ஆஹா அறிவியல்!

வியக்கவைக்கும் அறிவியல் உண்மைகள்பேராசிரியர் அ.சுப்பையா பாண்டியன், சொ.பாலசுப்ரமணியன்

ஊதினால் தண்ணீர் கொட்டும்!

தேவையான பொருள்கள்: இரண்டு கண்ணாடி டம்ளர்கள், உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் தட்டு, தண்ணீர், அட்டை.

செய்முறை: இரண்டு கண்ணாடி டம்ளர்கள் முழுவதும் நீர் நிரப்பவும்.  ஒரு டம்ளரை தட்டின் மேல் வைக்கவும். இன்னொரு டம்ளரின் மேல் அட்டையை வைத்து, கையால் மூடியபடி தலை கீழாகக் கவிழ்த்து, நேராக உள்ள கண்ணாடி டம்ளரின் மேல் வைக்கவும். அடுத்து, இரண்டு கண்ணாடி டம்ளர்களின் நடுவே உள்ள அட்டையை மெதுவாக எடுக்கவும். இரண்டு டம்ளர்களும் சரியாகப் பொருந்த வேண்டும். பிறகு, கண்ணாடி டம்ளர்கள் பொருந்தும் இடத்தில், உறிஞ்சுகுழலை வைத்து, மெதுவாக ஊதவும். மேலே உள்ள டம்ளரில் இருந்து தண்ணீர் வெளியே வருவதையும்,  காற்றுக் குமிழ்கள் மேல் டம்ளருக்குள் செல்வதையும் பார்க்கலாம். இது எப்படி?

கண்ணாடி டம்ளர்களின் மிகச் சிறிய இடைவெளியில் உள்ள நீர்ப் படலத்தில் உள்ள நீர் மூலக்கூறுகள், ஒன்றை ஒன்று வெளிநோக்கி ஈர்க்கும். ஒரு திரவத்தின் மேல் பரப்பு, மூலக்கூறுகளின் ஈர்ப்பு விசையால் இழுத்துக் கட்டப்பட்ட ஜவ்வைப் போல செயல்படும். இதுவே, பரப்பு இழுவிசை ஆகும்.

நீரின் பரப்பு இழுவிசைதான், மேல் டம்ளருக்குள் இருக்கும் நீரைத் தாங்குகிறது. உறிஞ்சுகுழல் வழியாகக் காற்றை ஊதும்போது, அங்கு உள்ள நீர்ப்பரப்பு உடைந்து, பரப்பு இழுவிசை நீக்கப்படுகிறது. இதனால், மேல் டம்ளருக்குள் காற்றழுத்தம் குறைந்து, தண்ணீர் கொட்டுகிறது. டம்ளருக்குள் உள்ள காற்றழுத்தக் குறைவைச் சமப்படுத்துவதற்கு, வெளியே உள்ள காற்று, மேல் டம்ளருக்குள் செல்கிறது. தண்ணீர் கொட்டுவதற்கு, காற்றழுத்தமும் பரப்பு இழுவிசையும்தான் காரணம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

பயன்பாடு: மழைத்துளிகள், கோள வடிவில் இருப்பதற்கு நீரின் பரப்பு இழுவிசையே காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick