சின்னச்சின்ன வண்ணங்கள்!

மனிதர்களே...மனிதர்களே...

ண்களுக்குக் குளிர்ச்சிதரும் பசுமையான மரங்கள் அடர்ந்த பகுதி. அங்கே இருந்த குரங்குக் கூட்டத்தில்,  ஒரு குட்டியைத் தேடி அம்மா குரல் கொடுத்தது.

 திடீரென எங்கிருந்தோ தாவிவந்தது குட்டிக் குரங்கு. ''எங்கே இருந்தே? சொல்லாமல் போகக் கூடாதுனு சொன்னதை மறந்துட்டியா?'' என்றது அம்மா குரங்கு.

சற்றுத் தொலைவில் தெரிந்த ஒரு கட்டடத்தைக் காட்டி, ''அங்கே போயிருந்தேன் அம்மா. ஒரு காலத்தில் அந்தக் கல்லூரி இருக்கும் இடம், மரங்கள் மற்றும்  பல உயிர்களின் வாழ்விடமாக இருந்ததாகச் சொன்னீங்க. இப்போ, அங்கே ஒரு வகுப்பில், 'காட்டை அழிக்கக் கூடாது. உயிர்களைப் பாதுகாக்கணும்’னு பாடம் நடத்துறாங்க. இந்த மனுஷங்களே இப்படித்தானா?'' என்று ஆதங்கப்பட்டது குட்டிக் குரங்கு.

''மனிதர்கள் எல்லோருமே சுயநலக்காரர்கள் இல்லை மகனே. பிற உயிர்களிடம் உண்மையான  அன்பு காட்டுபவர்களும் இருக்காங்க'' என்றது அம்மா குரங்கு.

அன்று மாலை. அந்தப் பகுதிக்கு சில மனிதர்கள் வந்து, குரங்குகளைப் புகைப்படங்கள் எடுத்தார்கள். தாங்கள் கொண்டுவந்திருந்த பழங்களை எடுத்து நீட்டினார்கள். அன்பாகச் சிரித்தார்கள். குட்டிக் குரங்கு தயங்கியது.

''நம்பிக்கையோடு வாங்கிக்கொள் மகனே'' என்றது அம்மா குரங்கு.

மரத்தில் இருந்து இறங்கிச் சென்று, பழங்களை வாங்கிக்கொண்டது குட்டிக் குரங்கு. அவர்கள் சென்றதும், ''பார்த்தாயா மகனே, மனிதர்களிலும் பிற உயிர்களை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள். தங்கள் இனம் பெருகிவிட்டதால், வேறு வழியின்றி இயற்கையை அழிக்கும் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கிறார்கள் பாவம்'' என்றது அம்மா குரங்கு.

குட்டிக் குரங்கு மகிழ்ச்சியாகச் சிரித்தது.

- அ.செ.நாகராஜன்,   அய்யம்பாளையம்.


மைச்சர் நல்லசிவம், பறவைகள் மொழி அறிந்தவர். ஒரு நாள் இரண்டு புறாக்கள் அரண்மனை மாடத்தில் பேசிக்கொள்வது அவர் காதில் விழுந்தது.

ஆண் புறா, ''நாளை இரவுக்குள் இந்த மன்னரின் உயிருக்கு ஓர் ஆபத்து வரப்போகிறது. உலகத்திலேயே உன்னதமான தர்மத்தை அவர் செய்தால், தலை தப்பும்'' எனச் சொன்னது.

இதைக் கேட்ட அமைச்சர், 'என்ன தர்மம் தலை சிறந்தது? பொன்னா, வஸ்திரமா, தானியமா?’ என தீவிரமாக யோசித்தார். அவரால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

அந்த நாட்டில் இருக்கும் முனிவர் ஒருவரைச் சந்தித்து, விஷயத்தைச் சொன்னார்.

அதற்கு முனிவர், ''இதில் என்ன குழப்பம்? அன்னதானமே உலகில் சிறந்தது. மற்ற தானங்களில் 'இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்’ எனப் பெறுபவன் மனம் ஏங்கும். சாப்பாட்டு விஷயத்தில்தான் போதும் என்ற திருப்தி உண்டாகும்’ என்றார்.

''அன்னதானமா? நம் அரசரின் சிறந்த ஆட்சியில், உணவுப் பஞ்சமே இல்லை. யாரும் உணவைப் பெற வர மாட்டார்களே. யாருக்கு அன்னமிடுவது?'' என்ற அமைச்சர், சிந்தனையில் ஆழ்ந்தார்.

கவலையோடு வீட்டுக்கு வந்தவரிடம், அவரது 10 வயது மகன் என்னவென்று கேட்டான். அமைச்சர் விஷயத்தைச் சொன்னதும், ''மனிதர்கள் மட்டும்தான் உயிர்களா? பறவைகள், புழு, பூச்சிகளுக்கும் தரலாமே'' என்றான்.

அமைச்சர் முகம் மலர்ந்தது. அரண்மைக்குச் சென்று, மன்னரிடம் விஷயத்தைச் சொன்னார். ஒரு மூட்டை பொரியைத் தூக்கிச்சென்றார்கள். அவற்றை கோயில் குளத்தில், மன்னர் தன் கையால் வீசினார். மீன்கள் பசியாறின. சோலைகளில், தானியங்களை வீசினார். பறவைக் கூட்டம் பசியாறின. ஆடு, மாடுகளுக்குப் புல் மற்றும் கீரைகளை அளித்தார்.

அரண்மனை திரும்புவற்குள் இடி, மின்னல், காற்றுடன் மழை பொழியவே, ஒரு மண்டபத்தில் ஒதுங்கினார். பிறகு, அரண்மனைக்குத் திரும்பினார்.

மகாராணி ஓடிவந்து, ''பிரபோ... பெரிய மரக் கிளை ஒன்று முறிந்து, தாங்கள் படுத்திருக்கும் அறையின் மேல் தளத்தில் விழுந்து, தளம் இடிந்துவிட்டது. நல்லவேளை, வழக்கமாக நீங்கள் ஓய்வெடுக்கும் சமயத்தில் இன்று இங்கே இல்லை'' என்றார்.

மன்னர் மற்றும் அமைச்சரின் மனதில் நிம்மதி உண்டானது.

-என்.எஸ்.வி.குருமூர்த்தி, கும்பகோணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick