நியூட்டனின் மூன்றாம் விதியும் ஆர்க்கிமிடீஸின் நெம்புகோலும்!

- விவசாயிகளின் தோழி!கு.ஆனந்தராஜ், த.ஸ்ரீநிவாசன்

'உலகின் மிகச் சிறந்த பணி, விவசாயம். அந்த விவசாயத்துக்கு என்னோட இந்தக் கண்டுபிடிப்பை உருவாக்கியதில் ரொம்பவே சந்தோஷப்படுறேன்' என்று பூரிப்புடன் சொல்கிறார் பவித்ரா.

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த பவித்ரா, சத்தியமங்கலத்தில் உள்ள எஸ்.ஆர்.சி.மெமோரியல் மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்புப் படிக்கும், தமிழகத்தின் இளம் விஞ்ஞானி.

''சின்ன வயதில் இருந்தே, நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன். நாம் தினமும் பயன்படுத்தும் கருவிகளின் செயல்பாட்டைக் கவனிப்பேன். அப்படித்தான் சின்னச்சின்னக் கருவிகளைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் உண்டாச்சு' என்கிறார் பவித்ரா.

தனது கண்டுபிடிப்புகளுக்காக, 'நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா’ வழங்கும் இக்னைட் (ignite) விருது, மத்திய அரசின் தேசிய இளம் விஞ்ஞானி விருது, மாவட்ட மற்றும்  மாநில அளவில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்  இந்த இளம் விஞ்ஞானி.

''ஏழாம் வகுப்பு படிக்கிறப்போ, வீட்டின் பின்புறம்    வளர்ந்திருந்த புற்களையும் புதர்களையும், ஜே.சி.பி. வாகனத்தை வெச்சு சுத்தம் செய்தாங்க. இடப் பற்றாக்குறையால், அந்த வாகனம், காம்பவுண்டு சுவரைத் தாண்டி வர முடியலை. நாமே சுலபமாகக் கையாளுகிற மாதிரி, செடிகளை அகற்றும் இயந்திரத்தைக் கண்டுபிடிக்கணும்னு தோணுச்சு. 'பூமிக்கு வெளியே நெம்புகோல் வைக்க ஓர் இடம் கிடைத்தால், இந்தப் பூமியையே நகர்த்துவேன்’ எனச் சொன்னார் ஆர்க்கிமிடீஸ். நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் ஆர்க்கிமிடீஸின் நெம்புகோல் தத்துவத்தின் அடிப்படையில் ஓர் இயந்திரத்தை உருவாக்கினேன். செடிகளை அகற்றும் இந்தக் கருவிக்கு மாநில அளவில் முதல் பரிசு கிடைச்சது' என்கிறார்.

வயதானவர்கள் நடைப்பயிற்சிக்காகப் பயன்படுத்தும் வாக்கரிலேயே இணைந்த இருக்கை, செடி மற்றும் பயிரின் வளர்ச்சியைப் பாதிக்கும் களைகளை நீக்கும் கருவி, நிலக்கடலையை அறுவடை செய்யும் இயந்திரம் மற்றும் செடிகளுக்கு உரமிடும் கருவி எனப் பல்வேறு கண்டுபிடிப்புகளால் கவனம் ஈர்க்கிறார்.

''விவசாயம், விவசாயிகளை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் என் கண்டுபிடிப்புகள் விவசாயம் சார்ந்ததாகவே இருக்கிறது. வயல்களுக்கு உரமிடும் விவசாயிகள், அவற்றைக் கையால் எடுத்துப் போடுவதையும், அதனால் அவங்களின் கைகளில் கொப்புளங்கள் ஏற்படுவதையும் பார்த்து வருத்தப்பட்டிருக்கேன். நான் கண்டுபிடித்திருக்கும் உரமிடும் கருவியில் இருக்கும் 'புனல்’ல (திuஸீஸீமீறீ)  உரங்களைக் கொட்டி, அதன் அருகில் இருக்கும் ட்ரிக்கர் (Funnel) மூலம் ஒவ்வொரு பயிருக்கும் தேவையான, சரியான அளவு உரங்களை இட முடியும். எங்க ஊர் விவசாயிகள் பலரும், இப்போ இதைத்தான் பயன்படுத்துறாங்க' என்கிற பவித்ராவின் குரலில் பெருமிதம்.

பவித்ராவின் இந்த ஆண்டு கண்டுபிடிப்பு, மரவள்ளிகிழங்கை அறுவடை செய்யும் இயந்திரம்.

''இந்தியாவின் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியில், 57 சதவிகிதம் தமிழகத்தில்தான் சாகுபடி செய்யப்படுகிறது. கைகள் மூலமாகவே அறுவடை நடக்குது. இதனால், நேரமும் உழைப்பும் வீணாகின்றன. இதைத் தவிர்க்கவே, இந்த இயந்திரத்தைக் கண்டுபிடிச்சேன். இது, 'சயின்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா’ அமைப்பு நடத்தும் இளம் விஞ்ஞானிகளுக்கான தேசியப் போட்டிக்குத் தேர்வாகி இருக்கு. இதில் முதல் இடம் பெற்றால், அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச அளவிலான இளம் விஞ்ஞானி போட்டிக்குச் செல்வேன். நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு, இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்' என்கிறார் பவித்ரா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick