நல் உணவும் நயமான பரிசும்!

ல்உணவு சாப்பிட வந்த இடத்துல இப்படி ஒரு சர்ப்ரைஸை எதிர்பார்க்கலை. எங்க திறமைக்கு நல்ல சான்ஸ் இது” எனக் குஷியாகச் சொன்னார் பவித்ரா.

சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பசுமை விகடன் - அவள் விகடன் இணைந்து, ‘நல்உணவு சிறுதானிய விருந்து’ என்ற நிகழ்ச்சியை, ஜூன் 27-ம் தேதி நடத்தியது. சிறுதானிய உணவுகளின் பெருமைகளையும், இன்றைய நவீன உணவு முறைகளில் உள்ள அபாயங்கள் பற்றியும் சொன்ன விழிப்புஉணர்வு நிகழ்ச்சி.

சிறுதானியங்களில் செய்யப்பட்ட பல்வேறு உணவு வகைகளின் விருந்து, இயற்கை உணவுப் பொருட்களின் விற்பனை அரங்குகள், புத்தர் கலைக்குழுவின் கிராமிய நடனம் என நிகழ்ச்சிகள்  களைகட்டின. இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோருடன் வந்திருந்த சுட்டிகளுக்காக, ஒரு ஜாலியான அரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தது சுட்டி விகடன். க்ரியேஷன்ஸ் செய்தல், வண்ணம் தீட்டுதல், வழி கண்டுபிடித்தல் போன்ற போட்டிகளை நடத்தி, அந்த இடத்திலேயே சான்றிதழும் பரிசும் கொடுக்கப்பட்டது.

டைனோசர் வகைகளில் ஒன்றான, ‘ட்ரைசெரடாப்ஸ்’ க்ரியேஷனை கிடுகிடுவெனச் செய்து அசத்திய பவித்ரா, “நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, ஒரிகாமி, கிராஃப்ட் என ஏதாவது செய்துட்டே இருப்பேன். க்ரியேஷன்ஸ் செய்தது புது அனுபவமா இருந்தது. இனிமே, தொடர்ந்து சுட்டி விகடன் வாங்கி, க்ரியேஷன்ஸ் செய்வேன்” என்று டைனோசரை செல்லமாக கையில் ஏந்திக்கொண்டார்.

முதலாம் வகுப்பு படிக்கும் கிறிஸ்டினா, “அம்மா, நீங்க மற்ற ஸ்டால்களைப் பார்த்துட்டு வாங்க. நான் கலரிங் பண்ணிட்டு இருக்கேன்” என்று களம் இறங்கினார். சலிக்காமல் நான்கு ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டி, ஐந்து புதிர்களுக்கு விடை கண்டுபிடித்து, அடுத்தது என்ன என ஆர்வமாக இருந்தவரை சாப்பிட அழைத்துச் சென்றார் கிறிஸ்டினாவின் அம்மா.

அம்மாவை பக்கத்தில் உட்காரவைத்து, க்ரியேஷனைச் செய்து அசத்திய சிறுவன் தேவ் பாலாஜி, “என் அப்பா அடிக்கடி கம்பு, சோளத்தில் உணவு செய்து சாப்பிடுவார். என்னையும் சாப்பிடச் சொல்வார். நான் சாப்பிடவே மாட்டேன். இங்கே வந்து பார்த்த பிறகுதான், அதன் அருமை தெரிஞ்சது. இனிமே, நானும் சிறுதானிய உணவுகளைச் சாப்பிடுவேன்’’ என்றான்.

நல்உணவுத் திருவிழாவில் நல்ல விஷயங்களைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சி ஒவ்வொரு சுட்டியின் முகத்திலும் ஒளிர்ந்தது.

யுவா

தி.ஹரிஹரன், ரா.வருண் பிரசாத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick