.

''ஊர் மக்களிடம் உண்டியல் குலுக்கி நிதி சேர்த்து, பால்வாடி மண்தரைக்கு டைல்ஸ் போட்டோம். இதையெல்லாம் வீடியோ எடுத்து அனுப்பினோம். இந்தியாவின் டாப் 100 பள்ளிகளில் ஒன்றாக எங்கள் பள்ளி தேர்வு செய்யப்பட்டது. 5,000 ரூபாய் பணமும், 10,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களும் கிடைத்தன. டாப் 20 பள்ளிகளில் ஒன்று என்று, சிறப்புப் பரிசும் கிடைச்சது' என்கிறார்கள், இந்தப் பள்ளியில் படிக்கும் ஹேமலதா, மாதவன் பிரபாகரன்.

'எங்களோட இந்த முயற்சியால், இரண்டு ஆண்டுகளாக யாரும் தற்கொலை பண்ணிக்கலை. இனியும் பண்ண மாட்டாங்க' என்ற அவர்களின் குரல்களில், மாற்றத்தை உண்டாக்கிய மகிழ்ச்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick