சின்னச்சின்ன வண்ணங்கள்!

வாத்து பற...பற!ஓவியம்: ஐ.மாஷா அல்லா

ந்தக் குளக்கரையில் இருந்த வாத்து ஒன்று, மரத்தில் இருந்த குருவியிடம், 'எனக்கும் பறக்க ஆசை. கற்றுத்தருகிறாயா?' என்று கேட்டது. 

'வாத்து அண்ணே... உனக்கு இறக்கை இருந்தாலும் எங்களைப் போல பறக்க முடியாது. இது, கற்றுத்தந்து வரும் விஷயம் அல்ல' என்று சொல்லிவிட்டுச் சென்றது.

நேற்று கிளியிடமும், அதற்கு முன்பு மரங்கொத்தியிடமும் கேட்டபோதும் இப்படித்தான் பேசின. வாத்துக்குக் கோபம் வந்துவிட்டது. ''எப்படியாவது கத்துக்கிட்டு, உங்க முன்னாடி பறந்து காட்டுறேன்' என்று கத்தியது.

'சபாஷ் வாத்து தம்பி, உனக்கு நான் பறக்கக் கத்துத்தர்றேன்' என்ற குரல் கேட்டு, வாத்து நிமிர்ந்து பார்த்தது.

மரத்தில் அமர்ந்திருந்த அந்தக் காகம், ''நான் வேற  இடத்தில் இருந்தப்ப, உன்னை மாதிரி மூணு வாத்துகளுக்கு பறக்கக் கத்துத்தந்திருக்கேன். தினமும் காலை ஆறு மணிக்கு வந்துடு. அப்படி வரும்போது, எனக்கு சன்மானமாக வடை கொண்டுவரணும்' என்றது.

மறுநாள், எங்கிருந்தோ ஒரு வடையை உஷார் செய்துகொண்டு ஆவலோடு வந்தது வாத்து. அந்த வடையை வாங்கித் தின்ற காகம், 'சரி, பயிற்சியை ஆரம்பிக்கிறேன். முக்கியமான ஒரு விஷயம். நான் பயிற்சி கொடுக்கிறப்ப, குரங்கை நினைக்கவே கூடாது. ஏன்னா, பறக்கும் சக்திக்கு குரங்குதான் எதிரி. சரி, கண்களை மூடிக்கோ பார்க்கலாம்' என்றது.

கண்களை மூடிக்கொண்டதும் வாத்துக்கு, குரங்கு உருவம்தான் நினைவுக்கு வந்தது. தனது கால்களால் வாத்தை உதைத்த காகம், 'ஓகே ஜம்ப்' என்றது.

வாத்து, ஒரு தாவு தாவியது. அவ்வளவுதான். 'என்ன குரங்கை நினைச்சுக்கிட்டியா?' என்று கேட்டது காகம்.

'ஆமாம், மன்னிச்சுடு' என்றது வாத்து.

'இன்னிக்கு டைம் வேஸ்ட். நாளைக்குப் பார்ப்போம்' என்ற காகம், சென்றுவிட்டது.

அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் எனத் தினமும் வாத்து வடையோடு வரும். அதைத் தின்று முடிக்கும் காகம், 'இன்னிக்காவது குரங்கை நினைச்சுக்காதே' எனப் பயிற்சியை(?) ஆரம்பிக்கும். பறக்க முடியாத வாத்தைத் திட்டிவிட்டுச் செல்லும்.

10 நாட்கள் ஆனதும் வாத்து சோர்ந்துவிட்டது. ''என்னால் குரங்கை நினைக்காம இருக்க முடியலை' என்றது.

'நீ சரிப்பட மாட்டே. நான் வேற இடத்துக்குப் போறேன். என் லைஃப்ல பயிற்சி கொடுத்து, பறக்காத வாத்து நீ மட்டும்தான்' என்ற காகம், டாட்டா காட்டிவிட்டுச் சென்றது.

பாவம் வாத்து, தன் மீதுதான் தவறு என நினைத்து நொந்துகொண்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick