Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தடக் தடக் கைத்தறி... கற்றுக்கொள்ள நாங்க ரெடி!

பிரேமா நாராயணன், தி.ஹரிஹரன்

''ஸ்கூலுக்குப்போய் தறி நெய்யப்போறோம். நீங்களும் வர்றீங்களா ஆன்ட்டி?'' என ஜாலியாகக் கிளம்புகிறார்கள் சுட்டிகள்.

 சென்னை, திருவான்மியூர், கேஸ்கேட் மான்டிசோரி பள்ளி  (Cascade Montessori School) வளாகத்தில் நுழையும்போதே, 'தடக் தடக்... தடக் தடக்’ என  தாள லயத்தோடு வரவேற்கிறது, கைத்தறி நெய்யும் ஓசை.

கிராஃப்ட் அறைக்குள் தறியில் உட்கார்ந்து அழகாக நெய்து கொண்டிருக்கிறார், சுட்டிகிரண்.

''ஓ... எங்களுக்கு முன்னாடியே வந்துட்டியா?' என்றபடி  இணைந்துகொண்டார்கள்  பருண் மற்றும் சிருஷ்டி.

அங்கிருந்த ராட்டையில், இருவரும் வண்ண நூலைச் சுற்றத் தொடங்க, பழைய துணியில் மிதியடி தயாரிக்கும் மும்முரத்தில் இருந்தார் நீல் ஷஷாங்க்.இன்னும் சிலர் வந்துசேர்ந்ததும், கலகலப்பானது ஹால்.

''சிருஷ்டி, அந்தக் குச்சி ராட்டினத்தைச் சுத்து.''

''பருண், நூல் கட்டையை உள்ளே கொடுத்து வாங்கு...'' என  உற்சாகக் குரல்கள்.

''பார்த்து, பொறுமையா செய்ங்க' என்று அவர்களை  வழிநடத்திய மணி, ''நான், ஆந்திர மாநிலம், புத்தூரில் தலைமுறை தலைமுறையா நெசவு நெய்யும் குடும்பத்தில் பிறந்தவன். சேலை, வேட்டி, லுங்கி, சுடிதார் எல்லாம் நெய்வேன். இந்த ஸ்கூலின்  கருணா மேடம், கைத்தறியில் பிஹெச்.டி பண்ணியிருக்காங்க. மாணவர்களுக்கு, கைத்தொழிலின் பெருமை தெரியணும்னு இந்த வகுப்பைத் தொடங்கினாங்க.  சனிக்கிழமைகளில் பயிற்சி நடக்கும்' என்றார்.

பொதுவாக, தறி போடுவதற்கு 13 அடிக்கு 9 அடி இடம் தேவை. ஆனால், நான்குக்கு நான்கு அடிகளிலேயே தறியைப் போட்டு அசத்தி இருக்கிறார் மணி. ஆர்வம் உள்ள பெற்றோர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் கைத்தறி வகுப்பு நடக்கிறது.

''இதெல்லாம் நாங்க நெய்ததுதான் ஆன்ட்டி'' என்று கலர், கலர் துணிகளைக் காட்டிய சுட்டிகளின் முகங்களில் மலர்ச்சி.

''பெரிய தறியில் உட்கார்ந்து நெய்வதற்குக் கால் எட்டாத எங்களை மாதிரி குட்டிப் பசங்களுக்கு, இந்த போர்ட்டபிள் கைத்தறி. இதில், 10 விதமான துணிகளை நெய்யலாம். எங்கே வேணும்னாலும் சுலபமாக நகர்த்திட்டுப் போகலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல கர்ச்சீஃப் ரெடியாகிடும்' நடைவண்டியைவிட கொஞ்சம் பெரியதாக இருந்த தறியைக் காட்டி சொன்னார்கள், அனன்யா மற்றும் மஹின்.

பெரிய தறியில் நெய்துகொண்டிருந்த கிரண், ''இங்கே வந்து பாருங்க ஆன்ட்டி. கலர்ஃபுல்லான நீள மேட் (விரிப்பு) இது. ரெண்டு வாரத்துக்குள் தயாரிச்சுடுவோம். முதலில், நூலை இழைகளாகப் பிரிச்சுக்கணும். கர்ச்சீஃப், துண்டு மாதிரி சின்னத் துணிகளுக்கு 1,500 இழைகள் வேணும். புடைவைக்கு 4,000 இழைகள் வேணும் ஆன்ட்டி'' என்று அனுபவ  நெசவாளியாகப் பேசினார்.

கிரணும் ஹரீஷும் நூல் சுற்றுவது, ராட்டினம் சுற்றுவது, நெய்வது என எல்லாவற்றிலும் எக்ஸ்பர்ட்.

2011-ல் இந்தப் பள்ளியைத் தொடங்கிய வித்யா சங்கர், 'ரிலீஃப் ஃபவுண்டேஷன்’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர். கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக, வாலன்டியர்களின் உதவியுடன் சேவை செய்துவருகிறார்.

"குழந்தைகளின் கண்கள், கைகள், மனம் மூன்றும் ஒன்றிணைந்து செயல்படும் போதுதான் மூளையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். அந்தக் கைகளுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்கும் நடனம், பாட்டு, தையல், சமையல், தோட்டக்கலை ஆகியவற்றை சொல்லிக்கொடுக்கிறோம். இந்தப் பயிற்சியில் ரொம்ப ஆர்வமா ஈடுபடுறாங்க. சனிக்கிழமைகளில் 100 சதவிகிதம் அட்டென்டண்ஸ் இருக்கும். எட்டு மாதப் பயிற்சி அடிப்படையில், ராஜாஜி பவனில் நடக்கும் 'டையிங் அண்ட் ப்ரின்டிங்’ என்ற இரண்டு வாரப் பயிற்சிக்கு எங்க பள்ளியிலிருந்து மூன்று பேர் தேர்வாகி இருக்காங்க'' என்ற வித்யா சங்கரின் குரலில் பெருமிதம்.

''ஸ்விம்மிங், மியூஸிக் கிளாஸ்னு நிறைய ஸ்பெஷல் கிளாஸூக்குப் போயிருக்கோம். ஆனா, இந்த வீவிங் கிளாஸ் எங்களுக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கு. இந்த கிளாஸூக்கு வந்த பிறகுதான், நாம போடும் டிரெஸ் எப்படி உருவாகுது, இதுக்காக எத்தனை பேர் உழைக்கிறாங்கன்னு புரிஞ்சது. கைத்தறியின் அருமையையும் தெரிஞ்சுக்கிட்டோம்' என்கிறார்கள் சுட்டிகள்.

விடைபெற்றுக் கிளம்பியபோது, சுவரில் மாட்டியிருந்த, ராட்டினத்தில் நூல் நூற்கும் காந்தி தாத்தா சிரித்தார்.

''நான், சாஃப்ட்வேர் இன்ஜினீயர். என் பசங்க ஸ்ருஷ்டி, ஸ்ரேயஸ் ரெண்டு பேருமே இங்கே வீவிங் கத்துக்கிறாங்க. துணி நெய்யக் கத்துக்கிறதோட, நாம் தினமும் அணியும் டிரெஸ், எப்படி நெய்து வருதுங்கிற கான்செப்ட் அவங்களுக்குள்ள போனா, அதுவே போதும். இப்போ, வீட்டில் எந்த துண்டுத் துணியைப் பார்த்தாலும், 'இதை எப்படி நெய்திருக்காங்க, என்ன கலர் யூஸ் பண்ணியிருக்காங்க, டபிள் கலரா போட்டிருக்காங்களா, சிங்கிள் கலரா’னு பேசிக்கிறாங்க. துணியை வேஸ்ட் பண்ணக் கூடாது என்கிற விழிப்புஉணர்வும் வந்திருக்கு. அதுவே பெரிய சந்தோஷம்தான்'' என்று முகம் மலரப் பேசுகிறார், பெற்றோர்களில் ஒருவரான ஷங்கர் ஆனந்த்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!
உலகக் கோப்பை யாருக்கு?
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close