Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கனவு ஆசிரியர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இசையால் வசீகரிக்கும் ஆசிரியர்ர.அரவிந்த், உ.பாண்டி

''சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

 செல்வக் களஞ்சியமே

என்னைக் கலிதீர்த்தே உலகில்

ஏற்றம் புரியவந்தாய்...''

ராமநாதபுரம் மாவட்டம், கமுதக்குடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து  பாட்டுச் சத்தம் சுண்டி இழுத்தது. உள்ளே நுழைந்தால், மரத்தடியில் எலெக்ட்ரானிக் கீபோர்டை இசைத்துக்கொண்டிருந்தார் ஒருவர்.  மாணவர்கள் சேர்ந்து பாட, மாணவிகள் சிலர் அழகாக நடனமாட, பள்ளிக்கூடமே ஆனந்த இசையில் மூழ்கியிருந்தது.

''இவர்தான் எங்க இசை ஆசிரியர் ராஜதுரை. இவர் இங்கே வந்ததிலிருந்து இந்தப் பள்ளியே மாறிடுச்சு' என்று பெருமிதத்துடன் அறிமுகம் செய்தார், தலைமை ஆசிரியர் பாஸ்கரன்.

''பரமக்குடி அருகே உள்ள கும்முகோட்டை என்னோட ஊர். பிறவியிலேயே இரண்டு கண்களும் தெரியாது. இசை மீது கொள்ளை ஆர்வம். இசையில் டிப்ளமோ வாங்கியிருக்கேன். 2013-ம் ஆண்டு, சன் டி.வியின் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்று வரை போயிருக்கேன். 2011-ம் ஆண்டு முதல் இங்கே இசை ஆசிரியராக இருக்கேன். வாரத்தில் மூன்று நாட்கள் இசை வகுப்பு நடக்கும். பள்ளி இசை ஆசிரியர்களின் வேலை, கர்னாடக சங்கீதத்தைச் சொல்லிக்கொடுக்கிறதுதான். சும்மா, 'ஸரிகமபதநி’ சொல்லிட்டுப் போறதில் எனக்கு விருப்பம் இல்லை. பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களின் பாடல்கள் மூலமாக, மாணவர்களின் மனதில் நல்ல கருத்துகளை விதைத்தால், அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்க முடியும்' என்கிறார் ராஜதுரை.

இசைக் கருவியை வாசிப்பதற்கான பயிற்சியையும் மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார் ராஜதுரை. சொந்தமாக பாடல்களை எழுதியும், மாணவர்களை எழுதச் சொல்லியும் ஊக்கப்படுத்துகிறார்.

''நாலு வருஷத்துக்கு முன், நம்ம ஸ்கூலுக்கு மியூஸிக் டீச்சர் வரப்போறார்னு சொன்னபோது, எங்களுக்கு பெருசா ஆர்வம் இல்லை. என்ன சொல்லிக்கொடுத்திடப் போறார்னுதான் இருந்தோம். ஆனால், வந்த கொஞ்ச நாளிலேயே எங்களை கவர்ந்துட்டார். 'உங்களாலும் சொந்தமாகப் பாடலை உருவாக்க முடியும். கருத்துள்ள பாடலை எழுதிட்டு வாங்க. அதுக்கு நான் இசை அமைக்கிறேன்’னு சொன்னார். அவர் கொடுத்த ஊக்கத்தால்தான் நிறையப் பேர் பாடல்களை எழுதிட்டு வந்து படிச்சுக் காட்டுவோம். அதில், அவர் திருத்தங்கள் சொல்வார். இதோ பாருங்க, இந்த நோட்டுப் புத்தகம் முழுக்க நானே எழுதின பாடல்கள் இருக்கு' எனப் பெருமையுடன் காட்டினார், அழகர்சாமி என்ற மாணவர்.

வரலாறு, அறிவியல் போன்றவற்றில் வரும் சில கடினமான பாடங்களையும்கூட இசை மூலம் நடத்திப் புரியவைக்கிறார் ராஜதுரை.

''ஒரு பாடம் கடினமாக இருப்பதாக உணரும்போது, மாணவர்களுக்கு படிப்பு மீது பயம் வந்துவிடும். அந்தப் பயம் வந்துவிட்டால், ஆசிரியர் மற்றும் பள்ளியின் மீதும் வெறுப்பு உண்டாகிவிடும். கடினமான வரலாற்று நிகழ்வுகள், ஆண்டுகள், அறிவியல் ஃபார்முலாக்களை ஆடியும் பாடியும் சொல்லும்போது மனதில் பதியும். அதைத்தான் இசை மூலம் செய்கிறேன். இந்தப் பள்ளியில் 120 குழந்தைகள் படிக்கிறார்கள். அத்தனை பேரும் இந்தப் பள்ளியைவிட்டு மேல் வகுப்புக்குச் செல்லும்போது, புத்திசாலிகளாக, தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகச் செல்ல வேண்டும். அதுதான் என் ஆசை' எனச் சொல்லிவிட்டு, 'சின்னஞ்சிறு கிளியே’ பாடலைத் தொடர்கிறார் ராஜதுரை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
டியாண்டோல் போட்டி!
கிட்ஸ் கிச்சன்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement
[X] Close