மதுவுக்கு எதிரான மொட்டுகள்!

ப.சூரியராஜ், படங்கள்: நா.ராஜமுருகன்

'மது’ எனும் போதை, குடிப்பவர்களை அடிமையாக்கி அழிப்பதோடு, குழந்தைகளின் எதிர்காலத்தையும் எப்படிப் பாதிக்கிறது என்பதை வீதி நாடமாக்கி, பார்வையாளர்களை நெகிழவைத்திருக்கிறது, மலரும் குழந்தைகள் நாடக மையம்.

 ''எங்கள் 'செசி’ (CESCI) என்ற அமைப்பு, கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கைக் கல்விக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாலை நேர வகுப்புகளில், பல்வேறு கலைப் பயிற்சிகளை அளிக்கிறோம். அதில் ஒன்றுதான், சமுதாயப் பிரச்னைகளை நாடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டுசெல்வது. இந்த மாணவர்கள் அனைவரும், மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள்' என்கிறார், இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான செல்லாத்தாள்.

வட்டார மொழியில், இவர்கள் நடத்திய 'கோட்டரசு’ நாடகம் அட்டகாசம், ஒலிபெருக்கி இல்லாமலே, தெளிவாகவும் உரக்கவும்  வசனங்கள் பேசி, மது குடிப்போருக்கு அதன் தீமையை உறைக்கவைத்தது.

கோட்டரசாக நடித்த கதைநாயகன் தினேஷின் நடிப்பு, அற்புதம். தன் பிள்ளைகளின் பாடப் புத்தகத்தை விற்று, மது வாங்கிக் குடிக்கும் காட்சி, பயங்கரம். கோட்டரசின் நண்பனாக வந்த அஜித், பூனைக்குட்டியாக வந்த சவுந்தரபாண்டியன் என அனைவரும் நடிப்பில் பட்டையைக் கிளப்பிவிட்டனர்.

கோட்டரசாக நடித்த தினேஷ், 'இந்த நாடகத்தை நாங்களே எழுதினோம். செசி அமைப்பைச் சேர்ந்த ஜெகதீஷ் அண்ணாவும், திருமலை அண்ணாவும்  சில மாற்றங்கள் செய்து, நடிப்புப் பயிற்சி தந்தார்கள். விடுமுறை நாட்களில் கிராமம் கிராமமாகச் சென்று நாடகம் போடுவோம். எங்கள் நாடகத்தைப் பார்த்தவர்கள், 'எங்க வீட்டுல நடக்கிற கதை மாதிரியே இருக்கு. இந்த நாடகத்தைப் பார்த்துட்டு, தப்பு பண்றவங்க நிச்சயம் திருந்துவாங்க  தம்பிகளா’னு சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும்' என்கிறார்.

இந்தக் குழுவை ஒருங்கிணைக்கும்  சமூக ஆர்வலர் தன்ராஜ், 'நான், நீண்ட காலமாகவே மதுவுக்கு எதிராகப் போராடிவருகிறேன். வருங்கால தலைமுறையாவது இந்தக் கொடிய பழக்கத்தில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களிடம் மதுவின் தீமைகளை எடுத்துச் சொல்வேன். இவர்கள் வீட்டிலோ, அக்கம்பக்கத்திலோ மது குடிக்கும் ஒருவரைப் பார்த்தால், அவர்களிடம் தைரியமாகப் பேசி, மனதை மாற்றும் அளவுக்கு சமூக அக்கறையுடன் செயல்படுகிறார்கள்' என்கிறார்.

நாடகம் பார்த்த ஊர் மக்கள், ''நாங்க சின்ன வயசுல பார்த்து சந்தோஷப்பட்ட வீதி நாடகத்தை, மறுபடியும் பார்க்கிறப்ப சந்தோஷமா இருக்கு. இந்தக் குழந்தைகளோட சமூக அக்கறையைப் பார்க்கிறப்ப பாராட்ட வார்த்தைகளே இல்லை' என்று நெகிழ்ந்தார்கள்.

மறைந்துவரும் நாடகக்கலைக்கு புத்துயிர் அளிப்பதோடு, சமுதாயப் பிரச்னையையும் மனதில் விதைக்கிறது மலரும் குழந்தைகள் நாடக மையம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick