விடை தேடிய வண்ணத்துபூச்சி!

ஜெயப்ரியன்படங்கள்: பாலு

தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தான் யாதவ். சற்றுத் தொலைவில், மலர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள் சிட்டு. அப்போது, வண்ணத்துப்பூச்சிகள் கூட்டமாக தோட்டத்தைக் கடந்துசென்றன. 

'எவ்வளவு அழகான வண்ணத்துப்பூச்சிகள்!  பூத்துக்குலுங்கும் மலர்களைக்கூட பார்க்காமல் எல்லாம் எங்கே செல்கின்றன’ என யோசித்தான் யாதவ்.

''அழகான வண்ணத்துப்பூசிகளே, நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள்? இவ்வளவு வேகமாக எங்கே செல்கிறீர்கள்?' என்று உரத்த குரலில் கேட்டான்.

அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு வண்ணத்துப்பூச்சி மட்டும் யாதவை நோக்கிப் பறந்துவந்தது. அவன் விரல் நுனியில் அமர்ந்தது. ''என் பெயர் முகில். நாங்கள் கிழக்குத் திசைக் காட்டிலிருந்து வருகிறோம்' என்றது.

''என் பெயர் யாதவ். அதோ, பூக்களுடன் பேசி விளையாடும் அவள், என் தங்கை சிலம்பரசி. நான், செல்லமாக 'சிட்டு’ என்று கூப்பிடுவேன்' என்றான்.

''உங்கள் தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது' என்றது வண்ணத்துப்பூச்சி.

''வண்ணத்துப்பூச்சியே, இந்தத் தோட்டம் உருவானதில் ஒரு ரகசியம் உள்ளது. அது என் தங்கை சிட்டுவுக்குத் தெரியாது. அதை உன்னிடம் சொல்கிறேன்' என்றான் யாதவ்.

ரகசியம் எனக் கூறியவுடன், கூட்டத்துடன் செல்லவேண்டிய வண்ணத்துப்பூச்சி, தனது வேலையை மறந்தது. ''சொல்லு யாதவ். அந்த ரகசியத்தை சிட்டுவிடம் சொல்ல மாட்டேன்'' என்றது.

யாதவ் சொல்ல ஆரம்பித்தான். ''கோடை விடுமுறை தொடங்கிய நேரம் அது. ஒருநாள் நானும் சிட்டுவும் விளையாடிக்கொண்டே வெகுதூரம் சென்றுவிட்டோம். நாங்கள் சென்ற பாதையில், ஒரே ஒரு செடி இருந்தது. அதில், ஒரே ஒரு பூ இருந்தது. சிட்டு, அந்தச் செடியை வீட்டில் வளர்க்க ஆசைப்பட்டாள். அதைக் கொண்டுவந்து கொல்லைப்புறத்தில் நட்டுவைத்தோம்'

'அந்தச் செடிதான், இவ்வளவு பெரிய தோட்டமாக மாறியதா?'

'இல்லை. அந்தச் செடியில் இருந்த பூ அடுத்த நாளே வாடிவிட்டது. செடியும் வளரவில்லை. சிட்டு மிகவும் கவலைப்பட்டாள். அந்தப் பூச்செடி பெரிதாகி,  கொல்லைப்புறம் முழுவதும் பூந்தோட்டமாக மாற வேண்டும் என அவளுக்கு ஆசை. அதனால், தினமும் அந்தச் செடிக்கு தண்ணீர் ஊற்றுவாள். அதன் அருகில் அமர்ந்து, 'ஏன் செடியே என் மீது கோபமா... ஏன் வளர மாட்டேங்கிறே?’ என்று கேட்பாள்' என்றான் யாதவ்.

''அப்புறம் என்ன ஆச்சு?' என்று படபடத்தது வண்ணத்துப்பூச்சி.

''அந்தச் சமயத்தில் ஊரிலிருந்து பாட்டி வந்திருந்தார்.சிட்டு, அவரோடு ஊருக்குச் சென்றாள். நான் நீச்சல் வகுப்பில் சேர்ந்திருந்ததால், செல்ல முடியவில்லை. 'இந்தச் செடியைப் பார்த்துக்க அண்ணா’ என்று சொல்லிவிட்டுச் சென்றாள். இதை என்ன செய்யலாம் என யோசித்தவாறு, தனியாகச் சென்றேன். அப்போது, தேன்வண்டு ஒன்று என்னைப் பார்த்தது. 'ஏன் சோகமா இருக்கே? என்று கேட்டது. நான் விஷயத்தைச் சொன்னேன்.

அந்தத் தேன்வண்டு, 'கவலைப்படாதே, எனக்குப் பூச்செடிகள் இருக்கும் இடங்கள் தெரியும். தினமும் ஒரு பூச்செடியைக் கொண்டுவந்து தருகிறேன்’ என்று சொல்லியது. அது கொடுத்த விதைகளை எடுத்துவந்து விதைத்தேன். அவை நன்றாக வளர்ந்தன. சிட்டுவும் ஊரிலிருந்து திரும்பிவிட்டாள். அவள் நட்டுவைத்த பூச்செடிதான் இத்தனை செடிகளையும் உருவாக்கியதாக நம்பினாள். தினமும் தண்ணீர் ஊற்றி, கவனமாகப் பார்த்துக்கொண்டாள். அவளால்தான் இவ்வளவு பெரிய தோட்டம் உருவாகி இருப்பதாக சந்தோஷப்படுகிறாள்'' என்றான் யாதவ்.

வண்ணத்துப்பூச்சி மேலே பார்த்தது. அதனுடன் வந்த வண்ணத்துப்பூச்சிகள் தொலைவில் சென்றுகொண்டிருந்தன. ''யாதவ், என்கூட வந்தவர்கள் சென்றுவிட்டார்கள். நானும் சென்றாக வேண்டும். நாங்கள் வெகு தொலைவில் உள்ள குறிஞ்சி மலரைப் பார்க்கச் செல்கிறோம்' என்றது.

''அற்புதமான மலரைப் பார்க்கச் செல்கிறீர்கள். எனக்கு ஒரு உதவி செய்வாயா?' என்றான் யாதவ்.

'என்ன உதவி?'

'பூக்கள் வாடும்போதெல்லாம் சிட்டு கண்கலங்குகிறாள். அவை, வாடியதும் எங்கே போகின்றன எனக் கேட்கிறாள். உனக்குத் தெரியுமா?' என்றான் யாதவ்.

'எனக்கும் தெரியவில்லை. திரும்பி வரும்போது இதற்கான பதிலோடு வருகிறேன்' எனக் கூறி பறந்துசென்றது வண்ணத்துப்பூச்சி.

யாதவ், அது சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

வண்ணத்துப்பூச்சியின் வருகைக்காக பல நாட்கள் காத்திருந்து, அதனைக் கண்டான். இந்த முறை அவனுடன் தங்கை சிட்டுவும் இருந்தாள். 'வா வண்ணத்துப்பூச்சியே, குறிஞ்சி மலரைப் பார்த்தாயா?' என்று கேட்டான்.

'ஓ, பார்த்தேன் யாதவ். உங்களுக்காக ஒரு மலரை எடுத்து வந்திருக்கிறேன். இந்த மலர், 12 வருடங்களுக்கு ஒருமுறைதான் பூக்கும்' என்றது வண்ணத்துப்பூச்சி.

'இந்த அதிசயமலரைக் கொடுத்ததற்கு நன்றி. நான் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்ததா? வாடும் பூக்கள் இறந்துபோகின்றனவா?' எனக் கேட்டான் யாதவ்.

''இல்லை யாதவ். இந்த உலகத்தில் எதுவுமே அழிவதில்லையாம். ஒன்று, மற்றொன்றாக மாறுகிறதாம். அதோ, வானத்தைப் பார் யாதவ். எவ்வளவு நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எனக்கு அந்த நட்சத்திரங்கள் எல்லாம் வானத்தில் உள்ள பூக்களாகத் தோன்றும். நான் அந்த வான்பூக்களின் மீது அமர வேண்டும் என்ற ஆசையுடன் பல இரவுகள் உறங்காமல் மேலே மேலே பறந்து செல்வேன்' என்றது வண்ணத்துப்பூச்சி.

''அதில் அமர்ந்தாயா?'' என்று கேட்டாள் சிட்டு.

'இல்லை. அது தொட்டுவிடும் தூரத்தில் இல்லை. பல முறை தோல்வியுடன் திரும்பி இருக்கிறேன்.  குறிஞ்சிப் பூக்கள் இருந்த மலையில் இருந்து பார்க்கும்போது, அந்த வான்பூக்கள் வெகு அருகில் இருப்பதுபோல தோன்றியது. உடனே, மேல் நோக்கிப் பறந்தேன். ரொம்ப தூரம் பறந்து, களைத்துப்போய்  கீழே விழுந்தேன். நல்லவேளை, நான் விழுந்தது ஒரு குறிஞ்சி மலரின் மேலே. அந்தக் குறிஞ்சி மலர், எனக்கு தேன் கொடுத்தது. 'ஏன் அவ்வளவு தொலைவு பறந்தாய்?’ என்று கேட்டது. வான்பூக்களின் மீது அமர வேண்டும் என்று கூறினேன். குறிஞ்சிப்பூ, 'நாங்களே சில நாட்களில் வான்பூக்களாக மாறிவிடுவோம்’ என்று சொன்னது. அதைக் கேட்டு நான் வியப்படைந்தேன்' என்றது வண்ணத்துப்பூச்சி.

''அப்படி என்றால், வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் பூமியில் இருந்த பூக்கள்தானா?' என்று வியந்தாள் சிட்டு.

''ஆமாம். இந்த உலகத்தில் எதுவும் அழிவது இல்லை. இனிமேல், நானும் வானத்துப் பூக்களை நோக்கிப் போக மாட்டேன். பூமியில் நான் அமரும் பூவிலேயே நட்சத்திரத்தைக் காண்பேன்' என்றது வண்ணத்துப்பூச்சி.

'இனிமேல், நானும் பூக்கள் வாடுவதற்காக வருந்த மாட்டேன். வானில் நட்சத்திரங்களைப் பார்த்து மகிழ்ச்சிகொள்வேன்' என்றாள் சிட்டு.

'சந்தோஷம்' என்றபடி பறந்துசென்றது வண்ணத்துப்பூச்சி.

அது மறையும் வரை, சந்தோஷமாகக் கையசைத்தார்கள் இருவரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick