கிராமத்தில் இருந்து ஒரு சதுரங்க ராஜா!

“சதுரங்கம் என்றதும், வசதி படைத்தவர்களின் விளையாட்டு என்ற பிம்பம் இருக்கு. ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால், யாரும் ஜெயிக்கலாம்” என்றபடி, ராஜாவை நகர்த்துகிறார் பழனிக்குமார்.

தேனி மாவட்டம், சக்கம்பட்டி கிராமம், இந்து மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் பழனிக்குமார், கிராமத்து மாணவர்களும் சதுரங்கத்தில் சாதிக்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறார்.

சதுரங்க விளையாட்டில், மாவட்ட அளவில், மூன்று தடவை முதல் பரிசு பெற்றிருக்கிறார் பழனிக்குமார். சமீபத்தில், மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி நடத்திய, ‘அகில இந்திய மாணவர் சதுரங்க விழா - 2015’ போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், முதல் பரிசாக ஒரு லட்சம் வென்றிருக்கிறார்.

“சதுரங்கத்தில் என் முதல் குரு, என்னுடைய அப்பா. அப்பாவும் அம்மாவும் நெசவுத் தொழிலாளிகள். அப்பா, ஆறாம் வகுப்புதான் படிச்சிருக்கார். பகல் முழுக்க நெசவு நெய்துவிட்டு, இரவு எட்டு மணிக்கு  என்னோடு விளையாட வருவார்.  அதிகாலை மூன்று மணி வரைக்கும் விளையாடுவோம். அப்பாவின் அந்த சலிப்பில்லாத ஊக்கம்தான் என்னை இந்த அளவுக்குக் கொண்டுவந்திருக்கு” என்று அப்பாவின் தோளில் சாய்கிறார் பழனிக்குமார்.

பழனிக்குமாரின் தந்தை மாரிமுத்து, தனது மகனை ‘அவர்... இவர்’ என்றே குறிப்பிடுகிறார். “ஆரம்பத்துல, நானும் இவரும் விடிய விடிய விளையாடுறதைப் பார்த்துட்டு, இவர் அம்மா திட்டுவாங்க. பதிலுக்கு எதுவும் பேச மாட்டோம். அடுத்தடுத்து, இவர் பல பரிசுகளை வாங்கினதைப் பார்த்த பிறகுதான், ‘ஏதோ உருப்படியா செய்றாங்க போலிருக்கு’னு பாராட்ட ஆரம்பிச்சாங்க. இப்போ, இவர் தேசிய வீரர் ஆகிட்டார். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒவ்வொரு நாளும் இவரோடு விளையாடி, நான் தோற்கும்போதெல்லாம் சந்தோஷப்படுவேன்” என்கிறார் மலர்ச்சியாக.

பழனிக்குமாரின் பள்ளித்  தலைமையாசிரியர் பழனிவாசன், “இரண்டு வருஷத்துக்கு முன்னாடிதான், ‘இவருக்கு செஸ் நல்லா வருது; அதில் ஊக்கப்படுத்தி உதவி செய்தால், நம்ம பள்ளிக்கும் பெருமை’னு உடற்கல்வி ஆசிரியர் சொன்னார். நாங்களும் பழனிக்குமாருக்கு, தேவையானதைக் கொடுத்தோம். எங்க எல்லோரின் நம்பிக்கையையும் காப்பாத்திட்டார்” என்றார் மகிழ்ச்சி பொங்க.

“சதுரங்கத்தில் கிளாசிக் (classic), ப்ளிட்ஸ் (Blitz), ராபிட் (Rapid), தரவரிசைப் பட்டியலுக்கான ஆட்டம் (Rating Tournament) என நான்கு வகைகள் இருக்கு. நான் இப்போ, முதல் மற்றும் இரண்டாவது வகையில் விளையாடிட்டு இருக்கேன். அகில இந்திய மாணவர் சதுரங்க விழாவில், 210 மாணவர்களிடையே நடந்த போட்டியில் முதல் பரிசு வாங்கியது சந்தோஷமா இருக்கு. நான் ஒவ்வொரு போட்டியையும், அதில் கிடைக்கும் வெற்றியையும் இதுதான் ஆரம்பம், இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கு.” என்கிறார் அடக்கமான புன்னகையுடன்.

ம.மாரிமுத்து

சே.சின்னத்துரை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick