அசரவைக்கும் அரசு நூலகம்!

பிரேமா நாராயணன்படங்கள் : எஸ்.சாய் தர்மராஜ்

சில ஆயிரம் வீடுகள் இருக்கும் கிராமம். அதன் நடுவே 100 சதவிகித சுகாதாரத்துடன் வரவேற்கிறது அந்த நூலகம். அழகாக அடுக்கப்பட்ட புத்தகங்கள், அணிவகுக்கும் கணிப்பொறிகள் என அசத்துகிறது. 

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை என்னும் கிராமத்தில் இருக்கிறது, சோமலெ நினைவு கிளை நூலகம்’. உள்ளூர் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து தினமும், பெரியவர்கள் தவிர, 70 முதல் 80 மாணவர்கள் வருகிறார்கள். நூல்களைப் படிக்கிறார்கள், கணினியை உபயோகிக்கிறார்கள், அதற்காகப் பரிசும் பெறுகிறார்கள்.

1962ம் வருடம் ஆரம்பிச்சது இந்த அரசு நூலகம். இங்கே 27,000 புத்தகங்கள் இருக்கு. மாணவர்களிடம் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டி விடறதுக்காக பல திட்டங்களைச் செயல்படுத்துறோம். தினமும் வரும் மாணவர்களின் பெயர், அவங்க அங்கே செலவிடும் நேரம், படிக்கும் புத்தகங்கள் பத்தின விவரங்களைச் சேகரிக்கிறோம். ஒவ்வொரு மாதமும், அந்த மாதத்தில், நூலகத்தை அதிகமாகப் பயன்படுத்தும் மாணவருக்கு, நல் வாசகர்’ என்ற விருதையும் 100 ரூபாய் பரிசுத் தொகையையும் அவங்க பள்ளிக்கே சென்று, பிரேயரில் கொடுக்கிறோம். இந்த ஊரில் பிறந்த எழுத்தாளர் சேதுராமன் சாத்தப்பன், இந்தப் பரிசுத்தொகையைக் கொடுக்கிறார்' என்கிறார், நூலகர் விஜயா.

படித்த விஷயத்தின் அடிப்படையில், மாணவர்களை கட்டுரை எழுதச் சொல்லும் பயிற்சியும் இங்கே ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடக்கிறது. மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்கிறார்கள்.

''நாங்க எழுதும் கட்டுரைகளைத் திருத்தி, இன்னும் எப்படி சிறப்பாக எழுதலாம்னு சொல்லுவாங்க. அது, எங்க எழுத்துத் திறமைக்குத் தூண்டுகோலாக இருக்கு' என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள் மாணவர்கள்.

சோமலெ அறக்கட்டளை மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் 'தமிழ்நாடு அறக்கட்டளை’ ஆகியவை நூலகத்தின் பல பணிகளுக்குத் துணை நிற்கின்றன. அந்த அமைப்பின் ஊழியர் வினோத் கண்ணன், குழந்தைகளுக்கு கணினியின் செயல்பாடுகளைக் கற்பிக்கிறார்.

இங்கே இருக்கும் எல்லா கம்ப்யூட்டர்களிலும் இன்டர்நெட் இணைப்பு இருக்கு. எல்லா மாணவர்களுக்கும் வீடியோ கேம், பவர் பாயின்ட், இன்டர்நெட் பிரவுஸிங் எனப் பல விஷயங்கள் அத்துபடி. ஸ்கைப் மூலமாக, அயல்நாடுகளுக்குப் பேசி இருக்காங்க. வருஷா வருஷம் குழந்தைகள் தினத்தை ஒட்டி, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடக்கும். சிறந்த மாணவர்களுக்குப் புத்தகப் பரிசு வழங்குவோம். இந்தக் கலை நிகழ்ச்சிகளை யூ டியூபில் வெளியிடுகிறோம். மே மாதத்தில் நடைபெறும் கோடை முகாமில், கம்ப்யூட்டர் அடிப்படை வகுப்பு, ஆங்கில இலக்கண வகுப்பு, பிழை இல்லாமல் எழுதும் வகுப்புகளை நடத்துகிறோம்'' என்று அசரவைக்கிறார் வினோத் கண்ணன்.

இந்த நூலகத்தின் சிறப்புகளைக் கேள்விப்பட்ட மற்ற ஊர் பள்ளி மாணவர்கள், களப் பணியாக,’ நெற்குப்பை நூலகத்தைப் பார்வையிட வருகிறார்கள்.

''முன்மாதிரி நூலகமாக இந்த நூலகம் விளங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட நூலக அலுவலர் காளிதாஸ் சாருக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கும் நன்றி சொல்லணும். இது வரையில் நாங்கள் செய்தது போதாது. சிவகங்கை மாவட்டத்தில் நம்பர் ஒன் லைப்ரரி என்ற பெயரை எடுக்கணும்' என்கிறார் விஜயா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick