Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலைவனத்தில் ஒரு துயவன்!

கொ.மா.கோ.இளங்கோ

ரியா, ஓர் அமைதியான கிராமம். பாலைவனத்தில் கால் கடுக்க நடந்துபோக வேண்டும். சிவப்பு மணல் நிலத்து ஒற்றையடிப் பாதைதான், கிராமத்தைச் சென்றடைய வழி.  சுற்றிலும் இருந்த சுண்ணாம்புப் பாறைக் குன்றுகள்தான், கிராமத்தைப் புழுதிப்புயல் தாக்காமல் காக்கின்றன.

 சுலைமான், கருணை மனம் கொண்டவர். பழகுவதற்கு எளிமையானவர். எல்லோருக்கும் உதவுவது, அவருக்குப் பிடித்த விஷயம். சுலைமானின் மனைவியும் அவரைப் போல சாதுவான பெண்மணி.

சுலைமானுக்குச் சொந்தமாக ஈச்சந்தோட்டம் உள்ளது. கணவன், மனைவி சேர்ந்தே அதன் பராமரிப்பு வேலைகளைச் செய்வார்கள். மரங்களைச் செல்லமாகப் பாராமரிக்கும் கலையை, அவர்களிடம்தான் கற்க வேண்டும். அவர்களுக்குத் துணையாக 'இஜி’ என்ற கழுதை இருந்தது. விளைந்த பேரீச்சம் பழங்களை சந்தைக்குக் கொண்டுசெல்லும் இஜியை, வீட்டில் ஒருவனாகவே நினைத்தார்கள்.

சுல்தானின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள். ஈச்சந்தோட்டத்தின் மரங்கள், சந்தோஷத்தில் பூத்துக் குலுங்கின. 'அழகான பேரீச்சம் பழக் கண்களுடைய குழந்தை பிறக்கும்' என வாழ்த்தின.

அந்தக் கிராமத்தில், படித்த மருத்துவர் ஒருவரும் கிடையாது. பிரசவத்துக்கு, தூரத்தில் உள்ள 'குருசனியா’ நகருக்குத்தான் செல்ல வேண்டும்.

இன்று கிளம்பினால் சரியாக இருக்கும். ஆனால், சுல்தான் கவலையோடு இருந்தார். மனைவியை நகருக்குக் கொண்டுசெல்ல, ஒட்டகச் சவாரிக்காரரை அணுகினார். அவன், காசுக்குப் பதிலாக 50 ஈச்ச மரங்களைத் தரும்படி கேட்டான்.

'அந்த 50 மரங்களையும் வேருடன் பிடுங்கி, என் தோட்டத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்' என்றான்.  

'என் தோட்டத்து மரங்கள் இப்போதுதான் பூக்கத் தொடங்கியுள்ளன. அவற்றைப் பிடுங்கி எடுப்பது நல்லதல்ல' என்று வந்துவிட்டார் சுல்தான்.

இஜி மூலம் இதை அறிந்த பேரீச்ச மரங்கள்,  'நாங்கள் வேண்டுமானால், பூக்களைக் காற்றில் உதிர்த்துவிடுகிறோம்' என்றன.

இதைக் கேட்ட இஜி, இதற்கு தானே ஒரு தீர்வு காண்பதாகச் சொன்னது. இஜி, அதிபுத்திசாலி. கடுமையான உழைப்பாளியும்கூட. நேராக சுல்தானிடம் சென்று, 'நீங்கள் ஏன் கவலைப்படுகிறீகள்? அம்மாவை நானே சுமக்கிறேன். 'குருசனியா’ நகர மருத்துவச்சியின் வீடு எனக்குத் தெரியும்' என்றது.

சுல்தான், நன்றியோடு கண் கலங்கினார். அவர்களின் பயணம் தொடங்கியது. மனைவியைச் சுமந்துகொண்டு பாலைவனப் பாதையில் நடந்தது இஜி.

கடுங்குளிர் நாட்கள். சூரியன், மாலை ஐந்து மணிக்கு முன்பாகவே மறைந்துவிடுவான். சீக்கிரம் போய்ச் சேர்ந்தாக வேண்டும் என்று விறுவிறுவென நடையின் வேகத்தைக் கூட்டினார்கள்.

வெகுதூரம் கடந்து வந்த இஜி, திடீரென அபாயம் எதிர்ப்படப்போகிறது என்பதைப் புரிந்துகொண்டது. காதுகள் இரண்டையும் உயர்த்திப் பிடித்துக் கவனித்தது. 'புழுதிப் புயல்’ தம்மை நோக்கி நகர்ந்து வருவதை உணர்ந்தது.

சுல்தான், மீண்டும் கவலை அடைந்தார். புழுதிப் புயலில் மாட்டிக்கொண்டு தப்பிக்க இயலாது. எனவே, அருகில் இருந்த கிராமத்தில், முகம் தெரியாத ஒருவர் வீட்டின் கதவைத் தட்டி, உதவி கேட்டனர்.

தனியறை ஒன்று தருவதாகச் சொன்ன அந்த வீட்டின் சொந்தக்காரர், ''பதிலுக்கு இந்தக் கழுதையை எனக்குக் கொடுத்துவிடுங்கள்' என்றார்.

சுல்தான் கண்கலங்கினார். 'அப்பா, கவலைப்பட வேண்டாம். என்னை இவருடன் விட்டுவிடுங்கள்' என்று வாடிய முகத்தை மறைத்துக்கொண்டு கனைத்தது இஜி.

வேறு வழி தெரியாமல், இஜியைக் கொடுத்துவிடுவதாக ஒப்புதல் அளித்தார். ஆனால், காலையில் எழுந்ததும் எப்படிப் பயணிப்பது என்ற கவலையில் தனியாக உட்கார்ந்து ஆலோசித்தார்.

இதையெல்லாம், தூய பண்பைக் கற்றுத்தரும் தேவதை கவனித்துக்கொண்டிருந்தது. ஆகாயத்தில் இருந்து இறங்கிவந்தது.

'சுல்தான் அவர்களுக்கு சலாம். இங்கே நடந்ததைப்  பார்த்தேன். சுயநலப் பண்புடன் போட்டி போட்டு, உனக்காக நான் போராடுவேன். நீங்கள் படுக்கைக்குச் சென்று நிம்மதியாக ஓய்வு எடுங்கள். நல்லதே நடக்கும்' என்றது தூய பண்புத் தேவதை.

மறுநாள். சுல்தான், தனது மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவச்சியைப் பார்க்க நடந்துபோனார். இஜி, சிரித்துக்கொண்டே விடைகொடுத்தது. நடக்கப்போவதைப் புரிந்துகொண்ட  தீர்க்கதரிசி.

சுலைமான் செல்லும் வழியில், இஜியைப் போலவே ஒரு கழுதை வழிமறித்து நின்றது. அதைப் பார்த்த சுல்தான் மிகவும் மகிழ்ந்தார்.

''ஆஹா! இது தூய பண்பின் ஏற்பாடுதான். மிக்க நன்றி' என்று வான் நோக்கி வணங்கிய சுல்தான்,  மனைவியை ஏற்றிக்கொண்டு மருத்துவச்சியின் வீட்டுக்கு நடந்தார்.

அன்று மாலையே சுல்தானின் மனைவி, அழகான ஆண் குழந்தையைப் பெற்றாள். அந்தச் செய்தியை சிவப்பு மணல், காற்றில் கலந்துசென்று சுல்தானின் தோட்டத்துப் பேரீச்ச மரங்களிடம் சொன்னது. சிறு சிறு பேரீச்சம் பழங்கள் முளைவிட்டன. மரங்கள், மகிழ்வைக் கொண்டாடின.

அழையா விருந்தாளியாக வந்து உதவிய கழுதையுடன் அவர்கள், வீட்டை நோக்கிப் பயணிக்க முடிவு செய்தார்கள். குழந்தையை மடியில் சுமந்துகொண்ட தாயை ஏற்றிக்கொண்டு, நரியா கிராமத்துக்குக் கிளம்பினார்கள்.

ஊருக்குள் நுழைந்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. சுல்தானின் குடிசை அங்கே இல்லை. அந்த இடத்தில், ஒரு மாளிகை இருந்தது.

'இதுவே உங்களது வீடு' என்றது அந்தக் கழுதை.   சுற்றிலும் பச்சைப்பசேலென புற்கள் வளர்ந்திருந்தன.

அப்போது, வீட்டுக்குள் இருந்து ஓடிவந்த பணிப்பெண், குழந்தையைத் தொட்டிலில் தூங்க வைப்பதாகக் கூறி தூக்கிச்சென்றாள். திரும்பிவந்து, அவர்களையும் உணவு அருந்த அழைத்தாள்.

வீட்டுக்கு வெளியே ஓர் ஒளி பிரகாசித்தது. கழுதையாக இருந்த தூய பண்புத் தேவதை, சுயரூபம் பெற்று நின்றது.  ''சுயநலப் பண்பு தேவதையுடன் போராடி, உங்கள் கழுதையை வாங்கிக்கொண்டவர் மனத்தை மாற்றிவிட்டேன். அது, வீடு வந்து சேரும். உங்கள் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும்'' என வாழ்த்தி மறைந்தது.

பேரீச்சம் பழத்தைப் போல கண்கள்கொண்ட குழந்தை, தொட்டிலில் கிடந்தபடியே கண்களை உருட்டித் தூய பண்புத் தேவதையைப் பார்த்து சிரித்தது. தூரத்தில், இஜி வந்துகொண்டிருந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
சின்னச்சின்ன வண்ணங்கள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement
[X] Close