“பதக்கங்களால் பேசுகிறோம்”

சு.சூர்யா கோமதிபடங்கள்: ரா.ரகுநாதன்

''இவங்களால் பேச முடியாது. ஆனால், இவங்க திறமையை ஊரே பேசுது' என்று பூரிப்புடன் சொல்கிறார் கிறிஸ்டோபர். 

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள  சி.எஸ்.ஐ. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் செவித்திறன் குறைபாடு மற்றும் வாய் பேச இயலாத மாணவ, மாணவிகள், தங்களது விளையாட்டுத் திறமையால் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தி்ருக்கிறார்கள்.

இவர்களின் பயிற்சியாளர் கிறிஸ்டோபர், 'மத்திய அரசின், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும் ஸ்பெஷல் ஒலிம்பிக் பாரத் அமைப்பும் இணைந்து, ஒவ்வோர் ஆண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது. இந்த ஆண்டு ஒடிஸா மாநிலம், புவனேஸ்வரில் நடந்த தேசிய அளவிலான தடகளப் போட்டியில், தமிழக அணிக்காக 10 பதக்கங்களை வென்றுவந்துள்ளனர்' என்கிறார் பெருமிதக் குரலில்.

காலை நேரத்து சுறுசுறுப்புடன் பயிற்சியில் இருந்தவர்கள், புன்னகையுடன் கைகுலுக்கினார்கள்.

''நாங்க, சுட்டி விகடனின் வாசகர்கள். அதில் வரும் சாதனை மாணவர்களின் கட்டுரைகளை விரும்பிப் படிப்போம். இப்போ, நாங்களே சுட்டி விகடனில் வரப்போகிறோம்னு நினைக்கிறப்ப, ரொம்ப சந்தோஷமா இருக்கு' என்பதை சைகையில் சொன்ன சுபலஷ்மி முகத்தில் அத்தனை சந்தோஷம்.

8ம் வகுப்புப் படிக்கும் சுப்புலட்சுமி விளையாட்டில் சகலகலாவல்லி. ஸ்பெஷல் ஒலிம்பிக் பாரத், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், பெண்களுக்கான ஒற்றையர் இறகுப்பந்து போட்டியில், வெள்ளிப் பதக்கமும் வாங்கி இருக்கிறார். போனஸாக, தமிழகத்தின் சிறந்த தடகள வீராங்கனையாகத்    தேர்வாகி, ஒரு தங்கம் தட்டி வந்திருக்கிறார்.

''சுப்புலட்சுமியைப் புகழ்வதில் என்னை மறந்துடாதீங்க. ஆண்கள் இறகுப்பந்து போட்டியில்,   வெண்கலப் பதக்கம் வாங்கிட்டு வந்திருக்கேன். அடுத்த முறை தங்கம் ஜெயிப்பேன்' என்றார் நம்பிக்கையுடன் 9ம் வகுப்பு பாபு.

குண்டு எறிதலில் தங்கப் பதக்கம் பெற்ற 9ம் வகுப்பு சிவக்குமார், ''மைதானத்துக்கு வந்து, கையில் குண்டை எடுத்ததும் ரொம்ப பதற்றமாகிடுச்சு. கண்களை மூடி, ரிலாக்ஸ் செய்துட்டு வீசினேன். தங்கம் ஜெயிச்சுட்டேன்' என்கிறார் மகிழ்ச்சியுடன்.

100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற தனலட்சுமி, 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில், தலா ஒரு தங்கப் பதக்கம் வென்ற வேல்முருகன் என அத்தனை பேருமே, பின்தங்கிய பொருளாதாரச் சூழ்நிலையிலிருந்து வந்தவர்கள். இவர்களின் பெற்றோர்கள், சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளில்  வேலைபார்க்கிறார்கள்.

''இவங்கள்ள பலர் விடுதியில் தங்கிப் படிக்கிறாங்க. இவங்க உலகமே இந்த விளையாட்டு மைதானம்தான். இதுபோன்ற விளையாட்டுகளில் சாதிக்க, ஊட்டமான உணவு அவசியம். இவங்க பெற்றோர்களால் அதைக் கொடுக்கும் சூழ்நிலை இல்லை. அதனால், அரசு மற்றும் தன்னார்வலர்களின் உதவியோடு  பயிற்சி தருகிறோம்' என்கிறார் கிறிஸ்டோபர்.

''எங்கள் சாதனைகளால்  மற்றவர்களைப் பேசவைக்க வேண்டும் என்ற உறுதியுடன் தீவிரமாக உழைத்து, மாவட்ட அளவிலான போட்டிகளில் சாதித்தோம். மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மண்டல இயக்குநர், எங்்களை நேரடியாக தேசிய அளவிலான தடகளப் போட்டிக்குத் தேர்வு செய்தார். ஒடிஸா சென்றுவரத் தேவையான எல்லாச் செலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக்கொண்டது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து உதவிய அத்தனை பேருக்கும் இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறோம்' என்கிறார் பதக்க நாயகர்களில் ஒருவரான ராக்கப்பன்.

தங்களுக்கே உரிய பாணியில், நெற்றியில் மூன்று விரல்களைவைத்து நமக்கு விடைகொடுத்துவிட்டு, மைதானத்தில் உற்சாகமாக பயிற்சிக்குத் தயாராகிறார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick