வெள்ளி விழா நாயகன்!

வெ.ஜனனி

றந்து பறந்து பந்தை விளாசித் தள்ளும் இந்திய டென்னிஸ் புயல் லியாண்டர் பயஸூக்கு, டென்னிஸ் விளையாட்டில் இது வெள்ளி விழா ஆண்டு. 

விளையாட்டுத் துறையில் 20 வருடங்களுக்கு மேல் துடிப்பாக இருப்பது அபூர்வமான விஷயம். 1989ம் ஆண்டு, தனது 16வது வயதில் கிரிக்கெட் விளையாட்டில் அறிமுகமான சச்சின், 2011ல் ஓய்வு பெற்றார். 24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். அதுபோல, 1991ம் ஆண்டு டென்னிஸில் அறிமுகமான பயஸ், இன்னமும் அசத்திவருகிறார்.

1973 ஜூன் 17ம் தேதி, கொல்கத்தாவில் பிறந்தவர் லியாண்டர். இவர் பிறப்பதற்கு முன் நடந்த, 1972ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற வீரர்களில் ஒருவர், லியாண்டரின் அப்பா வெஸ் பயஸ். லியாண்டரின் அம்மா ஜெனிஃபர் பயஸ், சிறந்த கூடைப்பந்து வீரர்.

விம்பிள்டன்  ஜூனியர் மற்றும் யு.எஸ். ஓப்பன் போட்டிகளில் 1991ம் ஆண்டில் பட்டம் வென்று, அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார் லியாண்டர் பயஸ். அதன் பிறகு, அவரது வெற்றிக் கணக்குகளும் பட்டங்களும், வாங்கும் விருதுகளும் இன்று வரை தொடர்கிறது. இந்தியாவில், டென்னிஸ் விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகமானதில், பயஸூக்கு முக்கியப் பங்கு உண்டு.

''நாம் நினைப்பது போல எப்போதும் ஜெயிக்க முடியாது. தோல்வியும் வர வேண்டும். அது நமக்கு நிறையக் கற்றுக்கொடுக்கும்' என்பார் பயஸ்.

ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற (1992  2012) முதல் இந்திய வீரர், என்ற பெருமை, லியாண்டருக்கு உண்டு. 1996 ஒலிம்பிக், ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் வெண்கலம் வென்றார். ஆசிய விளையாட்டு, விம்பிள்டன், யுஎஸ் ஓப்பன் டென்னிஸ், ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ், டேவிஸ் கோப்பை என எல்லாவற்றிலும் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். பத்மஸ்ரீ, ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜூனா விருதும், 2014ம் ஆண்டில், இந்திய அரசின் உயரிய பத்ம பூஷன் விருதையும் பெற்றவர்.

'இந்தியன் எக்ஸ்பிரஸ்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் மகேஸ் பூபதியுடன் இணைந்து, இந்தியாவுக்கு பல பதக்கங்களை அளித்தவர். டென்னிஸில் விளையாடும்போது, பேசுவதற்கு நேரமே இருக்காது. ஆனால், பேசிவைத்த மாதிரி இவர்களின் விளையாட்டு, ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.

இந்த வெள்ளி விழா டென்னிஸ் பயணத்தில், பல்வேறு சோதனைகளையும் சந்தித்தவர் லியாண்டர் பயஸ். மகேஸ் பூபதியுடன் பிரச்னை உண்டாகி, பிரிந்தார். 2010ம் ஆண்டு, மூளையில் கடுமையான நோய் தாக்கியது. இனி அவரால் விளையாட முடியுமா... உயிரோடு மீண்டு வருவாரா என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் உருவானது.

புதிய சக்தியுடன் மீண்டுவந்து டென்னிஸ் பதக்க வேட்டையில் இறங்கினார். 42 வயதிலும் இளம் வீரர்களோடு போட்டியிட்டு மட்டையைச் சுழற்றிக்கொண்டிருக்கிறார் இந்த சூப்பர்மேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick